ஃபரூக் அப்துல்லா கைது: மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

ஃபரூக் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபரூக் அப்துல்லா
பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை அம்னெஸ்டி அமைப்பு முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் கண்டித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் நீக்கப்பட்டதை ஒட்டி, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் ஃபரூக் அப்துல்லா. அவர் எங்கே என்று கேட்டு வைகோ தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் மனு நேற்று செப்டம்பர் 16-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில் அவர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இது அடக்குமுறைச் சட்டம் என்பதை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி முதல் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த சட்டத்தில் அப்படி என்ன அடக்குமுறை அம்சங்கள் உள்ளன? இதில் கைது செய்யப்பட்டவருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?

ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

இந்த சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

1978-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா முதல்வராக இருந்தபோது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு தடுப்புக் காவல் சட்டம். மரக் கடத்தலைத் தடுக்கும் நோக்கத்துடன் முதலில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடங்கியது.

எவ்வளவு காலம் விசாரணையில்லாமல் சிறை வைக்க முடியும்?

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அதிகபட்சம் இரண்டாண்டுகள் வரை விசாரணையில்லாமல், சிறை வைக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதை உடனடியாக கூறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், 5 நாள்களில் அவர்களுக்கு அந்த விளக்கத்தை அளிக்கவேண்டும். சிறப்புச் சூழ்நிலைகளில் அப்படி 5 நாள்களில் காரணம் தர முடியாத நிலை ஏற்பட்டால் 10 நாள்களில் அந்த விளக்கத்தை அளிக்கவேண்டும்.

யார் உத்தரவிட முடியும்?

இந்த சட்டம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போல தடுப்புக் காவல் சட்டமாகும். ஒருவரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்ற முடிவை போலீஸ் துறை தாங்களாகவே எடுக்கமுடியாது. மாவட்ட ஆட்சியர் / மாவட்ட மேஜிஸ்திரேட் உத்தரவின் பேரில்தான் ஒரு நபரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும்.

புர்கான் வானி
படக்குறிப்பு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் புர்ஹான் வானி

எந்த வயதில் கைது செய்ய முடியும்?

முதல் முதலில் இந்த சட்டத்தை இயற்றியபோது 16 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஆனால், இந்த சட்டம், 2012ல் திருத்தப்பட்டபோது இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. 2018ல் மீண்டும் செய்யப்பட்ட திருத்தத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே உள்ளவர்களையும் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்ய முடியும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டது.

குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல கட்டுப்பாடு

ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மக்கள் யாரும் வரக்கூடாது என்று இந்த சட்டத்தின்கீழ் தடை விதிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நபரின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தமுடியும். தடை விதிக்கப்பட்ட இடத்தில் நுழைந்த நபர்களை உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத போலீஸ் அதிகாரிகள் விசாரிக்க முடியும். அப்படி தடை செய்யப்பட்ட இடத்தில் காணப்படுகிறவர்களுக்கு 2 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அதிகாரிகளை மீறி தடை செய்யப்பட்ட இடங்களில் நுழைகிறவர்களுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

சட்டம் பயன்படுத்தப்பட்ட வரலாறு

2016 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டபோது காஷ்மீரை சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். 2016 - 2018 காலகட்டத்தில் 200 மனித உரிமை மீறல் விவகாரங்களை அம்னஸ்டி அமைப்பு ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின்படி, 2016-17 காலகட்டத்தில் மட்டும் 2,400 பேர் இந்த சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி சட்டமன்றத்தில் அறிவித்தார். இவற்றில் 58 சதவீதம் கைதுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்தன.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 150 ஹேபியஸ் கார்பஸ் - ஆட்கொணர்வு பேராணை - மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அவற்றில் 39 மனுக்களில் தீர்ப்பு வெளியானது. அவற்றில் 80 சதவீதத் தீர்ப்புகளில் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நபர்களை தடுப்புக் காவலில் வைத்த உத்தரவுகளை நீதிமன்றம் ரத்து செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :