You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரீஸ் படிந்த 91,500 நாணயங்களை சம்பளமாக கொடுத்த முதலாளி - விழி பிதுங்கிய முன்னாள் ஊழியர்
அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் இருக்கும் ஒரு வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய இறுதி சம்பளத்தை, 91,500 கிரீஸ் படிந்த நாணயங்களாக ஒரு முதலாலி கொடுத்தது சர்ச்சையாகியிருக்கிறது.
ஆண்ட்ரியால் ஃப்ளாடென் என்கிற ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய மொத்த தொகையே 915 அமெரிக்க டாலரதான். அதை கிரீஸ் படிந்த 91,500 சென்ட் நாணயங்களைக் கொடுத்திருக்கிறார் 'ஏ.ஓகே. வாக்கர் ஆட்டோ ஒர்க்ஸ்' என்கிற கடையின் உரிமையாளர் மைல்ஸ் வாக்கர்.
கிரீஸ் படிந்திருக்கும் நாணயங்களை, தான் ஒவ்வொரு நாணயமாக சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது எனக் கூறியுள்ளார் ஃப்ளாடென். ஏ.ஓகே. வாக்கர் ஆட்டோ ஒர்க்ஸ் நிறுவனம், இது குறித்து எந்த கருத்தையும் பொது வெளியில் பகிரவில்லை.
ஆனால் அவர்களது வலைதளத்தில், "ஆம், நாங்கள் பென்னிகளில் எங்களுக்கான பேமென்டைப் பெறுவோம்" என கூறியிருக்கிறார்கள்.
ஃப்ளாடென்னுக்கு நாணயங்களைக் கொடுத்தது தனக்கு நினைவு இல்லை என கூறினார் மைல்ஸ். "ஆனால் அவருக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். அவ்வளவு தான், அது தான் முக்கியம்" என சிபிஎஸ் 46 ஊடகத்தின் செய்தியாளர் ஒருவரிடம் உரிமையாளர் மைல்ஸ் வாக்கர் கூறினார்.
இது குறித்துப் பேசிய ஃப்ளாடென், தெற்கு அட்லான்டாவில் பீச்ட்ரீ நகரத்தில் இருக்கும் அந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் தாம் மேலாளராக பணி புரிந்ததாகவும், கடந்த நவம்பர் 2020-ல், வேலையை முடித்துக் கொண்டு தன் குழந்தையை பராமரிப்பு மையத்தில் இருந்து எப்போது அழைத்து வருவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் வேலையில் இருந்து வெளியேறியதாகவும் கூறினார்.
தமக்கு வந்து சேர வேண்டிய பணம் வராததால், ஃப்ளாடென், தொழிலாளர் துறையிடம் முறையிட்டு தனக்கான உரிமைத் தொகையைக் கோரினார். அதை அமெரிக்க தொழிலாளர் துறையும் உறுதி செய்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் துறை அக்கடையை மூன்று முறை தொடர்பு கொண்டதாகவும் கூறுகிறது.
கடைசியில் ஃப்ளாடெனுக்குக் கிடைக்க வேண்டிய தொகை, நாணய மலையாகக் கிடைத்தது. அந்த நாணய மலை மீது ஒரு கடிதம் இருந்தது. அதன் முகப்பில் தகாத வார்தை எழுதப்பட்டிருந்தது. உள்ளே ஃப்ளாடெனின் சம்பள விவரங்கள் இருந்தன.
அதை ஆண்ட்ரியல் ஃப்ளாடெனின் தோழி ஒலிவியா ஆக்ஸ்லே தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
தற்போது அந்த கிரீஸ் படிந்த நாணயங்கள் ஒற்றை சக்கரம் கொண்ட தள்ளு வண்டியில், ஃபயட்டெவில்லேவில் இருக்கும் அவரது வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் வைத்திருக்கிறார். அந்த தள்ளுவண்டியில் இருக்கும் நாணயங்களின் கணத்தால், அதன் சக்கரம் வெடித்துவிட்டது.
தனக்கு கொடுக்கப்பட்ட நாணயங்களை மொத்தமாக குளிக்கும் தொட்டியில் கொட்டி, தண்ணீர், சோப்பு, வினிகர் என பல வழிகளில் சுத்தம் செய்ய முயன்றதாகக் கூறுகிறார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இந்த நாணயங்களை ஒவ்வொன்றாக சுத்தம் செய்வது மட்டுமே ஒரே வழி என்கிறார் ஃப்ளாடென்.
100 சென்ட் தான் ஒரு டாலர். ஆக 5 டாலருக்கான நாணயங்களை சுத்தம் செய்யவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானது எனக் கூறுகிறார்.
ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தை இப்படிக் கொடுப்பது தார்மீக ரீதியில் சரியல்ல, அதே நேரத்தில் சட்ட விரோதமும் அல்ல.
"ஊழியர்களுக்கு எந்த கரன்சியில் அவர்களுக்கான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை" என அமெரிக்க தொழிலாளர் துறையைச் சேர்ந்த எரிக் ஆர் லுசெரோ கூறியதாக, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- சிமெண்ட் ஆலைகளால் சீரழிந்த தமிழக கிராமங்கள்: வரமே சாபமாகிய அரியலூர் அவலம்
- 'ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 கோடி கடன்': இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: