You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியை குறிவைக்கும் ரஷ்ய உளவாளிகள்
- எழுதியவர், கிறிஸ் ஃபாக்ஸ், லியோ கெலியோன்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி), ஹேக்கர்கள் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.
எனினும், இதில் எந்தெந்த நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன அல்லது ஏதேனும் தகவல் திருடப்பட்டதா என்று அது குறிப்பிடவில்லை.
ஆனால் ஹேக்கர்களால் தடுப்பு மருந்து ஆராய்ச்சி பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா மறுப்புத் தெரிவித்துள்ளது.
"பிரிட்டனில் உள்ள மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை யார் ஹேக் செய்திருக்கலாம் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால், இந்த முயற்சிகளுக்கும் ரஷ்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்களால் சொல்ல முடியும்" என்று டாஸ் செய்தி முகமையிடம் பேசிய ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் ஹேக்கிங் சம்பவங்கள் குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு முகமைகள் வெளியிட்டுள்ளன.
ரஷ்ய அரசு இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தாலும், அந்த நாட்டின் உளவாளிகள் இதுபோன்ற ஹேக்கிங் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"சைபர் உலகில் இதுபோன்ற செயல்களை செய்தவர்களை கண்டறிவது கடினமானதே தவிர, சாத்தியமற்றது அல்ல" என்று கூறுகிறார் லண்டனை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநரான எமிலி டெய்லர்.
மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கூட்டாக குற்றஞ்சாட்டுவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "வழக்கமாக ஒரு சைபர் தாக்குதலில் சந்தேகம் ஏதாவது இருந்தால் அதை பாதுகாப்பு சேவைகள் வெளிப்படையாக குறிப்பிடமாட்டார்கள். ஆனால், இம்முறை அணுகுமுறை வேறுவிதமாக உள்ளது" என்று கூறினார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
"இந்த ஹேக்கிங் சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறப்படும் கோசி பியர் என்னும் குழுவினர் இதற்கு முன்பு சில ஹேக்கிங்களின்போது அவர்களுக்கு ரஷ்யாவுடன் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள்." என்கிறார் அவர்.
ஹேக்கிங் எப்படி நடந்தது?
இலக்கு வைக்கப்பட்ட கணினிகளிலுள்ள மென்பொருள் குறைபாடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும், அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினிகளிலிருந்து கோப்புகளைப் பதிவேற்றவும், பதிவிறக்கவும் வெல்மெயில் எனப்படும் மால்வேர்களை அவர்கள் பயன்படுத்தியதாகவும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனேடிய பாதுகாப்பு முகமைகள் தெரிவிக்கின்றன.
போலியான மின்னஞ்சல்களை அனுப்பி அதை திறக்க செய்வதன் மூலமும் மருந்து நிறுவன பணியாளர்களின் கணினிகளை ஹேக்கர்கள் கைப்பற்றியதாகவும் அது கூறுகிறது.
இந்த நிலையில், இந்த ஹேக்கிங் சம்பவங்களுக்கு பின்னால் வெறும் ரஷ்யர்கள் மட்டும் இருப்பதை போன்று தெரியவில்லை என்று மின்னணு பாதுகாப்பு வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோஸ் ஆண்டர்சன் கருத்து தெரிவிக்கையில், "ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஹேக்கர்கள் அந்த குழுவில் உள்ளனர். இதுபோன்ற தரவுகளை திருடுவதை அவர்கள் காலங்காலமாக செய்து வருகின்றனர்." என்கிறார்.
இந்த நிலையில், மேற்குலக நாடுகள் ஒரே சமயத்தில் இந்த ஹேக்கிங் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்புள்ளதாக கூறுவது அசாதாரணமான நிகழ்வு என்று கூறுகிறார் பிபிசியின் பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கான செய்தியாளரான கோர்டான் கோரேரா.
யார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?
இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையமானது இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஏபிடி29 அல்லது தி டியூக்ஸ் அல்லது கோசி பியர் உள்ளிட்ட பெயர்களில் அறியப்படும் குழுவுக்கு தொடர்புள்ளதாக கூறுகிறது.
மேலும், இந்த ஹேக்கிங் குழு ரஷ்ய உளவு அமைப்பின் ஒரு அங்கம் என்று 95 சதவீத உறுதியுடன் நம்புவதாக அது கூறுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரௌட் ட்ஸ்ட்ரைக் கூற்றுப்படி, கோசி பியர் முதன்முதலில் ஒரு குறிப்பிடத்தக்க "அச்சுறுத்தல் விளைவிக்கும் குழு" என்று 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது.
இந்த ஹேக்கிங் குழு தனது திட்டங்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவதை பாணியாக கொண்டுள்ளதாக அது மேலும் கூறுகிறது.
குறிப்பாக 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது அமெரிக்க ஜனநாயக தேசியக் குழுவை (டி.என்.சி) ஹேக்கிங் செய்ததில் இந்த குழு ஈடுபட்டதாக கூறப்பட்டது.
அதேபோன்று, கடந்த 2017ஆம் ஆண்டு நார்வேயின் தொழிலாளர் கட்சி, அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் நார்வேயின் தேசிய பாதுகாப்பு முகமையை இந்த குழுவினர் ஹேக் செய்தனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருக்கும் இந்த 5 நாடுகளை அறிவீர்களா?
- பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி
- கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை
- இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? - அதிபர் வெளியிட்ட கணக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :