You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரெம்டிசிவிர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்புக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய சிப்லா மற்றும் ஹெட்ரோ ஆகிய இரண்டு முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மிக அவசர தேவைக்காக மட்டும் இந்த கொரோனா எதிர்ப்பு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விரைவில் இந்தியாவிலே இந்த மருந்துக்கான உற்பத்தி துவங்க உள்ளது.
கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு இந்த மருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளுக்கு அவசரநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்தினை அளிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிசிவிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்தது.
சிப்லா லிமிடட், பெரோஸான்ஸ் லேபரட்டரிஸ், ஹெட்ரோ லேப்ஸ், ஜூபிலியன்ட் லைஃப் சயின்சஸ், மற்றும் மைலன் ஆகிய நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தியை துவங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
இந்தியாவை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்திடமிருந்து ரெம்டிசிவிர் மருந்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைப் பெற்று, இந்தியவில் மருந்தை தயாரிக்கும். இதன் மூலம் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் அளவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ரெம்டிசிவிர் மருந்து கொரோனா வைரஸ் தொற்று உண்டானால், அதன் அறிகுறிகள் தென்படும் காலத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாகக் குறைக்கிறது என்று உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.ரெம்டிசீவர் இபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல் முதலில் உருவாக்கப்பட்டது.
’’ரெம்டிசிவிர் இன்னமும் பரிசோதனையில் இருக்கிற ஒரு மருந்து. நாட்டில் கோவிட்-19 நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்நோய் தாக்கியவர்களுக்கு அவசரகாலத் தேவைக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்தினை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் படிவத்தை குறிப்பிட்ட முறையில் நோயாளி நிரப்பிய பிறகே மருத்துவர்கள் இந்த மருந்தினைப் பயன்படுத்த முடியும். இந்தியாவில் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு பயன்படுத்தப்படும் முதல் மருந்து இதுதான்’’ என ஒரு மூத்த அரசு அலுவலர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
அதே போல க்ளேன் மார்க் எனும் மருந்து நிறுவனம், கொரோனா எதிர்ப்பு மருந்தான ஃபவிபிராவிர் மருந்தை உற்பத்தி செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று (சனிக்கிழமை) அனுமதி அளித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: