You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாஜ்மஹால்: 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு - ஜோடிகளுக்கு புதிய கட்டுப்பாடு
பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தாஜ் மஹால் இன்று திறக்கப்பட்டபோதும் அதை காண சுற்றுலாவாசிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
வழக்கமாக இங்கு உள்ளே நுழையும் அனுமதிச்சீட்டு பெறுவதற்கு, சுற்றுலா பார்வையாளர்களின் வரிசை நீண்டு காணப்படும். ஆனால், கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு இந்த இடம் திறக்கப்படும் என அறிவிக்கும் விளம்பரங்கள் பரவலாக செய்யப்பட்டபோதும், அவை சுற்றுலாவாசிகளை கவரவில்லை.
காலை முதல் தாஜ் மஹால் வாயிலில் சுற்றுலா பார்வையாளர்களை எதிர்பார்த்து உயரதிகாரிகள் காத்திருக்கும் அளவுக்கு அங்கு பார்வையாளர் நிலைமை குறைந்திருந்தது.
பொது முடக்க கட்டுப்பாடுகளின் அங்கமாக, தாஜ் மஹாலுக்கு உள்ளே குழு புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாஜ் மஹாலுக்குள் நுழையும் முன்பே அனைவரது உடல் வெப்ப பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்படுகிறது.
காதல் சின்னத்தின் அடையாளமாக மும்தாஜுக்காக தாஜ் மஹாலை மொகலாய பேரரசர் ஷாஜகான் எழுப்பினார்.
இருப்பினும், வைரஸ் பரவல் காரணமாக ஜோடிகள் ஒன்றாக கைகோர்த்து நடக்கவும், தனிமையில் பூங்காக்களில் அமரவும் கட்டுப்பாடு உள்ளதால், முதல் நாளன்றே ஜோடிகளின் வருகை அவ்வளவாக இல்லை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 17 முதல் தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக தாஜ் மஹால் மூடப்பட்டிருந்தது. இருந்தபோதும், அதன் இரு புறமும் உள்ள தோட்டங்கள், பூங்காக்கள், புல்தரைகள், நீரூற்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டதாக தொல்லியல் துறை உதவி பராமரிப்பாளர் என். குப்தா தெரிவித்தார்.
இதற்கிடையே, "ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதியில்லை என்றும் அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கப்படுவது கட்டாயம்" என்றும் ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு என். சிங் கூறியுள்ளார்.
தாஜ் மஹாலை பார்வையிட வரும் சுற்றுலாவாசிகள் இரு பிரிவினராக பிரிக்கப்படுவார்கள். முதல் பிரிவு, உணவு இடைவேளைக்கு முன்பு வரும் பார்வையாளர்கள் என்றும் இரண்டாவது பிரிவு, உணவு இடைவேளைக்குப் பிந்தைய பார்வையாளர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சமாக 2,500 பார்வையாளர்கள் என நாளொன்றுக்கு 5 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ஆயிரத்தை கூட கடக்காத அளவுக்கே இன்றைய பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்தது.
அங்கு உள் வளாக பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று இந்திய தொல்லியல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
- உலகின் முதலாவது நோய்த்தொற்று தடுப்பு மருந்துக்கு மாடலாக இருந்த இந்திய ராணிகள்
- சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை இந்தியாவின் புதிய கூட்டணியால் எதிர்க்க முடியுமா?
- `தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை
- விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்
- 'சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர்': விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: