"நிர்பயா வல்லுறவு நடந்தபோது நான் சிறுவன்" - பவன் குப்தா வாதத்தை நிராகரித்த நீதிமன்றம்

பவன் குப்தா

பட மூலாதாரம், Delhi Police

படக்குறிப்பு, பவன் குப்தா
பிரசுரிக்கப்பட்டது

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியான பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குற்றம் செய்த காலத்தில் தனக்கு 18க்கும் குறைவான வயதே ஆனதாக பவன் குமார் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நடந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குற்றம் நடந்த சமயத்தில் பவன் குப்தாவின் வயது 19 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான டிசம்பர் 2012ல் தமக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி, பவன் குப்தா சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, இதே கருத்தை முன்வைத்து பவன் குப்தா தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்திருத்தது.

அடுத்தது என்ன?

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பட மூலாதாரம், Delhi Police

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17ஆம் தேதி நிராகரித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள மூன்று பேரும் அல்லது மூவரில் ஒருவர் பிப்ரவரி 1ம் தேதிக்குள் கருணை மனு தாக்கல் செய்தால் தூக்கிலிடுவதற்கான தேதி மீண்டும் மாறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: