திருப்பூர்: மயக்க நிலை சிறுமியை சாலையில் போட்ட அதிர்ச்சி சம்பவம் - போலீஸ் விசாரணை

சிறுமி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மயக்க நிலையில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமியை சாலையில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தின் அருகே இன்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.

நான்கு சக்கர வானத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண், மயக்க நிலையில் இருந்த சிறுமியை வாகனத்திலிருந்து இறக்கி சாலையில் கிடத்திவிட்டு கிளம்பிச் சென்றதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சிறுமியை உடனடியாக மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸில் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின்னர் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சிறுமிக்கு தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியை இறக்கி விட்டவர்கள் யார், அவரின் பெற்றோர் யார் என காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சிறுமிக்கு காய்ச்சல் இருப்பதால் அவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் மர்ம நபர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

சிறுமியின் முகத்தில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு உடல் ரீதியில் எவ்வித துன்புறுத்தலும் ஏற்படவில்லை எனவும், அவரின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் உடல்நிலை சீரான பின்பு அவரிடம் தகவல்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :