'சர்வைவர்' நிகழ்ச்சி: லேடி காஷ் முன்வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், @ladykashonline instagram
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தினமும் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து அதன் போட்டியாளர்களுள் ஒருவரான ஹிப்ஹாப் கலைஞரான பாடகி லேடி காஷ் வெளியேறி இருக்கிறார். ஆனால், தான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன் எனவும் நிகழ்ச்சியில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன எனவும் அடுக்கடுக்காக நிகழ்ச்சி தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் காஷ். என்ன நடந்தது? 'சர்வைவர்' நிகழ்ச்சி தரப்பு என்ன சொல்கிறது?
சர்ச்சைகளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும்
பொதுவாக ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கும்போது கூடவே சர்ச்சைகளும் பின் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. போட்டியாளர்கள் மூலமாகவோ அல்லது நிகழ்ச்சி தரப்பு, நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் சண்டை, நிகழ்ச்சி அரசியல் என ஏராளமான காரணங்கள் இதன் பின்னணியில் இருக்கும்.
மேலும், போட்டியாளர்களின் உணர்ச்சிப்பூர்வமான கதைகள் அதை வியாபாரமாக்குவது, நகைச்சுவை என்ற பெயரில் உருவக் கேலி என தமிழில் முன்னணி தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பும். அந்த வகையில் தற்போது தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'சர்வைவர்' போட்டியாளரான லேடி காஷ் அந்த நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தனது சமூக வலைதள பக்கங்களிலும், யூடியூப் சேனலிலும் பதிவேற்றி உள்ளார்.
சர்வைவர் நிகழ்ச்சி
புகழ்பெற்ற ஸ்வீடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'எக்ஸ்பிடிஷன் ராபின்சன்', சார்லி பார்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்துதான் 'சர்வைவர்' நிகழ்ச்சி முதன் முதலாக 2000-ம் வருடம் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது.

பட மூலாதாரம், @ZEETAMIZH, INSTAGRAM
அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சீசன்களை கடந்திருக்கிறது இந்த 'சர்வைவர்'.
சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி விடுவார்கள். இந்த 18 போட்டியாளர்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து, அடர்ந்த காட்டுக்குள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். இதில், தனக்கு தேவையான உணவு, தண்ணீர், நெருப்பு என அடிப்படையான தேவைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்தப் போட்டியில் போட்டியாளர்களுக்குள் தங்களுக்குள்ளே 'சர்வைவர்' யார் என தேர்ந்தெடுக்கவும், நீக்கவும் ஓட்டுகள் வழங்க அனுமதியளிக்கப்படும். போட்டியில் கொடுக்கப்படும் கடினமான சவால்களை சமாளித்து இறுதியில் மிஞ்சும் ஒருவரே நிகழ்ச்சியின் 'சர்வைவர்'.
போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் கடினமான சவால்கள்
முன்பே சொன்னது போல, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு தனித்தீவில் விட்டு விடுவார்கள். நடுவில் இருக்கும் மூன்றாவது தீவில் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் Task-க்காக வருவார்கள். தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் ஆப்பிரிக்காவில் இருக்கும், ஜான்சிபார் தீவுகளில் நடக்கிறது. மொத்தம் 90 நாட்கள் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சவால்களோடு சேர்த்து, 90 நாட்கள் அங்கு 'சர்வைவ்' ஆவதற்கும் கடினமான சூழலே இருக்கும்.
மண் தரையில் படுப்பது, குடிநீர், உணவு, காட்டுக்குள் இருப்பிடம், குளிப்பது, பல் விளக்குவது என அன்றாட செயல்கள் அனைத்திற்குமே போட்டியாளர்கள் போராட வேண்டும். இரண்டு குழுக்களும் அணி மனப்பான்மையோடு செயல்படாது குழுக்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து வெளியே அனுப்புவது போல 'சர்வைவர்' நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பரபரப்பை ஏற்படுத்திய லேடி காஷின் குற்றச்சாட்டுகள்
தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்திருக்கும் நிலையில், இந்திரஜா முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 8 நாட்களில் நிகழ்ச்சி முடியவிருக்கும் நிலையில் தன்னை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள் என குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் லேடி காஷ்.

பட மூலாதாரம், @ladykashonline instagram
நானாக இதில் இருந்து வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். அதற்கான சூழ்நிலை அங்கு அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை. அது தன்னை மனதளவில் மிகவும் காயப்படுத்தி இருப்பதால், நிகழ்ச்சி தயாரிப்பு குழு மீது மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் லேடி காஷ்.
மேலும், தனக்கு அதிகம் பேட்டிகள் கொடுக்க பிடிக்காது எனவும் ஆனால் தவறு நடந்தால் அதை தைரியமாக பயப்படாமல் முன்வந்து பேசக்கூடிய நபர்தான் எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். நியாயம் தன் பக்கம் உள்ளதாகவும் மக்கள் ஆதரவு தனக்கு உள்ளதாகவும் பேசியுள்ளார்.
'உயிருக்கு மதிப்பில்லை'
அங்கு போட்டியாளர்கள் மூன்று பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். மேலும் அங்கு வேறு சில போட்டியாளர்களுக்கும் உடல் நிலை சரியில்லாத போதும், தனக்கும் சேர்த்து கோவிட் பரிசோதனை செய்தார்கள் ஆனால் தனக்கு கோவிட் அந்த பரிசோதனையில் இல்லை என தெரியவந்த போதும், கோவிட்கான அறிகுறிகள் தனக்கு இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார் லேடி காஷ்.

பட மூலாதாரம், @ladykashonline instagram
தன்னால் உடனே மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியுமா என கேட்டார்கள். எனக்கு எனது உடல் நலனே முக்கியம் என்று கூறினேன். 48 நாட்கள் அங்கிருந்து போட்டியில் பங்கேற்று, முதல் எட்டு போடியாளர்களுள் ஒருவராக தேர்வானேன். ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், உயிருக்கு மதிப்பாளிக்காமல் என்ன போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்கிறார் லேடி காஷ். நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காவே எங்களது உடல்நலன் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இப்படி செயல்படுகிறார்கள். இதனால், மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காஷ். இந்த தகவல்களை தனது சமூக வலைதள பக்கத்தில் #REALITYINJUSTICE என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகிறார்.
நிகழ்ச்சி தரப்பு என்ன சொல்கிறது?
லேடி காஷ் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், உண்மையில் சர்வைவர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது தெரிந்து கொள்ளவும் ஜீதமிழ், 'சர்வைவர்' நிகழ்ச்சி தயாரிப்பு குழுவிடம் பேசினோம்.
"லேடி காஷ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறோம். இவை எல்லாம் ஆதாரமற்றவை. இது குறித்தான விரிவான விளக்கம் நிச்சயம் ஜீ தமிழ் தொலைக்காட்சி தரப்பிடம் இருந்து விரைவில் வெளியாகும். 'சர்வைவர்' நிகழ்ச்சியுடன் ஒப்பந்தம் இருக்கும் போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் ஒப்பந்தத்தை மீறி சோஷியல் மீடியாவில் இது போன்று குற்றச்சாட்டுகளை வைப்பது நல்லதல்ல. விரைவில் இது குறித்து பேசுவோம்" என்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















