பனிக்குட நீர் பரிசோதனை யாருக்கு அவசியம்? 35 வயதுக்கு மேல் கருவுறும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Tannaz irani/FB

படக்குறிப்பு, 40 வயதில் இரண்டாவது குழந்தையைப் பெற்ற நடிகை தன்னாஸ் இரானி, அப்போது தனக்கு ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை செய்ய வேண்டியிருந்ததாகவும் கூறினார்
    • எழுதியவர், சரண்ஜித் கவுர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பாலிவுட் நடிகைகளான கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன், ஃபரா கான் அல்லது அமெரிக்க நடிகை ஹாலே பெர்ரி என நாற்பது வயதுக்கு மேல் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு உதாரணங்கள் பல உள்ளன.

நாற்பது அல்லது அதைவிட அதிக வயதிலான பெண்கள் தாயாக முடிவு செய்யும் காலம் இது.

இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான தன்னாஸ் இரானி, 30 முதல் 40 வயதுக்குள் குழந்தை பெற்றெடுப்பதில் உள்ள ஆபத்துகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

"எனக்கு 40 வயதாக இருந்தபோது இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு 'ஆம்னியோசென்டெசிஸ்' எனப்படும் பனிக்குட நீர் பரிசோதனை செய்யப்பட்டது" என்று அவர் சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் கூறினார்.

பிறக்கப் போகும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது ஏதேனும் முதுகெலும்பு தொடர்பான குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஏனெனில், இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வதைவிட நாற்பது மற்றும் அதற்கு மேலான வயதில் குழந்தை பெற்றெடுக்கும்போது, ஆபத்துகள் அதிகமாக இருக்கும்.

தன்னாஸ் இரானி குறிப்பிட்ட அந்த அம்னியோசென்டெசிஸ் பரிசோதனை என்றால் என்ன? அது எப்போது, எப்படி செய்யப்படுகிறது? இந்தப் பரிசோதனை கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா, இதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? டவுன் சிண்ட்ரோம் மற்றும் மரபணு நோய்களைக் கண்டறிய வேறு ஏதேனும் பரிசோதனைகள் உள்ளனவா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களுடன் பிபிசி பேசியது.

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Getty Images

அம்னியோசென்டெசிஸ் பரிசோதனை என்றால் என்ன?

கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஒரு சிறப்பு மருத்துவப் பரிசோதனையே 'அம்னியோசென்டெசிஸ்'. குழந்தைக்கு மரபணுக் குறைபாடுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மரபணு கோளாறுகள் என்பவை பெற்றோர்கள் இருவரிடம் இருந்தோ அல்லது அவர்களில் ஒருவரிடம் இருந்தோ குழந்தைகளுக்குக் கடத்தப்படும் குறைபாடுகள் ஆகும்.

லூதியானாவில் உள்ள சிஎம்சி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறைத் தலைவரான பேராசிரியர் மருத்துவர் தபஸ்யாதர் இந்தப் பரிசோதனை முறை பற்றி விளக்குகிறார்.

"அல்ட்ராசவுண்ட் உதவியுடன், ஒரு ஊசி மிகவும் கவனமாக கருப்பைக்குள் செலுத்தப்பட்டு, குழந்தையின் உறுப்புகள் அல்லது பிற முக்கிய உடல் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படாத ஒரு பகுதியில் இருந்து சிறிய அளவு பனிக்குட நீர் எடுக்கப்படுகிறது. இந்த திரவம் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் திரவத்தில் உள்ள செல்களை கொண்டு, மரபணு மற்றும் குரோமோசோம் சார்ந்த குறைபாடுகள் உள்ளனவா என்பது கண்டறியப்படுகிறது."

"இந்தப் பரிசோதனை பொதுவாக கர்ப்பத்தின் 15 முதல் 20 வாரங்களுக்குள் செய்யப்படுகிறது. இதற்கு முன்பாகவும் இதைச் செய்ய முடியும். இவ்வாறு முன்கூட்டியே செய்யப்படும் பரிசோதனை 'கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங்' (நஞ்சுக்கொடி திசு ஆய்வு) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை 11 முதல் 13 வாரங்களுக்குள் செய்யப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருவைச் சுற்றியுள்ள திரவம் ஊசியைப் பயன்படுத்தி எடுக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம், எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற மரபணு நோய்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய அம்னியோசென்டெசிஸ் பரிசோதனை செய்யப்படுவதாக பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

டவுன் சிண்ட்ரோம் என்பது ஒரு மரபணு ரீதியான பாதிப்பு. இதன் காரணமாக, உடல் மற்றும் மன வளர்ச்சி சாதாரண நிலையைவிட மெதுவாக நடக்கும்.

எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் என்பது மிகவும் அரிதான ஒரு மரபணு பாதிப்பு. இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆயுட்காலம் மிகக் குறைவு.

இதுகுறித்து மேலும் தகவல் அளித்த மருத்துவர் தபஸ்யா, மரபணு குறைபாடுகளுடன் சேர்த்து, தலசீமியா குழந்தைகளுக்கு ஏற்படும் தண்டுவடக் குறைபாடுகள், தசைநார் சிதைவு நோய் மற்றும் சில ரத்தக் கோளாறுகள் குறித்துக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை செய்யப்படுவதாகக் கூறினார்.

"எந்த குரோமோசோமில் குறைபாடு உள்ளது என்பதை இந்தப் பரிசோதனை அடையாளம் காட்டுகிறது. உதாரணமாக, டவுன் சிண்ட்ரோம் இருந்தால் 21வது குரோமோசோமில் குறைபாடு இருக்கும். இதேபோல், வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு குரோமோசோம் எண்கள் உள்ளன. பரிசோதனை முடிவுகள் இயல்பானதாக(Normal) இருந்தால், குழந்தை 99% ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உள்ளது" என்று மருத்துவர் தபஸ்யா விளக்கியுள்ளார்.

"மரபணு மாற்றம் அல்லது வேறு ஏதேனும் தீவிரமான பிரச்னைகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால், அவற்றை உறுதிப்படுத்த மேலும் பல மேம்பட்ட அதிநவீன பரிசோதனைகளும் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

இந்த பரிசோதனை எப்போது செய்யப்படுகிறது?

குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்போது, கர்ப்பிணிகளுக்கு அம்னியோசென்டெசிஸ் பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

"கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஸ்கிரீனிங் பரிசோதனைகளில், அம்னியோசென்டெசிஸ் மூலம் கண்டறியக்கூடிய ஏதேனும் ஒரு நோய் குழந்தைக்கு இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், இந்தப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், குழந்தையின் தந்தைக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கோ அதுபோன்ற மரபணு நோய்கள் இருந்தால்கூட இந்தப் பரிசோதனை தேவைப்படும்" என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

வயது முதிர்ந்த நிலையில் கர்ப்பமாகும் பெண்களுக்கு இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

"தற்போது பல பெண்கள் 35 வயதுக்குப் பிறகுதான் தாயாக விரும்புகிறார்கள். சில பெண்கள் செயற்கை கருத்தரித்தல் முறை (IVF) மூலம் 40 வயதில் கர்ப்பமடைகிறார்கள்" என்று மருத்துவர் தபஸ்யா கூறினார்.

"வயது அதிகரிக்கும்போது, டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதனால்தான் நாங்கள் இந்தப் பரிசோதனையைப் பரிந்துரைக்கிறோம்" என்று அவர் கூறினார்.

"முதலில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வோம். அதில் குழந்தைக்கு மரபணு நோய் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால், மற்றொரு ஸ்கிரீனிங் பரிசோதனை செய்வோம். அந்தப் பரிசோதனையிலும் பிரச்னை இருப்பது உறுதியானால் மட்டுமே அம்னியோசென்டெசிஸ் செய்வோம். இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளிலும் குழந்தைக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்று தெரிந்தால், அம்னியோசென்டெசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது" என்று மருத்துவர் தபஸ்யா மேலும் கூறினார்.

35 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு அம்னியோசென்டெசிஸ் பரிசோதனை அவசியமா?

பட மூலாதாரம், Getty Images

யாருக்கெல்லாம் 'அம்னியோசென்டெசிஸ் பரிசோதனை' அவசியம்?

"அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அம்னியோசென்டெசிஸ் சோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு முன் பல சோதனைகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, இரட்டை மார்க்கர் சோதனை. கர்ப்பத்தின் 11 முதல் 13 வாரங்களுக்கு இடையில் லெவல்-1 அல்ட்ராசவுண்ட் செய்யப்படுகிறது. இதை 'என்.டி ஸ்கேன்' என்றும் அழைப்பார்கள். இரட்டை மார்க்கர் சோதனை என்பது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையாகும்," என்கிறார் மகளிர் மருத்துவ நிபுணர் யுக்தா சர்மா.

"இந்தப் பரிசோதனைகளில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டால், 'நான்-இன்வேசிவ் ப்ரீநேட்டல் டெஸ்ட்' செய்யப்படுகிறது. இதுவும் ஒருவகை ரத்தப் பரிசோதனைதான். இந்தப் பரிசோதனைகளிலும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் மட்டுமே அம்னியோசென்டெசிஸ் செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்" என்று மருத்துவர் யுக்தா சர்மா கூறினார்.

"கர்ப்பிணிக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ அல்லது வயது முதிர்ந்து கர்ப்பம் தரித்தாலோ மட்டுமே அம்னியோசென்டெசிஸ் செய்யப்படுவதில்லை. அதற்கு முன்பாகச் செய்யப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு ஏதேனும் கடுமையான ஆபத்து இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பரிசோதனைகள் மிகவும் அரிதாகவே செய்யப்பட்டன. இதற்கு முன்பு டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமே இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, இவை மிகவும் விலையுயர்ந்த பரிசோதனைகளாகவும் இருந்தன. ஆனால் இப்போது குறைந்த செலவில், அதிக எண்ணிக்கையிலான ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனைகளைச் செய்ய முடிகிறது" என்று மருத்துவர் தபஸ்யா கூறினார்.

"இந்தியாவில் தற்போது அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. சில பெண்கள் தங்களுக்கு முதலில் பிறந்த குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அடுத்து கருவுறும்போது பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வதற்காக மேம்பட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் வெளிநாடுகளுக்கு கூட செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது" என்று அவர் கூறினார்.

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Getty Images

அம்னியோசென்டெசிஸ் எனப்படும் பனிக்குட நீர் பரிசோதனைக்குப் பிறகு கருச்சிதைவு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. இந்த ஆபத்து 200 கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் இருக்கலாம். கர்ப்பப்பையில் இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகம் என்று தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

ஹெச்.ஐ.வி பாசிட்டிவ், ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி உள்ள கர்ப்பிணிக்கு இந்தப் பரிசோதனையைச் செய்வதால், அந்தத் தொற்றுகள் குழந்தைக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆபத்துகளைப் பற்றி மருத்துவர் அல்லது நிபுணர் குழுவினர் கர்ப்பிணியுடன் முன்கூட்டியே கலந்துரையாடுவார்கள்.

இந்தச் செயல்முறையின்போது ஒரு மெல்லிய ஊசி கருப்பைக்குள் செலுத்தப்பட்டு திரவம் எடுக்கப்படுவதால், சில சந்தர்ப்பங்களில் கருச்சிதைவு அல்லது தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருக்கலாம் என்றும், சிலருக்கு பரிசோதனைக்குப் பிறகு லேசான வலிகூட இருக்கலாம் என்றும் மருத்துவர் தபஸ்யா கூறினார்.

"இது ஒரு சாதாரண பரிசோதனை அல்ல, ஏனென்றால் அந்த நேரத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது" என்று மருத்துவர் யுக்தா கூறினார்.

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறைபாடு கண்டறியப்பட்டால், தகுந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கர்ப்பத்தைத் தொடர்வதா வேண்டாமா என்பதை அந்தப் பெண் தீர்மானிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

குழந்தைக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் என்ன செய்வது?

கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் மருத்துவ பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தால், மருத்துவர்கள் அதுகுறித்த விளைவுகளை விளக்கி, கர்ப்பிணிக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குகிறார்கள்.

அதன் பின், கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டுமா என்பதை அந்தப் பெண் முடிவு செய்யலாம்.

"குழந்தையின் எதிர்காலத்திற்குக் கடுமையான ஆபத்து இருக்கும் பட்சத்தில், 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவருக்கு இந்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது" என்று மருத்துவர் தபஸ்யா கூறினார்.

இருப்பினும், மருத்துவ ரீதியாகக் கர்ப்பத்தைக் கலைத்தல் (திருத்தச்) சட்டத்தின் விதிமுறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"கர்ப்பத்தைக் கலைக்க விரும்பும் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் மனநல ஆதரவும் அளிக்கப்படுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

"கருவில் குறைபாடு இருந்தபோதிலும் கர்ப்பத்தைத் தொடர விரும்பும் பெண்களிடம் இருந்து நாங்கள் ஒப்புதல் படிவத்தைப் பெறுகிறோம். அனைத்து விவரங்களையும் முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னரே அவர்கள் தங்கள் முடிவை எடுக்கிறார்கள்" என்று தபஸ்யா விளக்கினார்.

ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Getty Images

"இந்தப் பரிசோதனை பிசி-பிஎன்டிடி (கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு முந்தைய கண்டறிதல் தொழில்நுட்பங்கள்) சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது அம்னியோசென்டெசிஸ் என எந்தவொரு பரிசோதனையின் போதும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலினத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இந்தப் பரிசோதனைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன," என்று மருத்துவர் யுக்தா சர்மா கூறினார்.

"எனவே, அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் மட்டுமே இப்பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோயாளியின் முகவரி, அடையாளச் சான்று மற்றும் பரிந்துரைக்கும் மருத்துவர் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். எந்த நோயாளிக்கு இப்பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தெளிவான பதிவு இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

"அல்ட்ராசவுண்ட் அல்லது ஃபீட்டல் மெடிசின் எனப்படும் கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனைகளைச் செய்ய முடியும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்தப் பரிசோதனைகளைச் செய்வது சாத்தியமில்லை. மருத்துவர்களும்கூட, இதற்குத் தேவையான படிவங்களை முன்கூட்டியே பூர்த்தி செய்து, தங்கள் பெயர், பதிவு எண், முத்திரை போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்" என்று சர்மா கூறினார்.

"பரிசோதனைக்கு முன் கர்ப்பிணியின் ஒப்புதல் பெறப்படுகிறது; இதற்கு கணவன் மற்றும் மனைவி இருவரின் கையொப்பங்களும் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு இம்முறை குறித்து விளக்கம் அளிக்கப்படுவதோடு, சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.

இந்தப் பரிசோதனைச் செயல்முறை என்ன என்பது அவர்களுக்கு விவரிக்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதை அவர்களிடம் கூற வேண்டும்" என்று அவர் விளக்கியுள்ளார்.

"இந்தப் பரிசோதனைக்காக நோயாளி, கருவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயிற்சி பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களிடம் மட்டுமே அனுப்பப்படுவார்" என்று மருத்துவர் தபஸ்யா தெரிவித்தார்.

பிரசவத்திற்கு முந்தைய கண்டறிதல் தொழில்நுட்பங்கள் (பாலினத் தேர்வு தடை) சட்டம், 1994இன் படி, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கூறுவது சட்டவிரோதமானது. பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதும், இந்த விதியை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதும் இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் பிஎன்டிடி சட்டம் அமலில் உள்ளதால், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும்போதோ அல்லது அம்னியோசென்டெசிஸ் செய்யும் போதோ குழந்தையின் பாலினத்தை யாரும் கூற மாட்டார்கள் என்று மருத்துவர் சர்மா கூறினார்.

"அம்னியோசென்டெசிஸ் பரிசோதனையின்போது, நாங்கள் குழந்தையின் மரபணு அமைப்பை மட்டுமே ஆராய்வோம். அதாவது மரபணுக்கள் இயல்பாக இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரிசோதிக்கிறோம்" என்று அவர் விளக்கினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு