சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளை எந்த வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும்? நீடிக்கும் குழப்பம்

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"வயதை காரணம் காட்டி என் பிள்ளையை மீண்டும் ஒரே வகுப்பில் படிப்பதற்கு கட்டணம் செலுத்தும் அளவு எனது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை."

ஜூலை மாதம் பிறந்ததால் வயதை காரணம் காட்டி மீண்டும் அதே வகுப்பில் படிக்க அறிவுறுத்திய பள்ளியில் இருந்து தன் பிள்ளையை மாற்று பள்ளியில் சேர்த்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனா சொன்ன வார்த்தைகள் இவை.

குழந்தைகளை புதிதாக பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் பலர் இது போன்ற சிக்கலான சூழலை எதிர்கொள்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் வயதை 6 என, மத்திய அரசு நிர்ணயித்திருப்பதே இந்த குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.

இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கவில்லை என்றால் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும்போது சிக்கலை சந்திக்க நேரிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

கோடை விடுமுறை முடிந்து இம்மாதம் தொடக்கத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் 2026-2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் முதலில் கேட்பது குழந்தைகளின் வயதைதான், அதனை வைத்துதான் அவர்கள் எந்த வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது.

மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக குழந்தைகள் 3 வயதை பூர்த்தி செய்திருந்தால் அவர்கள் மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படலாம், 5 வயது பூர்த்தியடையும்போது ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்கப்படலாம் என்பது மாநில அரசு பின்பற்றி வரும் நடைமுறை, இதனையே மாநில கல்விக்கொள்கை 2025ம் தெளிவுபடுத்துகிறது.

ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஒரு சில பள்ளிகளில் 5 வயதும் மற்ற பள்ளிகளில் 6 வயதும் என இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்படுகிறது.

ஒரு சில மாதங்களுக்காக ஓராண்டு வீணாக வேண்டுமா?

"குழந்தைகள் ஜூன், ஜூலை மாதங்களில் பிறந்தால் ஓராண்டு பள்ளி படிப்பு வீணாக வேண்டுமா" என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஜூலை மாதம் பிறந்த எனது இரண்டாவது மகன் கடந்தாண்டு மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி படித்தான், ஆனால் அவன் ஜூலை மாதம் பிறந்ததால் அவனது பள்ளியில் மீண்டும் அதே வகுப்பில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்" என்று அவர் தெரிவித்தார்.

"ஒரு சில மாதங்களுக்காக மீண்டும் அதே வகுப்பில் சேர்க்க நாங்கள் விரும்பவில்லை, அதேநேரம் எனது பொருளாதாரமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கான காரணம் அறிய புவனா குறிப்பிட்ட சிபிஎஸ்இ பள்ளியை பிபிசி தமிழ் சார்பாக தொடர்பு கொண்டோம், "தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஒன்றாம் வகுப்புக்கான வயது 6 என்று தெரிவித்துவிட்டதால் எங்கள் பள்ளியில் அதனை பின்பற்றுகிறோம், மற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் இதே நடைமுறைதான்" என்று பள்ளி தரப்பில் இருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

இதையொட்டியே கருத்து தெரிவித்த புவனா, "எனது மூத்த மகள் சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்கிறாள், வீட்டிலிருந்து 8 கிமீ பயணம் செய்ய வேண்டியுள்ளதால் மகனை அருகில் சேர்க்க நினைத்தோம், அருகில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கேட்டால் 6 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும் என்றனர், அதனால் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என மகனையும் மகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துவிட்டேன், அங்கு வயது வித்தியாசம் குறித்து அவர்கள் எதுவும் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

'தடையின்மை சான்று வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உள்ளது'

சி.பி.எஸ்.இ பள்ளிகள் மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு உட்படுவதால் அவர்களை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுகன்யா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தால் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

" மத்திய அரசின் நெறிமுறைகளை பின்பற்றிதான் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்குகின்றன, அவர்களின் நெறிமுறைகளின்படி தமிழ்நாட்டில் பள்ளிகளை தொடங்குவதற்கான அனுமதிகளை மட்டுமே தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வழங்கும், அதோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒழுங்குமுறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கிறோம்" என்று அவர் விளக்கமளித்தார்.

இருவேறு நடைமுறையால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாதா என்று நாம் கேட்டபோது இது குறித்தி சி.பி.எஸ்.இ மண்டல அலுவலரிடம் விசாரிக்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.

சி.பி.எஸ்.இ தரப்பு பதில் என்ன?

புவனா கூற்றுப்படி மாநில பாடத்திட்டம் அல்லாத சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்படும் போது இதனால் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவ தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் பெற அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ மண்டல அலுவலகத்தை பலமுறை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது, ஆனால் அதன் பதிலை பெற முடியவில்லை. அவர்கள் பதிலளிக்கும் நிலையில் அந்த கருத்துக்கள் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.

கல்வியாளர்கள் சொல்வது என்ன?

"சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேரும் மாணவர்களின் வயது தேசிய கல்விக் கொள்கையை மட்டும் பின்பற்றாமல், பள்ளிகள் அமைந்துள்ள அந்தந்த மாநிலங்களின் முடிவுகளுக்கும் உட்பட்டது" என்கிறார் மூத்த கல்வியாளர் அஜித் பிரசாத் ஜெயின்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர், "தேசிய கல்விக் கொள்கையை அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக ஏற்காமல் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியது, ஆனால் புதிய அரசு இந்த கல்விக் கொள்கையில் எடுக்கும் முடிவை பொருத்தே இது அமையும்" என்றார் அவர்.

மேலும், "மாணவர் சேர்க்கையில் நிரந்தர வயது விகிதம் எதுவும் பின்பற்றாமல், அந்தந்த பள்ளி அமைந்துள்ள மாநிலங்களின் முடிவை பொறுத்தே இது தீர்மானிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவையே இன்றும் பின்பற்றப்படுகிறது" என்று அவர் கூறினார்.

ஆனால், "தற்போதைய நடைமுறையில் இந்த விதிகளில் தெளிவு கிடக்கவில்லை என்றால் பொதுத்தேர்வை எழுதும்போது மாணவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்கிறார்" மூத்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "குழந்தைகளால் 3 வயதில் சுற்றுப்புறத்தை புரிந்துகொள்ள முடிகிறது, இரண்டு ஆண்டுகள் மழலையர் பள்ளிகளில் இருந்தால் 5 வயதில் அவர்கள் ஒன்றாம் வகுப்புக்கு தயாராகிவிடுகின்றனர்" என்று அவர் கூறினார்.

ஆனால், "தனியார் பள்ளிகளில் வியாபார நோக்கத்தோடு 6 வயது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் இதுநாள் வரை ஏற்கப்படாமல் இருந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தவெக அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே மாணவர் சேர்க்கை வயதின் முடிவு அமையும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பின்பற்றப்படும் இருவேறு நடைமுறைகளால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு பிபிசி தமிழ் சார்பாக சில கேள்விகளை அனுப்பியிருந்தோம்.

அதற்கு "உரிய விளக்கம் வழங்குகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது பதில் கிடைத்ததும் இதில் சேர்க்கப்படும்.

உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன?

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உலக அளவில் பின்பற்றப்படும் சராசரி வயது 6 என்று 195 நாடுகளில் எடுக்கப்பட்ட யுனெஸ்கோ தரவுகள் மூலம் தெரியவருகிறது.

இதனை பின்பற்றி இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

"வயது விகிதத்தில் உலக நாடுகளை பின்பற்றும் மத்திய அரசு, கட்டணமில்லா கல்வி வழங்கும் பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளை ஏன் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பினார்.

"குழந்தை நலன், பெற்றோர் நலன், கல்வி நலன் சார்ந்து 5 வயது என நடைமுறையில் இருப்பது எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது, அதனை நீடிக்க செய்வதுதான் சரியானதாக இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு