ஆப்கன் தாலிபனிடம் இருந்து தப்பி வந்த இந்திய பெண்ணின் திக்... திக்... நிமிடங்கள்

ஆப்கானிஸ்தான்
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான்
    • எழுதியவர், நேஹா ஷர்மா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா தனது குடிமக்களை தொடர்ந்து வெளியேற்றி வரும்போதிலும், ஏராளமான மக்கள் இன்னும் அங்கு சிக்கியுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு இந்திய பெண் கடந்த சில நாட்களின் துயர அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

லத்தீஃபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காபூலில் இருந்து டெல்லிக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் வர பதிவு பெற்றிருந்தார். ஆனால் விஷயங்கள் இவ்வளவு விரைவாக மாறும் என்று அவர் நினைக்கவில்லை.

காபூலை தாலிபன் கைப்பற்றியவுடன், அனைத்து பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. லத்தீஃபா ஏறவிருந்த ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலையில் நான் அவரிடம் பேசியபோது, ​​லத்தீஃபா காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு மினி பேருந்துக்குள், கிட்டத்தட்ட இருபது மணி நேரமாக, உணவோ, கழிவறை வசதியோ இல்லாமல் அமர்ந்திருந்தார். இந்தியாவின் அவசரகால வெளியேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த இந்திய ராணுவ விமானத்தில் ஏற செய்யப்பட்ட முயற்சியின் ஒரு பகுதி இது.

லத்தீஃபா ஒரு இந்தியர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரை அவர் மணந்தார். அவர் இரு நாடுகளுக்கும் இடையில் அடிக்கடி பயணம் செய்கிறார். இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் குடும்பத்தினர் உள்ளனர்.

15 ஆகஸ்ட்

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முனைப்பில் மக்கள்
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முனைப்பில் மக்கள்

ஆகஸ்ட் 15 காலை, ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான தூதரகங்கள் ஒரே இரவில் மூடப்பட்டதையும், அவற்றின் ஊழியர்கள் முதல் வாய்ப்பில் தப்பி ஓடியதையும் கண்டுகொண்டு லத்தீஃபா எழுந்தார். லத்தீஃபாவின் கணவர் ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் விரைவில் வெளியேற வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் அவர் ஒரு இந்தியர் என்பதால் அது அவரது உயிருக்கு பெரிய ஆபத்தாக இருந்தது. லத்தீஃபா தனது பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டார். நீல நிற சதாரி (புர்கா) அணிந்துகொண்டு அவரும் அவரது கணவரும் இந்திய தூதரகத்திற்கு விரைந்தனர். கணவர் மற்றும் மாமியாருக்கு விசா பெறவும், இந்தியகுடிமக்களை வெளியேற்றும் விமானம் குறித்து தகவல் பெறவும் அவர்கள் சென்றனர்.

"நாங்கள் இந்திய தூதரகத்தை அடைந்தபோது, ​​அதிர்ஷ்டவசமாக அது செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பதற்றத்தை உணர முடிந்தது. அவர்கள் எல்லா ஆவணங்களையும் அழித்து அவற்றை எரித்துக் கொண்டிருந்தனர். அன்று மாலை வரை வேலை செய்யப்போவதாக ஊழியர்கள் எங்களிடம் சொன்னார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள எனது குடும்பத்தின் மற்றவர்களுக்கு விசா பெற விரும்பினேன். அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களுடன் மாலையில் திரும்பி வரும்படி என்னிடம் சொன்னார்கள். அதனால் நான் வீடு திரும்பினேன்," என்று லத்தீஃபா கூறுகிறார்.

திரும்பி வரும் போது வழியில் ​​அவர் பார்த்தது, பெரும் குழப்பம் மற்றும் உதவியற்ற தன்மையின் அவலம்.

"மக்கள் தாலிபன்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருந்தனர். என் கணவரின் கையைப்பிடித்தபடி நான் வீட்டை நோக்கி ஓடினேன். காபூல் நகர மக்கள் அனைவரும், விமான நிலையத்தை நோக்கி ஓடுவது போல் இருந்தது. நான் வீடு திரும்பியபோது ​​கட்டடத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் தங்கள் சீருடையில் இருந்து குர்தா-பைஜாமாவுக்கு மாறி விட்டனர். எனது கட்டடம் தாலிபன்களால் சூழப்பட்டது," என்றார் லத்தீஃபா.

லத்தீஃபாவும் அவரது கணவரும் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளை எடுத்துக்கொண்டு அன்று மாலை தூதரகத்திற்குச் சென்றனர், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தின் மற்றவர்களுக்கும் விசா கிடைத்தது.

பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தொலைபேசி அழைப்புக்கான காத்திருப்பு தொடங்கியது. லத்தீஃபா ஒரு இந்தியர் என்பதால் நாட்டின் முன்னுரிமை பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

19 ஆகஸ்ட்

காவல் காக்கும் தாலிபன்

பட மூலாதாரம், LATIFA/BBC

படக்குறிப்பு, காவல் காக்கும் தாலிபன்

"ஆகஸ்ட் 19 அன்று வெளியுறவு அமைச்சகத்திலிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. காபூலில் நான் ஒரு குறிப்பிட்ட இடத்தை (பாதுகாப்பு காரணங்களால் வெளிப்படுத்த முடியாது) அடைய வேண்டியிருந்தது. அங்கு வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பலர் கூடினர்.

நான் என் முழு குடும்பத்தையும் விட்டுச் செல்லவேண்டியிருந்தது. அது எளிதாக இருக்கவில்லை. ஆனால் என் குடும்பம் எனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தியது.

சிந்திக்க நேரமும் இல்லை. ஒரு சிறிய கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்லும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. எனவே, நான் எனது லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள், போன், ஒரு பவர் பேங்க் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்," என்று லத்தீஃபா குறிப்பிட்டார்.

பாதுகாப்பான இல்லத்தில் லத்தீஃபாவைத் தவிர சுமார் 220 பயணிகள் இருந்தனர். இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் ஒரு சில ஆப்கானிஸ்தான் குடும்பங்களும் இருந்தன. ஆனால் இந்த இல்லம் கூட பாதுகாப்பு உணர்வை தரமுடியவில்லை.அடுத்த இரண்டு நாட்கள் கவலையில் கழிந்தன.

"எந்த ஏற்பாடுகளும் இல்லை. நாங்கள் எப்போது வெளியேற்றப்படுவோம் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு இல்லத்திற்குள் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. உண்மையில், வேறு எந்த குழுக்களும் எங்களைத் தாக்காதபடி, தாலிபன்கள் எங்கள் பாதுகாப்புக்காக வெளியே நின்று கொண்டிருந்தனர். பயத்தால் எங்களால் தூங்க முடியவில்லை, "என்கிறார் லத்தீஃபா.

20 ஆகஸ்ட்

உடைமைகளுடன் பயணிகள்

பட மூலாதாரம், BBC/LATIFA

படக்குறிப்பு, உடைமைகளுடன் பயணிகள்

ஆகஸ்ட் 20 அன்று இரவு 10 மணிக்கு திடீரென வெளியேற்ற உத்தரவு வந்தது. இரவு 10-11: 30 க்கு இடையில், ஏறக்குறைய 150 பயணிகள் ஏழு மினி பஸ்களில் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். ஒவ்வொன்றும் 21 இருக்கைகள் கொண்டது.

"நாங்கள் தாலிபன்களால் அழைத்துச் செல்லப்பட்டோம். ஒரு கார் எங்களுக்கு முன்னாலும், மற்றொன்று பின்னாலும் வந்தது. நாங்கள் இரவு 12:30 மணியளவில் காபூல் விமான நிலையத்தை அடைந்தோம்.

நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் விமான நிலையத்திற்கு வெளியே பெரும் கூட்டம் காத்திருந்தது. ஒருபுறம், தாலிபன்கள் வானத்தை நோக்கி சுட்டனர். மறுபுறத்தில் அமெரிக்கர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். நாங்கள் பெரும்பாலும் ராணுவத்தால் பயன்படுத்தப்படும் வடக்கு வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்."

"எங்களுடைய குழு விமான நிலையத்தை சென்றடைந்து விட்டாலும், அது துன்பத்தின் முடிவாக இருக்கவில்லை. விமான நிலையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க படையினர், உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். 20-21 ஆகஸ்ட் இரவை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளின் உள்ளே கழித்தோம். எந்த வெளியேற்றத் திட்டமும் விரைவில் வருவதற்கான அறுகுறி தென்படவில்லை."

"எங்களுடன் குழந்தைகள், பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இருந்தனர். நாங்கள் உண்மையில் நடுவழியில் சிக்கிக்கொண்டோம். சில பெண்களுக்கு மாதவிடாய் இருந்தது., ஆனால் எங்களுக்கு கழிவறை வசதி கிடைக்கவில்லை. நாங்கள் எந்தப்பாதுகாப்பும் இல்லாமல் இருந்தோம். யார் வேண்டுமானாலும் எங்களை தாக்கியிருக்கக்கூடும், " என்று லத்தீஃபா தெரிவித்தார்.

21 ஆகஸ்ட்

லத்தீஃபா ஒரு லிஃப்ட் கண்ணாடியில் தன்னை எடுத்துக்கொண்டபுகைப்படம்

பட மூலாதாரம், LATIFA/BBC

படக்குறிப்பு, லத்தீஃபா ஒரு லிஃப்ட் கண்ணாடியில் தன்னை எடுத்துக்கொண்டபுகைப்படம்

லத்தீஃபாவுக்கும் மற்ற பயணிகளுக்கும் அது ஒரு கடினமான இரவு. ஆனால் காலைப்பொழுது மேலும் திகிலுடன் விடிந்தது.

"காலை 9:30 மணிக்கு, தாலிபன்கள் எங்கள் பேருந்துகளுக்கு வந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரை விசாரிக்க ஆரம்பித்தனர். அவருடைய செல்பேசியைப் பறித்து அவரை அறைந்தனர். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. "

அந்த ஏழு பேருந்துகளில் இருந்த எல்லா பயணிகளும் அறியப்படாத ஒரு இடத்திற்கு தாலிபன்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

"நாங்கள் ஒரு தொழிலக பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்தவர்கள் இளம் தாலிபன் ஆண்கள். சிலர் 17-18 வயதுகளில் இருந்தனர். நாங்கள் எங்கள் உயிருக்கு பயந்தோம், எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தோம். அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வின் மிக ஆபத்தான மணிநேரங்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாது என்று நினைத்தோம்."

ஒரு பூங்காவில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். தாலிபன்கள் அவர்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு அவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினர். ஆஃப்கானியர்களை திருமணம் செய்த இந்திய பெண்கள் மற்ற இந்தியர்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

"நான் ஒரு இந்தியர்,ஆகவே இந்தியர்களுடன் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னேன், நான் ஆஃப்கானியர்களுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். என் இந்திய சகோதர சகோதரிகளை அவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ என்று நான் பயப்பட ஆரம்பித்தேன். அவர்களை எங்காவது அழைத்துச் சென்று அவர்களை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது?"

விமான நிலைய ஓடுதளத்தில் பாதுகாப்பு வாகனங்கள்
படக்குறிப்பு, விமான நிலைய ஓடுதளத்தில் பாதுகாப்பு வாகனங்கள்

ஒரு தாலிபன் என்னிடம் கேட்டார் - நீங்கள் ஏன் இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்? நாங்கள் நாட்டை உருவாக்க முயற்சிக்கிறோம் என்றார். நான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வருவேனா என்று அவர் கேட்டார். நான் இல்லை, உங்களை பார்த்து நாங்கள் பயப்படுகிறோம் என்றேன்.

பயப்பட ஒன்றுமில்லை என்று எங்களுக்கு உறுதியளித்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். ஆனால் எங்கள் கண்களைப்பார்த்து அவர்கள் பேசவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். நான் பிரிந்திருந்த இந்திய குழுவில் இருந்த ஒரு தோழியிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. தாலிபன்கள் உணவளித்ததாகவும், தங்களை நன்றாக கவனித்துக்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்."

அந்த நாளின் பிற்பகுதியில், உள்ளூர் ஆப்கானிஸ்தான் ஊடகங்களிடம் பேசிய ​​தாலிபன் செய்தித் தொடர்பாளர், சந்தேகம் காரணமாக பயணிகளை தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பியதாகவும் தெரிவித்தார். பயணிகள் கடத்தப்பட்டதான செய்திகளை அவர் மறுத்தார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, லத்தீஃபாவை, ஆப்கானியர்கள் மற்றும் ஆப்கானியர்களைத் திருமணம் செய்த மற்ற இந்திய பெண்களுடன் பேருந்தில் ஏற்றினர். விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் மற்ற இந்திய குழுக்களும் அவர்களுடன் இணைந்தன. பிற்பகல் 2 மணியளவில், அவர்கள் காபூல் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் மீண்டும் அழைத்துவரப்பட்டனர். விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான காத்திருப்பு மீண்டும் தொடங்கியது.

"வெளியுறவு அமைச்சகம் எங்களை விமான நிலையத்திற்குள் கொண்டு செல்ல முயன்றது, ஆனால் அது நடக்கவில்லை. தாலிபன்களால் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்றும் நாங்கள் எப்படி சிக்கித் தவித்தோம் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்த பிறகும் எதுவும் செய்யப்படாதது குறித்து நான் மிகவும் கோபமடைந்தேன். கதவுகளுக்குப் பின்னால் என்ன பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அங்கே சிக்கிக் கொண்ட எனக்கு அவநம்பிக்கை உணர்வு மேலோங்கியது."

ஆப்கானிஸ்தான்
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான்

"அவர்களுக்கு உறுதியாக தெரியவில்லையென்றால், எங்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்படி எங்களிடம் சொல்லியிருக்கக்கூடாது. நாங்கள் எங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து இருந்திருப்போம். இவ்வளவு ஆபத்தில் நாங்கள் வெளியேறியிருக்க மாட்டோம். இப்போது நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம். "

மாலை 5 மணி - அடுத்த 15-20 நிமிடங்களில் அவர்கள் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகத்தால் லத்தீஃபாவின் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.

மாலை 6 மணி - அமைச்சகத்திலிருந்து மற்றொரு அழைப்பு வந்தது. இந்த முறை பாதுகாப்பான வீட்டிற்குச் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. ஒவ்வொரு முயற்சியும் பயனற்றதாகத் தோன்றியது.

"எங்கள் அரசுக்கு அதிகாரம் இல்லையா? எங்களை விமான நிலையத்திற்குள் நுழைய வைக்கக் கூட அவர்களால் முடியாதா? நாங்கள் இங்கே கைவிடப்பட்டோம். தயவுசெய்து எங்களை அழைத்துச் செல்லுங்கள். "

தூக்கமில்லாமல், பசியுடன் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், லத்தீஃபாவும் மற்றவர்களும் மீண்டும் பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாலை 6:50 - "வெளியேற்றுவது இரவில் நடக்கலாம் என்று அதிகாரிகள் எங்களிடம் சொன்னார்கள் . ஆனால் யாருக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து அதைத்தான் சொல்லி வருகிறார்கள். எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது. பலர் வீடு திரும்ப திட்டமிட்டனர். நாங்கள் 3 நாட்களாக தூங்கவில்லை. குறிப்பாக சிறு குழந்தைகளை வைத்திருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்."

இரவு 8 மணி - சோர்வாகவும்,நம்பிக்கை இல்லாமலும் இருந்த லத்தீஃபா, வெளியேற்ற நடவடிக்கை விரைவில் நடக்காது என்று நினைத்து வீடு திரும்ப முடிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான்

ஆனால் அன்று இரவு, இந்திய விமானப்படையின் சி -17 விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குழு வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் வீடு திரும்பிய லத்தீஃபா போன்ற பலர் அந்த நாட்டிலேயே சிக்கிக்கொண்டனர்.

இரவு 9:40 - "அது மிக விரைவாக நடந்தது என்று மற்றவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் பாதுகாப்பான இல்லத்தை அடைந்தவுடன் உடனேயே மீண்டும் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நான் அதைச் மயிரிழையில் தவறவிட்டேன். எனக்குத் தெரிவிக்க அவர்களுக்கு நேரமில்லை. இப்போது அவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்குள் இருக்கிறார்கள்."

பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறியதற்காக நான் என் மீது கடுமையாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்ந்து போயிருந்தோம். நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அதிக விமானங்கள் செல்லும் என்று என்னிடம் கூறப்பட்டது. "

22 ஆகஸ்ட்

பகலில், வெளியுறவு அமைச்சகம் லத்தீஃபாவை இரண்டு முறை தொடர்பு கொண்டது. வெளியேற்றப்பட வேண்டிய நபர்களின் புதிய பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆப்கன் தாலிபன்

பட மூலாதாரம், AFP

23 ஆகஸ்ட்

அதிகாலை 2:30 மணிக்கு லத்தீஃபாவை இந்திய அமைச்சகம் தொடர்பு கொண்டது மற்றும் அதிகாலை 5:30 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையுமாறு கூறப்பட்டது. சிக்கிய பலருடன் பேருந்துகள் விமான நிலையத்திற்கு காலை 6:30 மணிக்கு புறப்படப் போகின்றன.

காலை 8 மணி- 21 இருக்கைகள் கொண்ட இரண்டு மினி பஸ்கள், 70-80 பயணிகளுடன், காலை 8 மணிக்கு ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான வாயிலை அடைந்தது. வெளியே இருந்த சூழலில் பெரிய மாற்றம் ஏதும் இருக்கவில்லை.

"பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப்பார்க்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். தாலிபன் மக்களை சாட்டையால் அடிப்பதை நாங்கள் பார்த்தோம். அவர்கள் காற்றில் துப்பாக்கியால் சுட்டனர். அனைத்து ஜன்னல்களையும் மூடி திரைச்சீலைகளை போடுமாறு எங்களிடம் கூறப்பட்டது."

விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமானம்

காலை 8:45 - லத்தீஃபாவை ஏற்றிய பேருந்து பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்தது.

"மிகவும் சிரமத்துடன், நாங்கள் உள்ளே சென்றோம். பிரதான வாயிலில் தாலிபன் உறுப்பினர்கள் இருந்தனர், சிலரை பிரதான வாயிலுக்குள்ளும் பார்த்தோம் . நாங்கள் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டோம். அமெரிக்க வீரர்களை இங்கே பார்க்கமுடிந்தது. அவர்கள் எங்களை நோக்கி கை அசைத்தனர். எங்கள் அழைத்துச்செல்ல வந்த சில இந்திய அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சரிபார்த்தனர். "

காலை 10 மணி - அனைத்துப் பெண் பயணிகளும் ஒரு தற்காலிக கூடாரத்தில் அமர வைக்கப்பட்டனர்.அமெரிக்கர்கள் எங்களுக்கு உணவளித்தனர்.

காலை 11:20 - "அமெரிக்கர்கள் வந்து எங்களை கூடாரத்திலிருந்து வெளியேற்றினர். நாங்கள் இப்போது விமான நிலைய தார் சாலையில், கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தோம் இந்திய விமானம் தரையிறங்க நாங்கள் காத்திருந்தோம். அமெரிக்கர்களிடமிருந்து தரையிறங்கும் அனுமதிக்காக அவர்கள் காத்திருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம்."

பிற்பகல் 12:04 - "இந்திய ராணுவ விமானத்தை தூரத்தில் தார் சாலையில் பார்க்கிறேன். நாங்கள் இப்போது விமானத்தில் ஏற அழைத்துச் செல்லப்படுகிறோம்.

12:20 pm - "நாங்கள் இப்போது இந்திய ராணுவ விமானத்திற்குள் இருக்கிறோம். அவர்கள் எங்களை தஜிகிஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறார்கள்."

பிற்பகல் 1 மணி - லத்தீஃபாவின் தொலைபேசி மதியம் 1 மணிக்கு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பொருள் காபூலில் இருந்து தஜிகிஸ்தான் வழியாக இந்தியா வரும் விமானம் புறப்பட்டுவிட்டது என்பதாக இருக்கலாம்.

24 ஆகஸ்ட்

லத்தீஃபாவின் விமானம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 9:40 மணிக்கு (இந்திய நேரப்படி) தரையிறங்கியது. தாயகம் திரும்பும் லத்தீஃபாவின் பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

அவர் தரையிறங்கியவுடன் நான் அவரை அழைத்து, ' தாயகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் லத்தீஃபா' என்று சொன்னேன்.

அவர் உடைந்து போனார். "இதை என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இங்கே இருக்கிறேன் ஆனால் என் கணவரும், குடும்பமும் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளது.

நான் அனுபவித்த துன்பங்கள் இப்போது தான் என் மனதில் பதிகிறது. காபூலில் இருந்தபோது, ​​நடந்துகொண்டிருந்த அனைத்தையும் பற்றி சிந்திக்க என்னிடம் ஒரு நிமிடம் கூட இருக்கவில்லை. ஆனால் துஷான்பே (தஜிகிஸ்தான்) இல் இறங்கியவுடன்தான், நடந்தவை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எனது கணவரும், அவரது பெற்றோரும் விரைவில் வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் இப்போது பிரார்த்திக்கிறேன். அதுவரை, நான் வீட்டை அடைந்துவிட்டது போல உணர முடியாது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :