புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அங்கு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான இளங்கலை, முதுகலை இறுதியாண்டு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மானவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் புதுச்சேரியில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் இன்று முதல் தொடங்கப்பட்டன. வாரத்தின் 6 நாள்களும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், பெற்றோரின் அனுமதி பெறுவதற்கான மாதிரி கடித்ததை கல்வித்துறை தயார் செய்துள்ளது.
அதில், பாடங்கள் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, அரசின் வழிகாட்டுதலின்படி எனது சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு எங்களது பிள்ளையை அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து பெற்றோர் கையெழுத்திடும் வகையில் அந்த கடிதம் உள்ளது.
இந்த கடிதத்தை பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அனுமதி பெற்று கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதே போன்று பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது என்பதால் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வரலாம் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அரசு பள்ளி மாணவர்களுக்கென இயக்கப்படும் ஒரு ரூபாய் பள்ளி பேருந்துகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் பேருந்துகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்," என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிகளுக்கு மாணவர்கள் அதிகளவில் வரும் பட்சத்தில் 1,3,5,7,9,11 ஆகிய வகுப்புகளுக்கு ஒரு நாளும் மற்றும் 2,4,6,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு ஒரு நாளும் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வகுப்புகளும் ஒருநாள் இடைவெளியில், வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்படும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு வருகை தரும் அனைவருக்கும் கட்டாய முகக் கவசம் மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை பின்பற்றப்படுகிறது. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வைக்கப்படுகின்றனர்.
பள்ளிகளில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், மாணவர்கள் கைகளைக் கழுவ கிருமி நாசினி அல்லது தண்ணீருடன் சோப் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
"பள்ளிகளுக்கு வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் விழாக்கள் ஏதும் நடத்தக் கூடாது.
தங்களது குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா தொற்று அல்லது அறிகுறி இருந்தால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்," எனக் கல்வித்துறை இயக்குநர் பி.டி.ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு செய்ய கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: எவ்வளவு தூரத்தில் உலக தயாரிப்புகள் உள்ளன?
- "கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகதியில் அனுமதி" - வல்லுநர்கள் எச்சரிக்கை
- தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு அதிகாரியை மிரட்டினாரா டிரம்ப்? - ரகசிய ஒலிப்பதிவு வெளியானதால் அதிர்ச்சி
- தமிழ்நாடு காங்கிரசில் வாரி வழங்கப்பட்ட பதவிகள்: கட்சிக்கு துணையா தொல்லையா?
- தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு
- குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












