பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் - 10 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பி.எஸ்.எல்.வி.சி - 49 ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.சி - 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.02 மணிக்கு இது விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை நிலவரம் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.-01 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக இ.ஓ.எஸ்.-01 எனப்படும் இந்தியாவுக்கு சொந்தமான செயற்கைகோளானது விண்வெளியில் இருந்தபடி, நாட்டின் விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவற்றை சார்ந்த கண்காணிப்பு பணிகளுக்கு உதவுமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது இந்தியாவின் 51-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் செயற்கைக்கோளுடன் லிதுவேனியா நாட்டின் ஒரு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு தொலையுணர்வு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையோ, பி.எஸ்.எல்.வி சி-49 ரக ராக்கெட் ஏவப்பட்டது குறித்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சிவன், பிற துறைகளைப் போல வீட்டில் இருந்தபடி எங்களால் வேலை செய்ய முடியாது. இந்த திட்டத்துக்காக கொரோனா பெருந்தொற்று தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் திட்டத்தில் தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து பங்கெடுத்தார்கள். அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும் பின்பற்றினார்கள். அவர்களின் கடுமையான உழைப்பு காரணமாகவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

சாத்தான்குளம் காவல்துறையினர் மீதான மூன்று வழக்குகளில் இடைக்கால அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் ராஜாசிங் , மகேந்திரன் வழக்கில் சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதேபோல் தட்டார்மடம் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போனதாக கூறப்படும் செல்வன் என்பவரது வழக்கிலும் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில்

இதுவரை சிபிஐ 105 நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மற்ற மூவரின் வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

இந்த வழக்கையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்காணித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (சனிக்கிழமை) சமர்பித்தது.

இதேபோல் சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கும் வரும் 11ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் சேர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த குயில்தாசன் - அற்புதம் அம்மாள் மகனான இவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.

இந்நிலையில் பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன் ஜோலார்ப்பேட்டையில் உள்ள தமது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் வந்து மரகதம் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

ஏற்கெனவே, சிறுநீர்ப் பாதை தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த பேரறிவாளன் அது தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

அவருடன் அவரது தாய் அற்புதம் அம்மாளும் விழுப்புரம் வந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: