சீதா ராமம், எண்ணித் துணிக, பொய்க்கால் குதிரை, குருதி ஆட்டம் - இன்று வெளியாகும் படங்கள், தொடர்களை எங்கு பார்க்கலாம்?

பட மூலாதாரம், Twitter/@Atharvaamurali
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சினிமா ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான வாரம். பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்கள் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகின்றன. இது தவிர, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஓடிடி ரிலீஸ்களும் இருக்கின்றன.
இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.
குருதி ஆட்டம்
அதர்வாவும் ப்ரியா பவானி சங்கரும் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார். 2017ல் வெளியான எட்டு தோட்டக்கள் படத்தின் மூலம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய ஸ்ரீ கணேஷின் அடுத்த படம் என்பதால் படத்தைச் சுற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மதுரையில் நடைபெறுவதுபோல கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஆசிரியையாக நடித்திருக்கிறார். மேலும் ராதிகா, ராதாரவி ஆகியோரும் படத்தில் இருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், படம் இப்போதுதான் வெளியாகிறது.
எண்ணித் துணிக

பட மூலாதாரம், Twitter/@AthulyaOfficial
ஜெய், அதுல்யா ரவி, சாம் சுரேஷ், வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கியிருக்கிறார். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வில்லன் சாம் சுரேஷிற்காக கொள்ளையடிக்க களமிறங்குகிறார் வம்சி கிருஷ்ணா. இந்தக் கொள்ளையை கதாநாயகனான ஜெய் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அதிரடியான ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிச்செல்வன். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
காட்டேரி
நகைச்சுவைப் பேய்ப் படங்களில் குறிப்பிடத்தக்க படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கியிருக்கும் படம்தான் இந்த காட்டேரி. அவருடைய பாணியிலேயே இதுவும் திகில் நகைச்சுவைப் படம்தான். வைபவ், வரலட்சுமி, கருணாகரன், சோனம் பஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய் என பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.
படத்தை ஸ்டுடியோ க்ரீன் பேனரில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். திகில் - நகைச்சுவைப் படங்களின் வருகை குறைந்திருக்கும் நிலையில், இந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கக்கூடும்.
பொய்க்கால் குதிரை

பட மூலாதாரம், Twitter/@PDdancing
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மகாதேவகி படங்களை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார், தன் பாணியிலிருந்து மாறுபட்டு இந்த முறை களத்தில் இறங்கியிருக்கிறார். பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, வரலட்சுமி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா காலை இழந்தவராக நடித்திருக்கிறார்.
கதிரவன் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபுதேவா, ஒரு விபத்தில் மனைவியையும் காலையும் இழந்துவிடுகிறார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. தனக்குக் கிடைக்கும் இழப்பீட்டுப் பணத்தில் செயற்கைக் காலை பொருத்திக்கொள்ள விரும்புகிறார். இதற்குப் பிறகு நடக்கும் திருப்பங்களே, இந்தப் படம். படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
Last 6 Hours (தமிழ்)
ஆறு மணி நேரத்தில் ஒரு மிகப் பெரிய கொள்ளையை நடத்தத் திட்டமிடுகிறது ஒரு குழு. ஆனால், எதிர்பாராத விதமாக பல சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. இந்த ஒன் - லைனை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் Last 6 Hours. பரத், ஆதில் இப்ராஹிம், அனு மோகன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜீவ் மேனனிடம் அசிஸ்டென்டாக இருந்த சுனிஷ் மோகன் இயக்கியிருக்கிறார்.
புல்லட் ட்ரெய்ன் (ஆங்கிலம், தமிழ்)

பட மூலாதாரம், Twitter/@BulletTrain
Maria Beetle என்ற பெயரில் வெளியான ஜப்பானிய நாவலைத் தழுவி உருவான நகைச்சுவை - ஆக்ஷன் திரைப்படம்தான் இந்த Bullet Train. பிராட் பிட்டும் சாண்ட்ரா புல்லக்கும் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டேவிட் லெய்ட்ச். டோக்கியோவிலிருந்து க்யோட்டோ நோக்கிச் செல்லும் புல்லட் ரயிலில் ஒரு பெட்டியை கைமாற்ற வேண்டும்.
அந்த வேலையை முடிக்க கதாநாயகன் செல்லும்போது ஏகப்பட்ட ஆபத்துகள் ரயிலில் நேரிடுகின்றன. அவ்வளவையும் சமாளித்து நாயகன் வேலையை முடித்தானா என்பது மீதிக் கதை. இந்தப் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகிறது.
DC League of Super-Pets (ஆங்கிலம், தமிழ்)

பட மூலாதாரம், Twitter/@DCSuperPets
இது ஒரு அனிமேஷன் திரைப்படம். சூப்பர் மேனும் க்ரிப்டோ என்ற நாயும் நண்பர்கள். சூப்பர் மேனுக்கு இருக்கும் பல சக்திகள் க்ரிப்டோவும் உண்டு. திடீரென சூப்பர் மேனை யாரோ கடத்திவிட, மீட்கும் முயற்சியில் இறங்குகிறது க்ரிப்டோ.
இந்தப் படம் உலகமெங்கும் ஜூலை மாதமே வெளியாகிவிட்டது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதிதான் வெளியாகிறது. ஏற்கனவே படம் பார்த்தவர்கள், பரவாயில்லை என்கிறார்கள்.
சீதா ராமம் (தமிழ், தெலுங்கு, மலையாளம்)

பட மூலாதாரம், Twitter/@dulQuer
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த இந்தப் படத்தை ஹனு ராகவுபுடி இயக்கியிருக்கிறார். படத்தில் ராஷ்மிகா மந்தனா, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இருக்கிறார்கள். மகாநடி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான துல்கர் சல்மானுக்கு இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தில் அவர் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.
பிம்பிசாரா (தெலுங்கு)

பட மூலாதாரம், Twitter/@NANDAMURIKALYAN
என்.டி. ராமாராவின் பேரனான கல்யாண் ராம் நாயகனாக நடித்திருக்கும் படம் இது. கேதரீன் தெரசா, சம்யுக்தா மேனன், வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். பழங்கால மன்னனான பிம்பிசாரரின் காலத்திலும் தற்காலத்திலும் நடப்பதுபோல கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு மரகதமணி பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பரிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம், கோவிட் பரவல் காரணமாக இப்போது வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பது மல்லிடி வசிஷ்ட்.
திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படங்களைத் தவிர, Sandman (Netflix), Darlings (), Victim (Sonyliv) ஆகியவை ஓடிடியில் வெளியாகவுள்ளன.
சாண்ட்மேன் (Sandman (Netflix))

பட மூலாதாரம், Twitter/@Netflix_Sandman
நீல் கெய்மென் உருவாக்கிய காமிக்ஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் இது. 1916ல் செய்வினை செய்பவர்கள், கனவின் அரசனான மார்ஃபியஸை பிடித்துவைத்துக்கொள்கிறார்கள். 106 ஆண்டுகள் கழிந்த நிலையில், அங்கிருந்து தப்பும் மார்ஃபியஸ் தன் கனவு தேசத்தை சரிசெய்ய என்ன செய்கிறான் என்பதே கதை.
மொத்தம் பத்து எபிசோட்களோடு நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது இந்தத் தொடர். சூப்பர் நேச்சுரல், சூப்பர் ஹீரோ, ஃபேண்டஸி வகை தொடர்கள் பிடிக்கும் என்றால், நிச்சயம் பார்க்கலாம்.
டார்லிங்க்ஸ் (Darlings (Netflix))

பட மூலாதாரம், Twitter/@aliaa08
ஆலியா பட், ஷெஃபாலி ஷா, விஜய் வர்மா ஆகியோர் நடித்திருக்கும் இந்த இந்திப் படத்தை இயக்கியிருப்பது ஜஸ்மீத் கே. ரீன். மும்பையில் பழமைவாத, கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நடக்கும் கதை இது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
விக்டிம் (Victim - Sony liv)

பட மூலாதாரம், TWITTER/PRASANNA_Actor
நான்கு கதைகள், நான்கு இயக்குனர்கள் என ரொம்பவுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் இது. சிம்புதேவன், எம். ராஜேஷ், பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் இந்தப் படங்களை இயக்கியிருக்கிறார்கள். குரு சோமசுந்தரம், கலையரசன், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா, அமலா பால், கிருஷ், தினேஷ், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சிம்பு தேவன் கொட்டைப் பாக்கு வத்தலும் மொட்டை மாடி சிதாரும் என்ற படத்தையும் எம். ராஜேஷ் மிராஜ் என்ற படத்தையும் பா. ரஞ்சித் தம்மம் என்ற படத்தையும் வெங்கட்பிரபு கன்ஃபெஷன் என்ற படத்தையும் இயக்கியிருக்கின்றனர்.
இது தவிர, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான மகா, Aha ஓடிடியில் வெளியாகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























