சாம்சன், ஹெட்மேயர் வாண வேடிக்கையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

பட மூலாதாரம், BCCI/ IPL
ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்துள்ளது. குஜராத் அணி நிர்ணயித்த 178 ரன் இலக்கை கேப்டன் சஞ்சு சாம்சன், அதிரடி வீரர் ஹெட்மேயர் ஆகியோரின் வாண வேடிக்கைகளால் ராஜஸ்தான் அணி அசாத்தியமாக எட்டிப்பிடித்தது.
மிடில் ஓவர்களை வீசிய ராஜஸ்தானின் ஸ்பின் பௌலர்கள் குஜராத்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரின் உதவியால் குஜராத் அணி 177 ரன்களை எடுத்தது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 45 ரன்களையும் டேவிட் மில்லர் 46 ரன்களை எடுத்தனர்.
கேட்ச் பிடிப்பதில் ஏற்பட்ட குழப்பம்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
போல்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாஹா, அடுத்த பந்தையும் தூக்கியடிக்க, அது உயரே எழும்பியது.
பந்தை யார் பிடிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பத்தில் கீப்பர் சஞ்சு சாம்சன் கையில் பட்டு பந்து நழுவ, போல்ட் அதைப் பிடித்து சாஹாவை வெளியே அனுப்பினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்ஷன் களமிறங்கினார். இரண்டு பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜாம்பா வீசிய 5வது ஓவரில் சாய் சுதர்ஷன் ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து, சுப்மன் கில்லுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூட்டணி சேர்ந்தார். முந்தைய ஆட்டங்களில் பவர் பிளேவில் 50 ரன்களுக்கு மேல் எடுத்திருந்த குஜராத் அணி இந்த ஆட்டத்தில் 42 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அஸ்வினின் முதல் இரண்டு ஓவர்களையும் கில் பதம் பார்த்தனர். அஸ்வீன் வீசிய முதல் ஓவரில் கில் 2 பவுண்டரி விளாச, அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை அவர் அடித்தார்.
10 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களை எடுத்திருந்தது. 11வது ஓவரை வீசிய சாஹலின் பந்து வீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா வெளியேறினார். அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்திருந்தார்.
மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பின்னர்கள்
அதைத் தொடர்ந்து குஜராத் அணியின் ரன் வேகமும் குறைந்தது. 10வது ஓவரில் இருந்து 14வது ஓவர் வரை ஒரு பவுண்டரியைகூட குஜராத் அடிக்கவில்லை. 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. 15வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது.
ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த பின்னர் 30 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை மட்டுமே குஜராத் எடுத்திருந்தது.
அடுத்த 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் மட்டுமே சவாலான ஸ்கோரை எடுக்க முடியும் என்ற நெருக்கடியில் சந்திப் வீசிய 16 ஓவரின் 2வது பந்தை கில் தூக்கியடிக்க முயல பட்லரிடம் கேட்சாக அது அமைந்தது.
34 ரன்களில் 4 பவுண்டரி, 1 சிஸ்டர் உட்பட 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி 4 ஓவர்களில் 52 ரன்கள்
இறுதிக்கட்டத்தில் மில்லர்- மனோகர் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 150 ரன்களை கடந்தது.
போல்ட் வீசிய 17வது ஓவரில் அட்டகாசமாக 2 சிக்ஸர் விளாசிய மனோகர், ஜாம்பா வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார்.
அடுத்த பந்தையும் அவர் லாங் ஷாட் அடிக்க முயல டாப் எட்ஜ் ஆகி படிக்கலிடம் கேட்சாக மாறியது. சந்தீப் வீசிய கடைசி ஓவரில் மில்லர் 2 பவுண்டரி அடித்து ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 177 ரன்கள் எடுத்தது.
4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்த சந்தீப் சர்மா, சுப்மன் கில், டேவிட் மில்லர் ஆகிய முக்கிய விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
சஞ்சு சாம்சன் - ஹெட்மேயர் அதிரடியால் ராஜஸ்தான் அபார வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 178 ரன் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பவர் பிளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது.
முகமது ஷமி - ஹர்திக் பாண்டியாவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் ரன் குவிக்க திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பிறகு கேப்டன் சஞ்சு சாம்சனும், அதிரடி வீரர் ஹெட்மேயரும் விஸ்வரூபம் எடுக்க, மைதானத்தின் நாலாபுறமும் பந்து சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவண்ணம் இருந்தது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஓவரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்சர் அடித்து பிரமாதப்படுத்தினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
இதனால், 19.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி அதிசயிக்க வைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து தூக்கி நிறுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ரன்களை விளாசினார். 25 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஹெட்மேயர் மொத்தம் 26 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களைக் குவித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வெற்றிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























