"பிரசார பாடல் கேட்டு ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை"- பாடகர் அந்தோணிதாசன் நேர்காணல்!

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

அந்தோணிதாசன்... 'அடி மானே..மானே!' என கணீரென குரலெடுத்து பாடும்போது கேட்பவர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. 'மேயாத மான்' படத்தில் தங்கச்சி பாடல், 'பேட்ட'படத்தில் ஆஹா கல்யாணம், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது என கடந்த சில வருடங்களில் நாம் முணுமுணுத்த பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர்.

பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர். 'அவியல்' படத்தை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். நாட்டுப்புற பாடல்கள், சினிமா, தேர்தல் பிரசார பாடல்கள் என பல விஷயங்களை பிபிசி தமிழிடம் பேசினார். அவரது நேர்காணலில் இருந்து....

சமீபத்துல ஒரு கட்சியின் தேர்தல் விளம்பர பாடலுக்காக நீங்க பாடின "ஸ்டாலின்தான் வராரு" பாட்டு பயங்கர ஹிட். அந்த வாய்ப்பு எப்படி வந்தது? ஒரு அரசியல் கட்சிக்காக பாடியது ஏன்?

"மதன் கார்க்கி என்னுடைய நண்பர். அவர் மூலமாதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அரசியல் தொடர்பான பாடல்கள் பாடக்கூடாது, அப்படிங்கற முடிவுல இருந்தேன். ஆனா, எனக்கு திரைத்துறையில பல வாய்ப்புகள் கொடுத்த மதன் கார்க்கி கேட்டபோது மறுக்க முடியலை. இதுமட்டுமில்லாம, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி காலத்துல நடந்த 'சென்னை சங்கமம்' மாதிரியான நிகழ்ச்சி மூலமா என்னை மாதிரியான பல நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் வெளிய தெரிஞ்சாங்க. எங்களுடைய வாழ்வாதாரமும் மேம்பட்டது. அதனால, இந்த வாய்ப்பு கிடைச்ச போது என்னுடைய நன்றிக்கடன் திருப்பி செலுத்தற விதமாதான் இந்த தேர்தல் பிரச்சார பாட்டை பாடினேன். தேர்தல் முடிவுகளுக்கு முன்னாடி ஸ்டாலின் அய்யாவை மரியாதை நிமித்தமா சந்திச்ச போது, இந்த பாடலை பாடினதை பத்தி சொன்னேன். 'நீங்கதானா அது? அருமையா பாடியிருக்கீங்க'ன்னு சொன்னார். என்னுடைய சினிமா பாடல்கள் போலவே இந்த பாட்டும் ஹிட்டாகி பலர்கிட்டையும் கொண்டு போய் சேர்த்ததுக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மதன் கார்க்கிக்கும் இந்த பாட்டுடைய இசையமைப்பாளர் ஜெரால்டுக்கும் நன்றி".

நாட்டுப்புற கலைஞரா இருந்து சினிமாவுக்குள்ள வந்த கதையை சொல்லுங்க? எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

"ஆரம்ப காலங்களில் கோயில் திருவிழாக்கள்ள ஒரு கரகாட்ட கலைஞனா, ஊர் மேடைகளில் பாடல்கள் பாடக்கூடிய ஒரு கிராமிய இசைக்கலைஞனா என் வாழ்க்கையை தொடங்கினேன். அதுக்கு பிறகு நிறைய இசைக்கச்சேரிகள் பண்ணினேன். அங்க பாடகி சின்னபொண்ணு அக்கா அறிமுகமானாங்க. அவங்க மூலமா நடிகர் கருணாஸ் அண்ணன் அறிமுகமாகி, அவர் மூலமா சினிமால 2007வது வருஷம் 'திண்டுக்கல் சாரதி' படத்துல பாடுவதற்கான வாய்ப்பு கிடைச்சது. பாடகர், பாடலாசிரியர், நடிகர், இசையமைப்பாளர் அப்படின்னு அடுத்தடுத்து இந்த பயணம் போய்ட்டு இருக்கறது சந்தோஷமா இருக்கு."

உங்க மனைவி ரீட்டாவும் நாட்டுப்புற இசைக்கலைஞர். இசைல உங்க ரெண்டு பேருடைய பயணம் பற்றி சொல்லுங்க?

"கரகாட்ட கலைஞர்களா ஆரம்ப காலத்துல வாழ்க்கையை தொடங்கிய போது வெளியவே சொல்ல முடியாத அளவுக்கு எனக்கும் என்னுடைய மனைவி ரீட்டாவுக்கும் நிறைய அவமானங்கள், புறக்கணிப்புகள், வசவுகள் எல்லாமே இருந்தன. குறிப்பாக, இரவு நேரங்கள்ள ஊருல கச்சேரிகள் ஆரம்பிச்சா அவசரத்துக்கு ஒதுங்கறதுக்கு கூட என்னுடைய மனைவிக்கு அங்க வசதி இருக்காது. இரவு முழுக்க அவங்க எங்கையும் நகர முடியாது. அதெல்லாம் இப்போ நினைச்சு பார்த்தாலும் அவ்வளவு கஷ்டமா இருக்கு. அதுக்கு பிறகு, சினிமாக்குள்ள வந்த பிறகுதான் எங்களுடைய நிலை இப்போ ஓரளவு மாறியிருக்கு. என்னுடைய மனைவி இப்போ குடும்பத்தை கவனிச்சுட்டு கிடைக்கற வாய்ப்புகளையும் பயன்படுத்திட்டு எனக்கு உறுதுணையா இருக்காங்க. சமீபத்துல வெளியான 'கர்ணன்' படத்துல 'மஞ்சனத்தி புராணம்' பாட்டுலையும் அவங்க இடையில பாடியிருந்தாங்க".

நாட்டுப்புற இசைக்கலைஞரான உங்களுக்கு கடந்த ஓராண்டாக கொரோனாவால் ஏற்பட்ட முடக்கம், எந்தளவுக்கு சவாலானதா இருந்தது?

"கொரோனா காலக்கட்டம் அப்படின்னு சொல்லப்படக்கூடிய இந்த ஒரு வருஷம் மட்டும் இல்லை, கடந்த சில வருஷங்களாவே நாட்டுப்புற கலைஞர்களுக்கு சவாலான ஒரு காலக்கட்டமாதான் இருக்கு. தானே புயல் மாதிரியான இயற்கை பேரிடர்கள் மக்களை கடுமையா பாதிச்சது. இதுல பல கலைஞர்கள் தங்களோட வாழ்வாதாரத்தை இழந்து கலையை விட்டுட்டு வேற தொழில்களுக்கு நகர வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் உருவாச்சு. சினிமாலையும் இதே மாதிரியான ஒரு நிலைதான் கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலா இருக்கு அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். இந்த நிலை மாறனும் அப்படின்னு சககலைஞனாக மட்டுமில்லாம, மனிதனாவும் ஆசைப்படறேன்".

சினிமாவுல பல ஹிட் பாடல்கள் பாடியிருக்கீங்க. தனியிசை, நாட்டுப்புற பாடல்களுக்கான களம் விரிவடைந்திருக்கிறதா? மக்களிடம் வரவேற்பு கூடி இருக்கிறதா?

"சினிமா பாடல்கள் ஹிட் அப்படின்னா ஒரே நேரத்துல உலகம் முழுக்க பலர்கிட்டயும் போய் சேரும். ஆனா, நாட்டுப்புற பாடல்கள் அப்படி இல்ல. அந்த ஊர் மக்கள் கிட்ட மட்டும்தான் போய் சேரும். என்னை மாதிரியான பல நாட்டுப்புற கலைஞர்கள் இப்போ சினிமாக்குள்ள வரது நாட்டுப்புற பாடல்களை இன்னும் அதிக மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கான ஒரு பெரிய தளமா இருக்கு. இப்போ சமூகவலைதளங்களோட வளர்ச்சி நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு. அப்படி இருக்கும் போது சினிமால கதைக்கு தேவையானதை பாடறதுங்கறதை தாண்டி, சமூக வலைதளங்கள் மூலமா தனியிசையையும், நாட்டுப்புற பாடல்களையும் கொண்டு போய் மக்கள் கிட்ட சேர்க்கறது இன்னும் எளிமையாகி இருக்கு. இதுக்கான வரவேற்பும் மக்கள்கிட்ட நல்லாவே இருக்கு".

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகற சில இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் போட்டியாளர்களா களமிறங்கறாங்க. அவங்களுடைய பாடல்களை மக்கள் ரசிக்கற அதே நேரம் சில எதிர்விமர்சனங்களும் வருவதை கவனிக்கறீங்களா?

"இந்தியாவோட முதுகெலும்பு கிராமம். அந்த கிராமத்தோட முதுகெலும்பு நாட்டுப்புற கலைதான். இது நம்ம மண்ணோட தாய்க்கலை. அந்த கலைஞர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ள பங்கேற்கும் போது நிச்சயமாக அதனோட தரம் அதிகமாகதான் செய்யும். இந்த கலையை மீட்டெடுக்கறதுக்கு இந்த தளமும் நிச்சயம் உதவும். உண்மையை சொல்லனும்ன்னா நாட்டுப்புற கலைஞர்கள்தான் இந்த மண்ணோட 'கலாச்சார தூதுவர்கள்'. ஏன் இப்படி சொல்றேன்னா, நாங்கதான் நம்ம நாடுட்டுடைய பண்பாடு, கலாச்சாரம் என்ன அப்படிங்கறதை பாடல்கள் மூலமா அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போறவங்க. இந்த மாதிரியான விஷயங்கள் இருக்கும் போது, எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது வருத்தமா இருக்குது. இப்படி சொல்றவங்க நம்ம கலையோட வரலாறு தெரியாதவங்களா இருக்கனும் இல்லை அப்படின்னா எங்களை மாதிரியான நாட்டுப்புற கலைஞர்களோட வளர்ச்சி பிடிக்காதவங்களா இருக்கனும்".

சினிமா இசை தாண்டி தனியிசை, நாட்டுப்புற பாடல்களுக்கான தேவை இங்கே என்னவா இருக்கு?

"நம்ம பண்பாடு, வாழ்வியல் இதெல்லாம் சொல்ல இங்க நாட்டுப்புற கலை அவசியமானதா இருக்கு. என்னைய கேட்டா, இசையோட சேர்த்து பஞ்ச பூதங்கள் ஆறுன்னும், உலக அதிசயங்கள் எட்டுன்னும் சொல்லுவேன். அந்த அளவுக்கு இசை அப்படிங்கறது எல்லாருக்குமே சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம். முன்னாடி எல்லாம் இந்த கலையை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கு ஊர் ஊரா கச்சேரிகள் நடத்துவோம். இப்போ இந்த ஆன்லைன் காலத்துல அது ரொம்பவே சுலபமாகிடுச்சு. நிறைய புது கலைஞர்களும் வராங்க. மக்களுக்கும் அவங்களுடைய இசை பிடிக்குது அப்படிங்கற போது அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்குது".

சந்தோஷ் நாராயணன், அனிருத், இமான் என முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கும் பாடியாச்சு. தனிப்பட்ட முறையில உங்களுக்கு யாருடைய இசையில பாடனும்னு ஆசை இருக்கு?

"இளையராஜா அய்யா இசையிலையும், ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையிலையும் பாட ஆசை இருக்கு".

சினிமா, நாட்டுப்புற இசையில உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?

"பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கறது எங்களுடைய காலக்கட்டத்துல சவாலான விஷயமா இருந்தது. அப்படியே சினிமாக்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைச்சாலும் அங்க நிலைச்சு இருக்கறது அடுத்தக்கட்ட சவால். இப்படி இருக்கும் போது வளரும் கலைஞர்களுக்கும், புதிய திறமைசாலிகளையும் கண்டெடுத்து அவர்களுக்கான பயிற்சி கொடுக்கனும் அப்படிங்கறது என்னுடைய விருப்பம். அதுக்கான முயற்சிகள்தான் இப்போ எடுத்துட்டு இருக்கேன். ஒரு அந்தோணிதாசன் மட்டுமில்ல, பல அந்தோணிதாசன்களை உருவாக்கனும். சீக்கிரம் அதுக்கான அறிவிப்பை வெளியிடுவேன்.

இதுக்கான ஒரு வாய்ப்பா நிச்சயம் சினிமாவை நல்ல முறையில பயன்படுத்திக்கனும்".

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :