LUDO - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், LUDO
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
நடிகர்கள்: அபிஷேக் பச்சன், ஆதித்ய ராவ் கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, ஃபாத்திமா ஷனா ஷேக், சான்யா மல்ஹோத்ரா, பெர்லே மானே; இசை: ப்ரீதம்; ஒளிப்பதிவு: அனுராக் பாசு, ராஜேஷ் சுக்லா; இயக்கம்: அனுராக் பாசு.
வெவ்வேறு திசையில் செல்லும் மூன்று - நான்கு கதைகள். எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு பாத்திரம். இந்த பாணியில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக அமைந்துவிடும். ஆனால், கொஞ்சம் சறுக்கினாலும், ஒன்றும் புரியாமல் போய்விடும். Ludoல் இரண்டுமே நடந்திருக்கிறது.
கதை 1. சாட்டு பையா (பங்கஜ் திரிபாதி) ஒரு பெரிய தாதா. அவனிடம் வேலை பார்த்த பிட்டு (அபிஷேக் பச்சன்), திடீரென திருந்திவிடுவதால், அவனை காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்து ஆறு வருட சிறை தண்டனை வாங்கிக்கொடுக்கிறான் சாட்டு பையா. பிட்டு சிறையிலிருந்து திரும்பிவந்து பார்த்தால், அவன் மனைவியும் குழந்தையும் இன்னொருவரோடு வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
கதை 2. ஆலுவுக்கு (ராஜ்குமார் ராவ்) பிங்கி (ஃபாத்திமா சனா ஷேக்) மீது ஒரு தலைக் காதல். அந்தக் காதல் கைகூடாததால், ஒரு ரெஸ்டாரண்ட் வைத்து பிழைத்துக்கொண்டிருக்கிறான். இந்த நிலையில் பிங்கியின் கணவன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறான். அதிலிருந்து கணவனைக் காப்பாற்ற ஆலுவை நாடுகிறாள் பிங்கி.
கதை 3. பணக்காரப் பையனாப் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமென நினைக்கும் ஸ்ருதி (சான்யா), ஆகாஷ் (ஆதித்ய ராய் கபூர்) என்ற வாலிபனுடன் உறவுவைத்திருக்கிறாள். அவளுக்கு ஒரு பெரிய பணக்கார மாப்பிள்ளையும் கிடைக்கிறான். அந்த நேரத்தில் ஆகாஷும் ஸ்ருதியும் இடம்பெற்றிருக்கும் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோவை நீக்க சாட்டு பையாவை அணுகுகிறான் ஆகாஷ்.
கதை 4. சீஜா (பெர்லே மானே) ஒரு மருத்துவமனையில் நர்ஸாக இருக்கிறாள். அங்கிருப்பவர்கள் இவளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறார்கள். அதேபோல ராகுல் (ரோஹித் சுரேஷ் ஷராஃப்) ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறான். அங்கிருக்கும் மேனேஜர் சிறிய தவறுகளுக்கெல்லாம் அவனை அடிக்கிறான். இருவருமே இதிலிருந்து விடுபட நினைக்கிறார்கள். ஒரு விபத்தில் அவர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கிறது. இந்தப் பணம் சாட்டு பையாவினுடையது.
கதை 5. பணக்காரத் தம்பதி ஒன்று தங்கள் குழந்தையைக் கவனிப்பதே இல்லை. இதனால், விரக்தியடையும் குழந்தை வீட்டைவிட்டு ஓடிவிடுகிறது. அந்தக் குழந்தையை கண்டுபிடிக்கும் பிட்டு, தான்தான் அந்தக் குழந்தையைக் கடத்தியதாக பெற்றோரிடம் பணம் கேட்கிறான்.
இந்த ஐந்து கதைகளில் பெரும்பாலான கதைகளை இணைக்கும் புள்ளி சாட்டு பையாவின் பாத்திரம்தான்.
படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக புதிய புதிய பாத்திரங்களை இறக்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.
தவிர, அதுவரை பார்த்த படத்திற்கே தொடர்பில்லாமல் புதிய கதை ஒன்றும் அவ்வப்போது துவங்குகிறது.
இந்த ஒவ்வொரு கதையிலும் இரண்டு - மூன்று பாத்திரங்கள். மொத்தம் ஐந்து கதை என்பதால் 15க்கும் மேற்பட்ட பாத்திரங்களை நினைவில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் பெரிய பிரச்னை.
சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் யார், என்ன செய்கிறார்கள் என்பதே விளங்க ஆரம்பிக்கிறது. அடுத்த அரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது.

பட மூலாதாரம், LUDO
இந்த ஐந்து கதைகளில் ரொம்ப சுவாரஸ்யமான கதை ஆலு - பிங்கியின் கதைதான். ஆலு அமிதாப் பச்சனின் ரசிகன். ஆனால் பிங்கிக்கு மிதுன் சக்ரவர்த்தியைப் பிடிக்கும் என்பதால் மிதுன் சக்ரவர்த்தியைப் போலவே முடி வளர்த்துக்கொண்டு, டான்ஸ் ஆடிக்கொண்டு திரிவது ரசிக்க வைக்கிறது. ஆலுவாக நடித்திருக்கும் ராஜ்குமார் ராவ் பின்னியெடுக்கிறார். பாலிவுட்டில் நவாஸுதீன் சித்திக், அயுஷ்மான் குரானா வரிசையில் சேரக்கூடிய நல்ல நடிகராக உருவெடுத்து வருகிறார் மனிதர்.
இந்த ஐந்து கதைகளில் ரொம்பவும் சுமாரான கதை பிட்டுவின் கதைதான். எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் டிவி நாடகங்களை போல மந்தமாக நகர்கிறது. இந்த ஒரு கதையையும் அதில் வரும் பாத்திரங்களையும் தூக்கியிருந்தாலே படம் சுவாரஸ்யமாகியிருக்கும். மற்ற இரண்டு கதைகளும் ஆங்காங்கே சுவாரஸ்யமாகவும் ஆங்காங்கே மந்தமாகவும் நகர்கின்றன.
இந்தப் படத்தில் வரும் எல்லோருமே விரும்பியவர்களுடன் வாழ முடியாமல், கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்க்கையை ஏற்கிறார்களா அல்லது விரும்பிய வாழ்க்கைக்காகப் போராடுகிறார்களா என்பதுதான் படத்தின் அடிநாதமாக அமைகிறது.
இத்தனை கதைகள் இருப்பதால் படத்தொகுப்புதான் மிகச் சவாலான காரியமாக இருந்திருக்கும். கத்தி மேல் நடப்பது போன்ற காரியம். அதைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசையும் மோசமில்லை.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது. இந்தப் படத்திற்கு இந்த நீளம் சற்று அதிகம்தான். படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பார்க்க முடியும். ஆனால், பொறுமை தேவைப்படும்.
பிற செய்திகள்:
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












