You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை - பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவைத் தரும் வட கிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று துவங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக திங்கட்கிழமையன்று தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் மிக கன மழையும் 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 17 சென்டி மீட்டர் மழையும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையிலும் மதுரையிலும் நான்கு முதல் ஆறு சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் மாலத்தீவு முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரையுள்ள பகுதிகளிலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்துவரும் இரு நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் அனேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் இதன் காரணமாக, குமரிக்கடல், மாலத் தீவுகள், லட்சத் தீவுகள், கேரள கடற்கரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்றானது மணிக்கு 45 கி.மீ. - 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் மீனவர்கள், இந்தப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
திங்கட்கிழமையன்று பெய்த கனமழையின் காரணமாக, தாம்பரம், முடிச்சூர் போன்ற சென்னையின் தென் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா?
2015ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலும் சென்னையைச் சுற்றியிலும் அவ்வப்போது மழை பெய்ததால், மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திடீரெனத் திறக்கப்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
ஆனால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள். இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24.0 அடியாக உள்ளது. அதன் முழு உயரம், 21.13 அடி. அதன் மொத்தக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது 2889 மில்லியன் கன அடியே அங்கு நீர் இருப்பு உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 79 சதவீதம்தான். அந்த ஏரிக்கான நீர்வரத்து 1,086 கன அடியாக மட்டுமே உள்ளது.
இன்னும் மூன்று அடிக்கு மேல் நீர் நிரம்ப வேண்டிய நிலையில், இப்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க வேண்டிய அவசியமே ஏற்படாது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய மழையில் 47.32 சதவீத மழை இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்தான் கிடைக்கிறது. இந்த ஆண்டு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி துவங்கிய நிலையில், நவம்பர் 16ஆம் தேதிக்குள் 287.9 மில்லி மீட்டர். ஆனால், 180.7 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது இயல்பான அளவைவிட 37 மி.மீட்டர் குறைவாகும்.
சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவும் 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: