தமிழகத்தில் எப்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் - ஏன் இந்த தாமதம்?

தேர்தல் மை

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images

பிரசுரிக்கப்பட்டது

நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

தினமணி - தமிழகத்தில் எப்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் - ஏன் இந்த தாமதம்?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

கடந்த ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அக்டோபர் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு உச்சநீதிமன்றம் ஜூலை 17ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த அக்டோபரில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் தேர்தல் நடத்துவதில் நிலவும் தாமதத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மேலும் நான்கு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 25ல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்குரைஞர் எம்.பி. பார்த்திபன் ஆஜராகி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிப்பதை கூறினர்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தீபாவளிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றத் தவறியதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயசுகின் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோ அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிவு: 4 சிப்பாய்கள் பலி

சியாச்சன்

பட மூலாதாரம், Getty Images

சியாச்சின் பனிமலையில் ஏற்றபட்ட பனிப்பாறை சரிவால் நான்கு சிப்பாய்களும், பொதுமக்களில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

மேலும் ஒருவர் மோசமாக காயமடைந்துள்ளார்.

திங்கள்கிழமை 19,000 அடி உயரத்தில் சியாச்சன் பனிமலையின் வடக்குப் பகுதியில் இந்த பனிப்பாறை சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கிக் கொண்ட எட்டு பேரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் 2016 பிப்ரவரி மாதத்தில் மோசமானதொரு பனிப்பாறை ராணுவ முகாமை தாக்கியதில் 10 சிப்பாய்கள் உயிரிழந்தனர் என்கிறது அச்செய்தி

தினகரன் - ஜே என் யு போராட்டம் - தடியடி

ஜே என் யு

பட மூலாதாரம், Getty Images

விடுதிக் கட்டண உயர்வைத் திரும்ப பெற கோரி நாடாளுமன்றத்தை நோக்கி தடையை மீறி டெல்லியில் உள்ள ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் சென்ற பேரணியை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் மாணவர்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய விடுதி வரைவு கொள்கையில் விடுதி கட்டண உயர்வு, ஆடை மற்றும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து எம்பிக்களின் கவனத்தை ஈர்க்க மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தியதால் அப்போது மோதல்களும் ஏற்பட்டன என்கிறது தினகரன் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :