You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டம்: போலி செய்திகளை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை - இதுவரை 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு
இன்று (4 பிப்ரவரி 2021) வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹிரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவல் துறையில் உயர்மட்ட அளவில் அதிகாரிகளாக பணிபுரிவோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
200க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் ராஜினாமா செய்தனர் என்ற போலி செய்தியை, பழைய காணொளிக் காட்சியைக் கொண்டு பதிவிட்ட ராஜஸ்தானின் சுரு நகரை சேர்ந்த ஓம் பிரகாஷ் தேத்தர்வால் என்பவரை போலீசார் கைது செய்தனர். கிசான் அந்தோலன் ராஜஸ்தான் என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை ஓம் பிரகாஷ் தொடங்கியுள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் எடுத்த மற்றொரு மாநிலத்தின் காவல் துறை அதிகாரிகளின் பழைய காணொளி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இந்த வீடியோவை, டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து, டெல்லி காவல் துறை அதற்கு எதிர்வினையாற்றியது போல் சித்தரித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்த ஒருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி டெல்லி காவல் துறை உட்பட்ட சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
இதுபற்றி காவல் துறை கூறும்பொழுது, விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி காவல் துறை 4 எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கும்படி கூறப்பட்டு உள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு: மரணத்திற்கு காரணம் என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி பிரசூரிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
பிப்ரவரி 01-ம் தேதி சுகாதாரப் பணியாளர் மன்னு பஹான் என்பவருக்கு ராஞ்சியில் உள்ள அவரின் பணியிட மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பங்கஜ் சாஹ்னி கூறியதாவது:
ராஞ்சியில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் பணியாற்றி வந்த மன்னு பஹானுக்கு திங்களன்று அங்கேயே கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டது. மன்னு பஹான் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 52 வயதான பஹானுக்கு இணைநோய்கள் இல்லை என்றாலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், பஹான் ராஞ்சிக்கு அருகிலுள்ள ஓர்மஞ்சியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார், பிப்ரவரி 2 ஆம் தேதி கூட அவர் வேலைக்கு வந்தார் என பங்கஜ் சாஹ்னி தெரிவித்தார்.
''செவ்வாய்க்கிழமை இரவு அவர் தனது கிராமத்தில் உடல்நலம் குன்றிய பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இறந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய, மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவ வாரியத்தால் பிரேத பரிசோதனை நடத்தப்படும். பிப்ரவரி 1 ம் தேதி பஹான் உட்பட மொத்தம் 151 சுகாதார ஊழியர்களுக்கு மெடந்தா மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. பஹானுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் ஒன்பது பேர் தடுப்பூசி பெற்றனர், அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். எனவே, தடுப்பூசி காரணமாக அவர் இறந்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தடுப்பூசி காரணமாக பஹான் இறந்தார் என்று கண்டறியப்பட்டால், ஜார்க்கண்டில் இதுபோன்ற பாதிப்பு இதுவே முதலாவதாக இருக்கும்" என ஜார்க்கட் மாநிலத்தின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கான அதிகாரி டாக்டர் அஜித் பிரசாத் பிடிஐயிடம் கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
’தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட திட்டம்’: பாஜக மாநிலத் தலைவா் முருகன் புகார்
சென்னை: தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட சிலா் திட்டமிட்டுவதாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த காயத்ரி தேவி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவா் சோ.பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரவி ஆகியோர் தமிழக பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா். இதைத் தொடா்ந்து, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியது:-
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி தமிழகத்தின் 100 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். தமிழகத்தில் தொழில் வளா்ச்சி அதிகரித்துள்ளது. மேலும் தொழில் துறையை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சாலை அமைப்பு போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக மட்டுமே ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக நலனில் மிகுந்த அக்கறையுடன் மத்திய நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மீது அக்கறை கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அதனை வரவேற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்தின் நலனில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
சிறப்பான நிதிநிலை அறிக்கை என்பதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத வகையில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளாா். தமிழக பாஜகவில் அனைத்து மதத்தினரையும், அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றாகவே கருதுகிறோம்.
ஆனால், சிலா் இங்கு மதக்கலவரம் செய்யத் திட்டமிட்டுள்ளனா். அதுபோன்ற நபா்களை தமிழக காவல் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியை மிகவும் ஆபாசமாக சித்திரங்கள் வரைவது, பாஜக கூட்டங்களில் கலவரம் செய்வது போன்ற நபா்களைக் கண்டறிந்து காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எல்.முருகன் கூறியதாக அச்செய்தியில் இருக்கிறது.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- நாளை இலங்கை சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: