கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?
பிரசுரிக்கப்பட்டது

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும்"

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும். ஊரடங்கு முடிவடைந்த பின்னா் அந்தத் தோ்வுக்கான அட்டவணை வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் மாதம் முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஊரடங்கு காரணமாக முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று பிளஸ் 1 வகுப்பில் சில பாடங்களுக்கான தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. எனினும் மேல்நிலைக் கல்வி, நுழைவுத்தோ்வு, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் என பல்வேறு காரணங்களால் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தாா்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகள் தளா்த்தப்படுவது குறித்தும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காகவும் பல்வேறு துறை சாா்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் செங்கோட்டையன் பங்கேற்றாா். அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் செங்கோட்டையன், "தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்தில் நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும். அந்தத் தோ்வில் பெறும் மதிப்பெண் மாணவா்களின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் என்பதால் முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதிக்குப் பின்னா் ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு பத்தாம் வகுப்புத் தோ்வை எப்படி நடத்தலாம் என்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பின்னா் தேதி அறிவிக்கப்படும்," என்றாா்.

இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: "கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்'

ஊரடங்கு விதிகளை மீறி சில நடவடிக்கைகளை அனுமதித்துள்ளதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததையடுத்து, சில தளர்வு நடவடிக்கைகளை கேரள அரசு நேற்று திரும்பப் பெற்றது என்கிறது இந்து தமிழ் திசை.

பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:

கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரை, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில், 4 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும் 8 மாவட்டங் கள் ஆரஞ்சு மண்டலத்திலும் 2 மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் உள்ளன. இதில் சிவப்பு மண்டலத்தைத் தவிர பிற மண்டலங்களில் நிலைமைக்கேற்ப நேற்று முதல் ஊரடங்கை மாநில அரசு தளர்த்தியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாகவும் கேரள அரசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

கேரளா

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன் தினம் ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில், 'ஊரடங்கு தளர்வு தொடர்பான மத்திய அரசு விதி களை மீறி சில மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அவை ஊரடங்கு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளன. வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், உள்துறை அமைச்சக விதிகளுக்கு உட்பட்டு சில நடவடிக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, கேரள அரசுக்கு தனியாக எழுதியுள்ள கடிதத்தில், 'பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு தொடர்பாக கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு ஆணை பிறப்பித்தது. ஆனால், கேரள அரசு சில நடவடிக்கைகளை அனுமதித்திருப் பது, மத்திய அரசின் ஆணையை மீறுவதாகவும் அதை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் உள்ளது. எனவே, ஊரடங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கேரள அரசு தனது உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரள அரசின் உத்தரவுப்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் உணவகங்கள், புத்தக நிலையங் கள், குறுகிய தூரப் பேருந்துகள், தனி யார் வாகனங்கள், முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்டவை நேற்று காலையில் இயங்கின. பெரும் பாலான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

ஆனால், மத்திய அரசின் கடிதம் கிடைத்த நிலையில், சில நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக மாநில அரசு நேற்று அறிவித்தது.

Presentational grey line

தினத்தந்தி: "மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படும் ஆண்கள்"

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு 'ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள்துமிலன். இவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "கொரோனா என்ற கொடிய வைரசுக்கு பயந்து மரண பீதியில் உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால், வீட்டில் அடைபட்டு கிடக்கும் ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி, ஆண்கள் பலர் தங்களது மனைவிகளால் மிரட்டப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

கொரோனா தொற்று

உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. சொந்த வீட்டில் உணவுக்காக ஆண்கள் கையேந்தும் நிலையில் உள்ளனர். பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், பல ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால், தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க, ஒரு 'ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :