நடராஜன்: ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியவருக்கு ஊர்மக்கள் திரண்டு வரவேற்பு

நடராஜன்
பிரசுரிக்கப்பட்டது

மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார். இந்திய அணியை தொடரை வென்றது.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இன்று தனது சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் உறவினர் என ஆயிரக்கணக்கானோர் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.

சாரட்டு வண்டியில் வந்த நடராஜனை சின்னப்பம்பட்டி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

பட்டாசு

முன்னதாக நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக அவரின் ஊர் பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து அவரது வீட்டின் அருகே விழா மேடை அமைத்திருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் விழா மேடை அகற்றப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் சுகாதாரத்துறை தடை விதித்திருந்தது.

நடராஜன்

வெளிநாட்டில் இருந்து வருகைதரும் நடராஜன் அவரது வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அவரது குடும்பத்தினரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் அறிவுறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் யோசனையை மீண்டும் புறக்கணித்த விவசாயிகள்

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை மட்டுமே தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று விவசாயிகளுக்கும், அரசுக்கும் நடைபெற்ற பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் விவசாய சட்டங்களை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும், இருதரப்பு நபர்களையும் கொண்டு கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என அரசாங்கம் முன் வைத்த யோசனையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

மேலும் டெல்லு போலீஸ் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டெல்லுக்குள் நுழையக்கூடாது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாகவும் ஆனால் அதற்கு விவசாயிகள் வலுவாக மறுத்ததாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தங்களின் போராட்டம் நாடு தழுவிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய, இந்த சந்தேகநபர்களை விடுதலை செய்துள்ளார்.

கொழும்பு - ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்திற்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த நிலையில் கைதான 10 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடம் 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த, வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் கிடையாது என சட்ட மாஅதிபர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் அறிக்கையை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்ய தீர்மானித்துள்ளார்.

கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியில் தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான செப்புத் தொழிற்சாலையொன்று காணப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் பணிப்புரிந்த 10 பேர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மறுதினமான 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித சாட்சியங்களும் இல்லாமையால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 10 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

"சசிகலாவின் விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது"

அழகிரி

பட மூலாதாரம், K.S.ALAGIRI/FACEBOOK

சசிகலாவின் விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி

கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்; அப்போது, "மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும். அவரால் எங்களது கூட்டணியின் வாக்கு வங்கி பாதிக்ககூடாது என நினைக்கிறோம். எனவே, கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது," என தெரிவித்தார்.

"சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது. சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை."

"ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது.

7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது, ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: