You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு எவ்வளவு பணம் தேவை?
பொதுவாக அதிக பணம் இருந்தால் நாம் சந்தோஷமாக இருப்போம் என நினைக்கிறோம்.
ஆனால் அது உண்மையா? நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?
நமது வருவாய், கடன் மற்றும் நஷ்டம் இவற்றுடன் நமக்குள்ள உணர்வுப் பூர்வமான தொடர்பு மிகவும் நுணுக்கமானது.
சரி பணம் எப்படி நமது மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது என்று பார்ப்போம்.
மகிழ்ச்சிக்கும் பணத்திற்கும் தொடர்பு உள்ளது?
மனித வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மனிதன் ஒரு நாகரிகமான வாழ்வை வாழ்வதற்கு பணம் அவசியமானதாக உள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி உங்கள் வருமானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மகிழ்ச்சிக்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பு என்பது ஒரு கணித கோட்பாடை போன்றது. எடுத்துக்காட்டாக உங்களின் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் இரட்டிப்பாகி 40 ஆயிரமாக மாறினால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அதேபோல அதே அளவு நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டுமென்றால் 40 ஆயிரம் ரூபாய் 60 ஆயிரம் ரூபாயாக மாறினால் போதாது. 40 ஆயிரம் ரூபாய் இரட்டிப்பாகி 80 ஆயிரம் ரூபாயாக மாறினால் மட்டுமே உங்களால் அதே அளவு மகிழ்ச்சியை பெற முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?
அதாவது ஒரு அளவிற்கு மேல் நீங்கள் உங்கள் ஊதியத்தை இரட்டிப்பாக்க முயற்சி செய்வது வீண்தான். பிரிட்டனில் அந்த அளவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்ட் என நிர்ணயிக்கின்றனர். பலர் இந்த அளவை எட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருப்பதில்லை.
ஆனால் இந்த அளவிற்கு மேல் ஒருவர் தனது வருமானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக பெரிதும் கருதுவது இல்லை என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெ நேவே
'மகிழ்ச்சி என்பது வருமானத்தை சார்ந்தது மட்டுமல்ல'
உணவு, உறைவிடம் இது இரண்டும் பூர்த்தியான பிறகு வேறு சில விஷயங்கள் நமது மகிழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன. அதுகுறித்து விவரிக்கிறார் 'சாரிட்டி ஃபார் ஹாப்பினெஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் மார்க் வில்லியம்சன் .
- சமூகத்துடன் அதாவது குடும்ப உறவுகள், நண்பர்கள், சக பணியாளர்களிடம் நல் உறவை பேணுதல்,
- நம்மைக்காட்டிலும் மேலானவற்றின் ஒரு அங்கமாக இருத்தல் (எடு.க தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக பணி செய்தல்)
- நாம் எடுக்கும் முடிவுகளை நமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
- கடினமான சூழல்களில் இருந்து விரைவாக மீண்டு எழுவது
நார்டிக் நாடுகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பது ஏன்?
ஐநாவின் உலக மகிழ்ச்சி பட்டியலை தயாரிக்கும் நபர்களில் ஒருவராக இருக்கும் டெ நேவே தொடர்ந்து டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடிப்பதன் காரணத்தை விளக்குகிறார்.
- மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது
- மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் அரசுகள்
- அரசின் வரித் திட்டங்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆழமான நம்பிக்கை
அதேபோல சமத்துவமான சமூகமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டெ நேவே. சில வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நார்டிக் நாடுகளில் பாகுபாடு குறைவாக உள்ளது என்கிறார் டெ நேவே.
'பணம் குறித்த விநோத தகவல்கள்'
மனிதர்கள் என்றால் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு கொள்வது இயல்பான ஒன்றுதான். நாம் சம்பாதிக்கும் பணம், சொத்து, உடை என எல்லா வகையிலும் பிறரோடு நம்மை நாம் ஒப்பிட்டு பார்த்து கொள்வோம்.
இதற்கு ஒரு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒருவரின் பதிவை பார்த்து நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதேபோல நாம் பணத்தை சம்பாதிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோமோ அதைக்காட்டிலும் அதை இழக்கும்போது நாம் வருத்தமடைகிறோம்.
ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட மற்றொரு உளவியல் உண்மை, நமக்கு இருக்கும் கடனை முழுவதுமாக அடைப்பதைக் காட்டிலும் அதை பகுதியளவாக அடைக்கும்போது நாம் அதிகளவில் மகிழ்ச்சியடைகிறோம். நாம் வாங்கிய கடன் குறைந்து கொண்டே வரும்போது நமக்கு ஒரு புதுவித மகிழ்ச்சி கிடைக்கிறது.
பணம் தொடர்பாக ஆய்வாளர்கள் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான பழக்கம், சேமிப்பு மற்றும் குறைந்த அளவிலான பயன்பாடு (மினிமலிசம்). அதாவது நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்கவில்லை என்றால் நமக்கு எந்த பலனும் இல்லை. அதேபோல சம்பாதிக்கிறோம் என ஆடம்பரமாக செலவு செய்வதையும் நாம் அடியோடு மறக்க வேண்டும்.
முடிந்தவரை நமது தேவைகளை குறைத்து கொள்வது நமது வாழ்க்கை முறையை சீர்ப்படுத்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: