You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் இதுவரை விளையாட முடியாமல் இருப்பது ஏன்?
- எழுதியவர், கௌதம் பட்டாச்சார்யா
- பதவி, விளையாட்டு எழுத்தாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இந்தியா எப்போதாவது ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடுமா?
இது, பல ஆண்டுகளாக இந்திய கால்பந்து ரசிகர்கள் கேட்டு வரும் கேள்வி. "உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா" என்று அழைக்கப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இந்தக் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
'ப்ளூ டைகர்ஸ்' என்று அழைக்கப்படும் இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை உன்னிப்பாகக் கவனித்து வருவோருக்கு, இந்தக் கேள்வி ஒரு சலிப்பூட்டும் வழக்கமான விஷமாகிவிட்டது.
அதற்கான காரணம் எளிமையானது" ஆசிய மண்டலத்திற்கான ஆரம்பக்கட்ட தகுதிச் சுற்றுகளைத் தாண்டி, உலகக் கோப்பைக்குச் செல்லும் வாய்ப்பை இந்தியா இதுவரை ஒருமுறைகூடப் பெறவில்லை.
அதேவேளையில், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடும் உள்ளது. இந்தியா ஒருமுறைகூட ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடியதில்லை என்றாலும், மேற்கு வங்கம், கேரளம், கோவா போன்ற கால்பந்து மீது ஆர்வமுள்ள மாநிலங்களில் இந்தப் போட்டி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பல்வேறு சர்வதேச அணிகளை ஆர்வத்துடன் ஆதரிப்பதுடன், ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் கவனிக்கிறார்கள்.
இந்தியா இந்தத் தொடரில் பங்கேற்காத போதிலும், செய்திகளை நேரடியாக வழங்குவதற்காக உலகக் கோப்பை நடக்கும் இடத்திற்குச் செல்லும் இந்திய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கால்பந்து மீதான ஆர்வம் இந்தியாவில் வளர்ந்து வருவதற்கான மற்றொரு சான்றாக உள்ளது.
நான்கு உலகக் கோப்பை போட்டிகளை நேரில் சென்று அவதானித்து செய்தி வெளியிட்ட மூத்த இந்திய கால்பந்து பத்திரிகையாளர் ஒருவர், இந்தச் சூழலை நகைச்சுவையுடன் விவரித்தார். "இந்தியா கால்பந்து விளையாடுகிறதா என்ற கேள்வியை மைதானத்தின் பத்திரிகையாளர் அரங்கில் நாங்கள் அடிக்கடி எதிர்கொள்கிறோம். பெரும்பாலானோருக்கு நம்மை கிரிக்கெட் விளையாடும் நாடாகத்தான் தெரியும்" என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் ஒரே பெரிய நாடு இந்தியா மட்டுமல்ல. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவும், உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது.
இருப்பினும், இந்தியா, சீனா போன்ற மிகப்பெரிய சந்தைகளின் முக்கியத்துவத்தை ஃபிஃபா உணர்ந்தே இருக்கிறது. இதன் காரணமாக, நாட்டின் கால்பந்து ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் பார்க்கும் வகையில், கடைசி நேரத்தில் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக ஃபிஃபா ஒரு மூத்த ஊடக உரிமைக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது.
இவையெல்லாம் நம்மை மீண்டும் அதே கேள்விக்கு இட்டுச் செல்கின்றன: ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவது இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே நீடிக்குமா, அல்லது ஒரு நாள் கால்பந்தின் மிகப்பெரிய மேடைக்கு அதனால் செல்ல முடியுமா?
இந்திய கால்பந்து உலகின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியா, இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்பது சாத்தியமே என்று நம்புகிறார். இருப்பினும், அந்த இலக்கை அடைய குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்கிறார் அவர்.
இந்தியாவின் வாய்ப்புகள் குறித்துப் பேசிய பூட்டியா, "ஆம், இந்தியா நிச்சயமாக உலகக் கோப்பையில் விளையாட முடியும். ஏனெனில், எதுவும் சாத்தியமற்றதல்ல. 48 அணிகள் பங்கேற்கும் புதிய உலகக் கோப்பை வடிவத்தில், ஆசியாவில் இருந்து தகுதி பெறும் அணிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இந்த முறை உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற நாடுகள்கூட தகுதி பெற்றுள்ளன.
அதேவேளையில், இராக் அணியும் கண்டங்களுக்கு இடையிலான பிளே-ஆஃப் (intercontinental play-offs) சுற்றின் மூலம் இடம் பிடித்துள்ளது. எனவே, இந்தியாவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் இதற்குப் பெருமளவு கடின உழைப்பு தேவைப்படும்," என்று கூறினார்.
இந்தியாவை போன்ற ஒரு பெரிய நாட்டில் கால்பந்து திறமைக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்பதையும் பூட்டியா சுட்டிக்காட்டினார். அவரைப் பொறுத்தவரை, உண்மையான சிக்கல் வேறு இடத்தில் உள்ளது.
"இந்தியாவுக்கு தேவைப்படுவது சரியான கால்பந்து சூழலியல்தான்" என்று கூறும் அவர், "நீண்ட கால தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முறையான அடித்தள மேம்பாட்டுத் திட்டம் நம்மிடம் இன்னும் இல்லை. கால்பந்து உலகின் மிகவும் பிரபலமான குழு விளையாட்டாக இருந்தாலும், ஒரு வலுவான கால்பந்து கலாசாரத்தை உருவாக்க நேரம் எடுக்கும். அடித்தள நிலையில் நாம் சரியாக முதலீடு செய்தால், முடிவுகள் ஒரே இரவில் கிடைக்காவிட்டாலும், காலப்போக்கில் அதன் பலன்களை நிச்சயமாக அறுவடை செய்யலாம்," என்றார்.
கடந்த 1970ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல உதவிய மற்றொரு முன்னாள் நட்சத்திர வீரரான ஷியாம் தாப்பாவும், அடித்தள நிலையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போது 78 வயதாகும் இந்த முன்னாள் ஸ்டிரைக்கர், "சிறு வயதில் இருந்தே அதிக குழந்தைகளை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்துவதுதான் இந்தியாவின் எதிர்கால வெற்றிக்கு முக்கியமானது" என்றார்.
தற்போதைய நிலைமை குறித்துப் பேசும்போது தாப்பாவின் குரலில் வெளிப்படையான ஏமாற்றம் தெரிந்தது. தனது விளையாட்டு நாட்களில் அற்புதமான 'பைசைக்கிள்-கிக்' கோல்களை அடிப்பதில் புகழ்பெற்ற அவர், நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளை கால்பந்துக்கு பதிலாக கிரிக்கெட் விளையாடவே ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்டார்.
"ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நல்ல வருமானம் தரும் ஒப்பந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிரிக்கெட் பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். கால்பந்திலும் ஒரு சிறந்த தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், இதிலும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, "நான் பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கான கால்பந்து அகாடெமியை நடத்தி வருகிறேன். என் அனுபவத்தில் இருந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எவ்வளவு அதிகமான குழந்தைகள் கால்பந்து விளையாடுகிறார்களோ, அவ்வளவு அதிகமாகத் திறமையான வீரர்களைக் கண்டறியும் வாய்ப்புகள் அமையும். ஆனால், அதிக குழந்தைகளைத் தொடர்ந்து இந்த விளையாட்டிற்குள் கொண்டு வரும் ஓர் அமைப்பை உருவாக்க அகில இந்திய கால்பந்து சம்மேளனம் என்ன செய்துள்ளது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தாப்பாவின் வாதம் எளிமையானது: "இந்தியா ஒரு நாள் ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதிபெற விரும்பினால், முதலில் அதிக இளம் வீரர்களை ஈர்த்தல், பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், நாடு முழுவதும் முறையான கால்பந்து மேம்பாட்டு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும்."
இந்த ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற ஆசியாவின் ஒன்பது அணிகளை உற்றுநோக்கும்போது, இந்தியாவுக்கு முன்புள்ள பாதை எவ்வளவு கடினமானது என்பது தெளிவாகிறது.
உலகக் கோப்பையில் இடம்பிடித்த ஒன்பது அணிகள்: ஆஸ்திரேலியா, இரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், கத்தார், சௌதி அரேபியா, இராக். இதில் இராக் அணி, கண்டங்களுக்கு இடையிலான பிளே-ஆஃப் சுற்றின் மூலம் தகுதி பெற்றது. இந்த அணிகளில், ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தங்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
சுவாரஸ்யமாக, முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற இந்த இரண்டு அணிகள்கூட, சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் இந்தியாவை விட மிகவும் உயர்ந்த இடத்திலேயே உள்ளன.
தற்போது, உஸ்பெகிஸ்தான் உலகளவில் 52வது இடத்திலும், ஜோர்டான் 63வது இடத்திலும் உள்ளன. அதேவேளையில், கடந்த 18 மாதங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவு காரணமாக இந்தியா 136வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆசியாவின் முன்னணி கால்பந்து நாடுகளுடன் தொடர்ந்து போட்டியிடும் நிலையை அடைய, இந்திய கால்பந்து துறை இன்னும் கடக்க வேண்டிய தூரம் நீளமானதாக இருப்பதையும், மிகப்பெரிய இடைவெளி நிலவுவதையும் இந்தத் தரவரிசைகள் காட்டுகின்றன.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் கால்பந்து வீரரான கல்யாண் சௌபே, 2022இல் அந்தப் பொறுப்பை ஏற்ற பிறகு இந்த சவால் குறித்துப் பேசினார்.
அப்போது அவர், "எட்டு ஆண்டுகளில் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடும் என்று நான் பொய்யான கனவுகளை விற்க மாட்டேன். அதற்குப் பதிலாக, இந்திய கால்பந்தின் தற்போதைய நிலையில் இருந்து அதை மேம்படுத்துவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றுதான் கூறுவேன்" என்று தெரிவித்தார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கல்யாண் சௌபேவின் நிர்வாகம் இந்திய கால்பந்தை மேம்படுத்துவதில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளதா என்பதுதான் முக்கியக் கேள்வியாக உள்ளது.
இந்திய கால்பந்து விரைவாக முன்னேற உதவுவதற்குப் பதிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நற்பெயர் பாதிக்கப்பட்டு இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். முன்னேற்றத்திற்குப் பதிலாக, இந்தச் சம்மேளனம் அடிக்கடி விமர்சனங்களுக்கும் தர்மசங்கடமான சூழல்களுக்கும் உள்ளாகி வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கிளப் அடிப்படையிலான உள்நாட்டு கால்பந்து தொடரான, 'இந்தியன் சூப்பர் லீக்' தொடங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் தொடர், பெரிய வணிகக் குழுக்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்தது. இது தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்பட்டதுன், பல திறமையான வெளிநாட்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
இருப்பினும், இந்தியன் சூப்பர் லீக்கின் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாக உள்ளது. வணிக ரீதியான கூட்டாளராகச் செயல்பட எந்த நிறுவனமும் முன்வராததால், சமீபத்திய இந்தியன் சூப்பர் லீக் சீசன் பெரிதும் தாமதமானது. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கால்பந்து வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்துக் கவலையடைந்தனர். இந்தச் சூழ்நிலை இந்திய கால்பந்துக்கு அதிகளவிலான எதிர்மறையான விளம்பரத்தையும் ஏற்படுத்தியது.
இறுதியில், வணிகக் கூட்டாளர் எவருமின்றி இந்தத் தொடரின் சுருக்கப்பட்ட வடிவத்தை நடத்துவதைத் தவிர சம்மேளனத்திற்கு வேறு வழியில்லாமல் போனது. தற்போது அது மீண்டும் திட்டமிடல் கட்டத்திற்குத் திரும்பியுள்ளதுடன், அடுத்த சீசனை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.
இந்தச் சூழலில், 35 மில்லியன் குழந்தைகளை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்துவதாக உறுதியளித்த கல்யாண் சௌபேவின் 'விஷன் 2047' திட்டம், இப்போது பலருக்கும் மறக்கப்பட்ட ஒரு தேர்தல் வாக்குறுதியைப் போலவே தோன்றுகிறது.
சம்மேளனம் அறிவித்த லட்சிய இலக்குகளுக்கும், களத்தில் காணப்பட்ட முடிவுகளுக்கும் இடையிலான இடைவெளி மேன்மேலும் வெளிப்படையாகத் தெரிகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஒரு குறுகிய காலத்திற்கு நம்பிக்கை தரும் சூழல் நிலவியது. அந்த ஆண்டில், அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு தொடர், தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் (SAFF Championship) ஆகியவற்றில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபாவின் முதல் 100 இடங்களுக்குள் மீண்டும் முன்னேறியது.
ஆனால் அதன்பிறகு, அந்த முன்னேற்றத்தின் பெரும்பகுதி மறைந்துவிட்டது.
வரலாற்றிலேயே முதல் முறையாக 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையை அந்த அணி ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இறுதியில் இந்தியா தகுதி பெறத் தவறியது.
ஏமாற்றம் அதோடு முடியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்கான தகுதிச் சுற்றிலும் இந்திய ஆடவர் அணி மோசமாகச் செயல்பட்டதுடன், இந்தத் தொடரிலும் இடம்பிடிக்கத் தவறியது.
எளிதாகக் கூறுவதெனில், 2023இல் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படிருந்தபோதிலும், இந்திய கால்பந்து துறை அந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமங்களைச் சந்தித்துள்ளது. இந்தியன் சூப்பர் லீக் தொடர்பான சிக்கல்கள், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உள்ளே நிலவும் நிர்வாகச் சவால்கள், சர்வதேச அரங்கில் ஏமாற்றமளிக்கும் முடிவுகள் ஆகியவை, இந்திய கால்பந்து உண்மையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேகத்தில் முன்னேறி வருகிறதா இல்லையா என்ற கேள்வியைப் பலரிடையே எழுப்பியுள்ளது.
ஆசியாவின் சிறந்த 24 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பையில் இடம்பிடிப்பதே, இந்திய கால்பது அணியின் தற்போதைய மிக முக்கியமான குறுகிய கால இலக்கு.
சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களுடனான ஒரு சந்திப்பில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி (2025இல் ஓய்வில் இருந்து மீண்டும் திரும்பியவர்), இந்திய கால்பந்து அணி வெகுதூரம் கனவு காண்பதை விடுத்து, எட்டக்கூடிய எதார்த்தமான இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது, "நாம் படிப்படியாக முன்னேற வேண்டும். தற்போது, ஒவ்வொரு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசிய கோப்பைத் தொடருக்கும் தகுதி பெறுவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஆசிய கோப்பையில் தொடர்ந்து விளையாடுவது, வலிமையான அணிகளுக்கு எதிராகப் போட்டியிடவும் நமது தரத்தை உயர்த்தவும் உதவும். ஆசியாவின் முதல் 15 முதல் 20 இடங்களுக்குள் ஓர் அணியாக நம்மை நிலைநிறுத்திக் கொண்ட பிறகுதான், ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவது குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய சூழல் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அப்படியிருந்தும், 'இந்திய வம்சாவளி வெளிநாட்டினர்' அட்டை வைத்திருப்போர் இந்திய தேசிய அணிக்காக விளையாடுவதை அனுமதிக்கும் வகையிலான கொள்கை மாற்றத்தை மேற்கொள்ள, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைமை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய நிலையில், வெளிநாட்டு பாஸ்போர் வைத்திருக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், தங்கள் வெளிநாட்டு குடியுரிமையை அல்லது பாஸ்போர்ட்டை துறக்க வேண்டியுள்ளது. ரியான் வில்லியம்ஸ் இதற்கான ஒரு சமீபத்திய உதாரணம். அவர் இந்திய அணிக்காக விளையாடுவதற்காகத் தனது வெளிநாட்டு குடியுரிமையைக் கைவிட்டார். தேசிய அணியில் இணைந்த பிறகு, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் தனது திறமையை விரைவாக நிரூபித்தார்.
'இந்திய வம்சாவளி வெளிநாட்டினர்' அட்டை வைத்திருப்போரை இந்திய அணிக்காக விளையாட அனுமதிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டால், அது தேசிய அணியை கணிசமாக வலுப்படுத்தும் என்று பலர் நம்புகின்றனர்.
இந்த உலகக் கோப்பையிலேயே, கத்தார் அணிக்காக தஹ்சின் முகமது, ஆஸ்திரேலியாவுக்காக நிஷான் வேலுப்பிள்ளை, நியூசிலாந்துக்காக சர்ப்ரீத் சிங், காங்கோ அணிக்காக சாமுவேல் மௌட்டூசாமி ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பிற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ஆனால், தற்போதைக்கு இவையனைத்தும் வெறும் சாத்தியக் கூறுகளாகவே உள்ளன, இன்னும் எதார்த்தமாக மாறவில்லை.
முக்கியமான மாற்றங்கள் நிகழும் வரை, இந்திய கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பையைத் தொலைவில் இருந்து வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருப்பார்கள். லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோம், நெய்மர் போன்ற உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள். அதே வேளையில், இந்தியா அடைய விரும்பும் இலக்கை ஏற்கெனவே அடைந்துள்ள நாடுகளையும் அவர்கள் பாராட்டுவார்கள்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம், குராசாவோ நாடு. ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதிலேயே இதுதான் மிகச் சிறிய நாடு. எனவே, பல இந்திய கால்பந்து ரசிகர்களின் மனதிலும் அதே கேள்வி தொடர்ந்து நீடிக்கிறது. அது,
குராசாவோவால் உலகக் கோப்பைக்குத் தகுதிபெற முடியுமெனில், இந்தியாவால் முடியாதா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு