You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: சு.வெங்கடேசன்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், எழுத்தர் பணிக்கான தொடக்க நிலைத் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து முழு ஆய்வு செய்யவேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அமைச்சர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஆகியோருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் "இது தொடர்பாக எஸ்பிஐ அளித்திருக்கிற பதில் திருப்திகரமாக இல்லை. இது குறித்து முழு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை பணி நியமனத் தேர்வுகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக் கூடாது" என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ பணி நியமனத் தேர்வில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவது குறித்து மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஆகியோருக்கு 22.10.2020 அன்று கடிதம் எழுதியதையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் தால்வார் சந்த் கெலாட் நிதியமைச்சகத்திற்கு அக்கடிதத்தை அனுப்பி இருந்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், அந்தக் கடிதத்தை எஸ்பிஐ தலைவருக்கு அனுப்பி பதிலளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
எஸ்பிஐ வங்கியின் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு) அதற்கு பதில் எழுதி இருந்தார்.
அதில், எஸ்பிஐ வங்கி எழுத்தர் தேர்வு, தொடக்க நிலை மற்றும் இறுதி தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெறும். தொடக்க நிலைத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிடங்களைப் பொருத்து 10 மடங்கு போட்டியாளர்கள் இறுதித் தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள்.
அதனடிப்படையில் பொதுக் காலியிடங்கள் 171-க்கு 1,713 பேரும் (கட் ஆப் - 62), எஸ்.டி பிரிவினருக்கு காலியிடங்கள் 3-க்கு 30 பேர் (கட் ஆஃப் - 59.5), ஓ. பி.சி காலியிடங்கள் 106-க்கு 9,592 பேரும் (கட் ஆப் - 62), எஸ்.சி காலியிடங்கள் 74-க்கு 1,590 பேரும் (கட் ஆப் - 62) இறுதித் தேர்வுக்காக தகுதி பெற்றவர்களாக பட்டியலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது எஸ்பிஐ. ஓ.பி.சி, எஸ்.சி பிரிவுகளில் நிறைய பேர் அந்த கட் ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளதால் 10 மடங்கிற்கும் அதிகமாக முறையே 90 மடங்கு மற்றும் 21 மடங்கு அதிக தேர்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது எஸ்பிஐ.
ஆகவே இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த கடிதத்துக்கு 11 டிசம்பர் 2020 அன்று, மீண்டும் எஸ்பிஐ தலைவருக்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார் சு.வெங்கடேசன் மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர், எஸ்பிஐ வங்கியின் தலைவர் ஆகியோர்க்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில்,
"எனது கடிதத்தில் எழுப்பி இருந்த 'கேள்வி எண் 5: எத்தனை ஓ. பி சி, எஸ்.சி, எஸ்.டி, இ.டபிள்யு.எஸ் பிரிவினர் தற்போது வெளியிடப்பட்டுள்ள பொதுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்' என்பதற்கு பதில் இல்லை.
எஸ்பிஐ கொடுத்துள்ள பதில், இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டை, இப்பட்டியல் தயாரிக்கப்படுவதில் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லையோ என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது.
பொதுப் பட்டியல் தயாரிக்கப்படும் போது எல்லாப் பிரிவு போட்டியாளர்களையும் அதிக மதிப்பெண் வரிசையில் அப்பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும். பின்னர் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும். "பொது" என்பதையே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி போல ஒரு தனித் தொகுப்பாக அணுகுவது தவறு. இது பொதுப் பட்டியலிலும் இடம் பெறும் உரிமையை ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இடமிருந்து தட்டிப் பறிப்பதாகும்" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் பதில் கடிதத்திலேயே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை இறுதித் தேர்வில்தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த துவக்க நிலைத் தேர்வில் அந்த சலுகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் இருக்க வாய்ப்பே இல்லை. பொதுப் பட்டியல் என்பது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தவிர்த்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகவே இருக்க முடியும். இது விதி மீறலாகும். துவக்க நிலைத் தேர்வோ, இறுதித் தேர்வோ இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டிற்கும் ஒன்றே. அவை மாற இயலாது.
எனவே எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படை அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்கிற வரை பணி நியமனங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகராமல் இருக்க, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் வெங்கடேசன்.
இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தேவையானவற்றைச் செய்யுமாறு, கடிதம் மூலம், எஸ்பிஐ வங்கித் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார் சு.வெங்கடேசன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: