"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" - கனிமொழி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் காந்திசிலை அருகே இன்று (ஜனவரி 10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.
"பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், குற்றவாளிகளுக்கு அதிமுகவினருடன் உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது" என கனிமொழி பேசினார்.
பொள்ளாச்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நிர்வாகிகளோடு எடுத்துக்கொண்ட படங்களை சுட்டிக்காட்டிய கனிமொழி, "அதிமுகவுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை பாருங்கள்" என்றார்.
மேலும் பேசியவர், "அதிமுக அமைச்சர், துணை சபாநாயகர், நிர்வாகிகளுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதற்கும் தாண்டி பல பேரை காப்பாற்றவே அருளானந்தத்தை காப்பாற்ற துடிக்கின்றனர். முடிந்த அளவிற்கு இந்த விசாரணையை தடுத்து வருகின்றனர். இதை தட்டி கேட்கவில்லை என்றால், பெண்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நாதியில்லை என்ற நினைத்து விடுவார்கள்" என்று கூறினார்.
"தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால் தான் தனி நீதிமன்றம் உருவாக்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்."
"சாதி மற்றும் மதத்தின் பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். தன்னை விவசாயியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் முதல்வர் பழனிசாமியோ, இந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். தனது கட்சிக்காரர்களை பாதுகாப்பதற்காக இந்த ஆட்சி பெண்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது."
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "எந்த வழக்குகள் போட்டாலும் நாங்கள் நீதி விசாரணைக்காக போராடுவோம். யாராக இருந்தாலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் வர உள்ளது. அனைவரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம், அவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன்பு கொண்டு வருவோம்" என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்ற கனிமொழி மற்றும் திமுக உறுப்பினர்களை ஈச்சனாரி அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுகவினர் பொள்ளாச்சி நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












