You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பு: டெல்லியில் முக கவசம் அணிய தவறினால் அபராதம் ரூ.2,000
(இன்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
முக கவசம் அணியாவிட்டால், முன்பு 500 ரூபாயாக இருந்து வந்த அபராத தொகையை, நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை) 2,000 ரூபாயாக டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதோடு தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில், 80% ஐசியூ படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் கூறியுள்ளார். இது நவம்பர் 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதே போல, தனியார் மருத்துவமனைகளில், ஐசியூ அல்லாத சாதாரண படுக்கைகளில், முன்பு 50 சதவிகிதம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொண்டு இருந்ததை, தற்போது 60 சதவிகிதமாக அதிகரிக்குமாறும் டெல்லி அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி: அதாா் பூனாவாலா
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரிட்டனின் அஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், இந்த தடுப்பூசியை தயாரிக்கும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா வியாழக்கிழமை கூறியதாவது:
முதலாவதாக, மருத்துவ பணியாளா்கள், முதியவா்களுக்கு வரும் பிப்ரவரிக்குள் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். அதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு 2 அல்லது 3 ஆண்டுகளாகலாம். தடுப்பூசி தயாரிப்பு, அவற்றை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்வது, மக்களுக்கு விநியோகிப்பது ஆகியவற்றால் கால தாமதம் ஆகலாம். அதுமட்டுமன்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டும். எனவே, தோராயமாக, வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். இரண்டு வேளை கொரோனா தடுப்பூசிக்கான மருந்தின் விலை ரூ.1,000-ஆக இருக்கும். இந்த தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் அவர் கூறியிருப்பதாக குறிப்பிடுகிறது தினமணி நாளிதழ்.
செளதியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, மொத்த எண்ணிக்கை 3,54,527 ஆக உயர்வு
செளதியில் கடந்த 24 மணி நேரத்தில் 319 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,527 ஆக அதிகரித்துள்ளது என இந்து தமிழ் திசை வலைதளம் குறிப்பிடுகிறது.
இதுகுறித்து செளதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், "செளவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 319 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை சவுதியில் 3,54,527 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,729 பேர் பலியாகி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த செளதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனிதப் பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகை அன்று கூட, மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் செளதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது எனக் கூறுகிறது இந்து தமிழ் திசை.
ஹஃபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த பாகிஸ்தான்
மும்பை தீவிரவாத தாக்குதலில் சூத்திரதாரியாக இருந்த, ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு, நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது, தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நீதிமன்றம் (Anti Terrorism Court) என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த இரண்டு கூடுதல் வழக்குகள் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது எனக் கூறுகிறது இந்து.
சமீபத்தில் தான், Financial Action Task Force என்கிற அமைப்பு, பிப்ரவரி 2021 வரை, பாகிஸ்தானை க்ரே லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வைத்திருப்பதாக அறிவித்தது. இந்த அமைப்பில் 6 விஷயங்களை பாகிஸ்தான் செய்யவில்லை என்பதால் க்ரே லிஸ்டில் தொடர்கிறது. இதில் இந்தியா தேடும் முக்கிய தீவிரவாதிகளான சயீத் மற்றும் மெளலானா மசூத் ஆசார் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அடக்கம்.
பாகிஸ்தான் க்ரே லிஸ்டில் வைக்கப்பட்டதாக, அறிவிப்புகள் வெளியான, சில வாரங்களுக்குப் பிறகு தான், சயீத்துக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது என்று தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- "தமிழ்நாடு எம்.பி.க்கு இந்தியில் பதில் தருவது விதி மீறல்" அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்
- வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல விருப்பமா? இதற்கு நீங்கள் தயாரா? மாறுபட்ட பயண அனுபவம்
- பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பிகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: