நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை

பிரசுரிக்கப்பட்டது

கடலூரில் நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி கடலூர் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்தார்.

புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் தங்கவைக்க உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட்டார். இது குறித்து பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 19 மண்டலங்களில் குழுக்கள் பணியில் இருக்கின்றனர். இதில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள், குடிசை மற்றும் பலவீனமான வீடுகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து, விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆட்டோ மற்றும் தண்டோரா மூலமாக அறிவிப்புகள் வழங்கி வருகிறோம்" என்று தெரிவித்தார். குறிப்பாக 21ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட காரணத்தினால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. அனைத்து தரப்பு மீன் படகு மற்றும் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுப் பாதுகாப்பாக இருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

புயல் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 164 ஜென்செட்டுகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மணல் மூட்டைகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் மாவட்டத்தில் கடற்கரை உள்ளிட பல்வேறு பகுதிகளில் மண்டல அதிகாரிகளுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவானது 6 குழுக்களாக 126 பேர் கடலூர் மாவட்டத்திற்கு‌ வந்துள்ளனர். இதில் மூன்று குழு கடலூர் மாவட்டத்திலும், மீதும் மூன்று குழுவைச் சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டையில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்துமாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தாழ்வான பகுதிகளில் உள்ள 120 குடும்பங்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம். மேலும் விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலிருந்த 100 குடும்பங்களை முகாமில் தங்க ஏற்பாடு செய்துள்ளோம். தாழ்வான பகுதிகளில் மட்டுமில்லாமல் பலவீனமான வீடுகளில் வசிக்கும் மக்களையும் கணக்கெடுக்கும் பணி நேற்று(நவம்பர் 22) முதல் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களையும் பாதுகாப்பாகத் தங்க ஏற்பாடு செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

"மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மண்டல அதிகாரிகள் அனைவரும் தற்போது முன்னெச்சரிக்கை கருதி தயார் நிலையில் இருக்கின்றனர். மக்களைப் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்படும் முகாம்களில் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது. ஆகவே அதிகாரிகள் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு மக்கள் கொடுக்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி கேட்டுக் கொண்டார்.கடலூர் மாவட்டத்தில் 3240 முதல்கட்டமாக முதலுதவி செய்ய மீட்பு வீரர்கள் பணியில் உள்ளனர். உயிர் சேதம் எந்த விதத்திலும் ஏற்படாமல் இருக்கவும் பயிர் சேதத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, டெல்டா மற்றும் மற்ற விவசாய பகுதிகளில் பயிர் காப்பீடு செய்ய திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 278 இருக்கின்றன. இதில் 90 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாப்பாகத் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப மண்டல அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அங்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :