யுக்ரேனுக்கு ஆயுதங்களை நேரடியாக வழங்குவோம்: ஜெர்மன் அறிவிப்பு

    • எழுதியவர், டேமியன் மெக்கினஸ்
    • பதவி, பிபிசி நியூஸ், பெர்லின்
  • பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனுக்கு ஆயுதங்களை நேரடியாக வழங்க உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் அறிவித்துள்ளார்.

யுக்ரேனுக்கு 1,000 டாங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, மோதல் நிலவிவரும் பகுதிகளுக்கு அனுப்புவதற்கான சில கட்டுப்பாடுகளையும் பெர்லின் விலக்கியுள்ளது. இதன்மூலம், மூன்றாவது நாடுகள் யுக்ரேனுக்கு அதிகளவில் ஆயுதங்களை அனுப்ப முடியும்.

ரஷ்ய படையெடுப்பு ஒரு திருப்புமுனை என, ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்தார்.

மோதல் நிலவும் பகுதிகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஜெர்மனியின் நீண்ட கால கொள்கை இதன்மூலம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

அதேசமயம், உலகளாவிய விரைவான பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் நிதி தகவல் சேவையான ஸ்விஃப்ட் சேவையை அணுகுவதில் இருந்து, "உரியவர்களை மட்டும் பாதிக்கும் வகையிலும்", மற்றவர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், கட்டுப்படுத்துவது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜெர்மன் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் மூன்று அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசால் ஆளப்படுகிறது. இந்த அரசில், சோசியல் டெமாக்ரட்ஸ், கிரீன்ஸ் மற்றும் லிபரல் கட்சிகள் உள்ளன. இதனால், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சவால்கள் நிலவுகின்றன.

ஆனால், ஜெர்மனி தன் பாதுகாப்புக்காக, வர்த்தகம் மற்றும் ராஜரீக உறவை மட்டுமல்லாமல், ராணுவ வலிமையையும் நம்பியிருக்க வேண்டும் என்பதை இங்கு உணர வேண்டும்.

கடந்த காலத்தில் ரஷ்யாவுக்கு அனுதாபம் தெரிவித்த தலைவர்கள் பின்னர், ஒன்று அவர்கள் மௌனம் சாதித்துள்ளனர், அல்லது தாங்கள் தவறு செய்ததாகக் கூறியுள்ளனர்.

கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர் ஆன்னலேனா பேர்போக் தன் ட்விட்டர் பக்கத்தில், "புதினின் போருக்குப் பிறகு நம் உலகம் மாறுபட்டது. சர்வதேச சட்டத்தின் விதி மீறலால் நாங்கள் திகைத்து நிற்கிறோம், ஆனால் நாங்கள் அதிகாரம் அற்றவர்கள் அல்ல.

"அதனால்தான் தங்கள் நாட்டுக்காக போராடும் யுக்ரேன் படையினருக்கு, பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஸ்டிங்கர் ரக ஏவுகணைகள் வழங்கி நாங்கள் உதவுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நடவடிக்கைகளால் ஜெர்மன் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக தங்கள் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுதான் இப்போது நடக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: