You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வந்தபோது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தபோதும், அதன் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளிலும் உணரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புரெவி புயலுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய நிவர் புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது. மத்திய உள்துறை இணைச்செயலாளர் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய இந்த குழுவினர், சென்னையில் தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சனிக்கிழமை மாலையில் ஆலோசனை நடத்துகிறார்கள். பிறகு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது நிவர் புயலுடன் சேர்த்து புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தபோது பெய்த மழையால் ஏற்பட்ட சேதத்தையும் மத்திய குழு மதிப்பீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, தாழ்வான பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலையின் வடக்குப் பகுதியைக் கடந்த பிறகு கன்னியாகுமரி, பாம்பன் அருகே வந்தபோது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக 9 மணி நேரத்துக்கும் மேலாக நிலை கொண்டது. இதனால் வட தமிழகத்தில் கன மழை அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு நிலையாக மேலும் வலுவிழந்தது. இதையடுத்து கேரளாவில் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் அபாய எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப்பெற்றுக் கொண்டது.
இயல்புவாழ்வை முடக்கிய மழை
இருந்தபோதும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் விடாமல் மழை பெய்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் கன மழை காரணமாக இயல்புவாழ்க்கை முடங்கின.
மழையின் தாக்கம் கடலோர மாவட்டமான கடலூரில் மிக அதிகமாக காணப்படுகிறது. அங்கு மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள் பிரகாரத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை நீர் சூழ்ந்தது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு சென்று தங்கிக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவுரை
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாவட்டத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மழை வெள்ள பாதிப்பு குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, "கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு மையங்கள் உட்பட 441 மையங்கள் இருக்கின்றன. அந்த அனைத்து மையங்களுக்கும் தற்போது இந்த தொடர் மழை காரணமாக மக்கள் தங்குவதற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவை இருந்தால் மேலும் 200 மையங்களை கிராமங்களிலும் பயன்பெறும் வகையில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று காலை முதல் இன்று காலை வரை சராசரியாக 20 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. அதில் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகள் அதிகபட்சமாக 35 செ.மீ வரை மழைப் பதிவாகியுள்ளது," என்று தெரிவித்தார்.
மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்பு
"நிறையச் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை தேங்குவதால் புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 300 ஜேசிபி இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்," என்றார் சாகமூரி.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மழைநீரை வெளியேற்றுவது குறித்து அதன் நிர்வாகத்துடன் மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். என்எல்சி சுரங்கங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக தெரிய வந்துள்ளதால், மழை குறைந்தவுடன் தேங்கிய நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை மழை காரணமாக இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமியும், ஒரு முதியவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரது உடல்கள், உடற் கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், "பொது மக்கள் கொரோனா பாதிப்பு பரவாமலும், வெள்ள பாதிப்பில் சிக்காமலும் இருக்க அனைவரும் பாதுகாப்பு முகாம்களுக்கு வர வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கேட்டுக் கொண்டார்.
மழைநீரில் உற்சாகமாக குளிக்கும் முதியவர்.
தொடர் மழை காரணமாக சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரில் முதியவர் ஒருவர் சோப்பு போட்டு குளியல் போடும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வடலூர் அடுத்த ஓனான்குப்பத்தில் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் காவலர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு படகு மூலம் அழைத்துச் சென்று முகாம்களில் தங்க வைக்கின்றனர்.
இரவு வீசிய சூறைக்காற்றால் பலத்த சேதம்
ராமேஸ்வரம் குந்துகால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பலத்த சேதம் அடைந்தன.
பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தெற்கு பகுதியில் உள்ள குந்துகால் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்துமாறு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்ததயடுத்து மீனவர்கள் பாம்பன் தூக்கு பாலம் வழியாக விசைபடகுகளை வடக்கு கடற்கரையில் இருந்து தெற்கு கடல் பகுதியில் உள்ள குந்துகால் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று மற்றும் மழை பெய்து வருவதால் நேற்று இரவு பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து குந்துகால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ம நாட்டுப் படகுகளும் 60க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நங்கூரம் கயிறு அறுந்து ஒன்றோடு ஒன்றுமோதி படகுகள் சேதம் அடைந்து கரை ஒதுங்கின.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சகாயம் கூறுகையில் "ராமேஸ்வரத்தில் நிறுத்தி இருந்த படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது.ஆனால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் படகுகளை குந்துகால் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு படகுகள் அனைத்தும் குந்துகால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன" என்று கூறினார்.
"சூறைக்காற்றால் அந்த படகுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதற்கு முழு பொறுப்பு மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும். உடனடியாக மாவட்ட மீன் வளத்துறையினர் பாதிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என சகாயம் கோரிக்கை வைத்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி ஆலோசனை: மோதியின் இந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா
- ஆஸ்திரேலியா–இந்தியா டி20: முதல் போட்டியில் வெற்றியை பதித்த இந்திய அணி
- விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு
- "இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?"
- நடராஜனின் மறுபக்கம்: வறுமையின் பிடியில் "அந்த 15 ஆண்டுகள்"
- இந்திய ஆசிரியருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு: இப்படி கூட செய்வாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: