சென்னை மாணவர் கொலை: சிறார்கள் உட்பட 16 பேர் கைது - என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, தனுஷ்குமார்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னையில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் இளஞ்சிறார்கள் என்பதால் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக் கேட்டதால் தன் மகன் கொல்லப்பட்டதாக, இறந்த மாணவரின் தந்தை வெங்கடேசன் கூறுகிறார்.

"ஆனால், மாணவரின் இறப்புக்கு போதைப் பயன்பாடு காரணமாக இல்லை" என, திருவொற்றியூர் உதவி ஆணையர் (பொறுப்பு) பிரம்மானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக் கேட்டதால் தன் மகன் கொல்லப்பட்டதாக, மாணவரின் தந்தை வெங்கடேசன் கூறுகிறார்.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த ஆசிரியர்கள், இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

மறுநாள் (ஆகஸ்ட் 14) மாலை சுமார் நான்கரை மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூடியுள்ளனர்.

அப்போது, தனுஷ்குமார் என்கிற பிளஸ் 2 மாணவரை சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கியதாக, திருவொற்றியூர் காவல்நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் மாணவரின் வயது 18 என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவரின் தாய் லட்சுமி அளித்துள்ள புகார் மனுவில், 'மாணவர்கள் கும்பலாக தாக்கியதில் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் என் மகன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது' எனக் கூறியுள்ளார்.

'முப்பதுக்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதல்'

அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியதாகப் புகார் மனுவில் லட்சுமி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களிடம் இதுதொடர்பாக விசாரித்தபோது முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தனது மகனை தாக்கியுள்ளதாகவும் லட்சுமி கூறுகிறார்.

இறந்துபோன மாணவர் தனுஷ்குமார் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'பள்ளியில் போதைப் பயன்பாடு என்று எழும் குற்றச்சாட்டு'

மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் தனுஷ்குமாரின் தந்தை வெங்கடேசன், "காலையில் பள்ளிக்குப் போனான். மாலை நான்கரை மணியளவில் போன் செய்து, பையன் இறந்துவிட்டதாகக் கூறினர். பள்ளி மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறினார்கள்." என்கிறார்.

தன் மகனுக்கு எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லை எனக் கூறிய அவர், "பள்ளியில் சிலர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதை என் மகனுடன் படிக்கும் மாணவர் தட்டிக் கேட்டுள்ளார். அவர் அன்று (ஆகஸ்ட் 14) பள்ளிக்கு வராததால் என் மகனை அடித்துக் கொன்றுவிட்டனர்" எனக் கூறினார்.

வெங்கடேசன் தனியார் பெயிண்ட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

"என் மகனைத் தாக்கிய அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும். இனிமேல் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது" என்கிறார், மாணவரின் தாய் லட்சுமி.

'அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை' - ராஜ்மோகன்

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, ராஜ்மோகன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மாணவர் இறப்பு விவகாரம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அப்போது பேசிய பா.ம.க உறுப்பினர் கணேஷ்குமார், மாணவர்கள் மத்தியில் போதைப் பயன்பாடு அதிகரித்துவிட்டதாகக் கூறினார்.

இதற்குப் பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "திருவொற்றியூர் சம்பவத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரணை நடக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்களின் துன்பத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்." எனக் கூறினார்.

"மாணவர்கள் மத்தியில் குழு மோதல் ஏற்பட்டதா? போதைப் பழக்கம் உள்ளதா? சமூக விரோதிகள் ஆட்டுவிக்கிறார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன," என அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாணவர் தனுஷ்குமாரின் வீட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சென்றனர்.

இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ராஜ்மோகன், "அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஒரு நபரைத் தவிர மற்றவர்கள் சிறுவர்களாக உள்ளனர்." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் ஓர் எதிரி கூட தப்பிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.'' எனத் தெரிவித்தார்.

மாணவர் கொலை வழக்கில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருவொற்றியூர் சரக காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் சிறார்கள் உட்பட 18 வயதை அடைந்தவர்களும் உள்ளனர் என்கிறார் அவர்.

மாணவர் உயிரிழந்து ஐந்து நாட்கள் கடந்த பின்னரும் காவல்துறையின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய களநிலவரம் அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

காணொளிக் குறிப்பு,

திருவொற்றியூரில் மாணவர் தனுஷ்குமாரின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது பெற்றோர் பேச மறுத்துவிட்டனர். அதேநேரம், மாணவர் மரணம் தொடர்பாக அவர்களின் வழக்கறிஞர் விஜய் சில விளக்கங்களை அளித்தார்.

"தனுஷ்குமாரை முப்பது பேர் சேர்ந்து அடித்துள்ளனர். தலையில் அதிகமாக அடிபட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது," என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா என்பது பரிசோதனை முடிவில் தெரியவரும். குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன" எனக் கூறினார்.

"அரசுக்கு எட்டு கோரிக்கைகளை மாணவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர். சம்பவம் நடந்த அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கையாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.

போதைப் பொருட்கள் பயன்பாடு குற்றச்சாட்டை மறுக்கும் ஆசிரியர்கள்

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?

மாணவர் தனுஷ்குமார் படித்த அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, பள்ளி தலைமை ஆசிரியை விடுப்பில் சென்றுவிட்டதாக சக ஆசிரியர்கள் கூறினர்.

நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டபோது, "வழக்கில் கைதாகியுள்ள மாணவர் இதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அவருக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாங்கள் சமாதானம் செய்து வைத்தோம்" எனக் கூறினர்.

மறுநாள் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டதாகக் கூறிய அவர்கள் வேதனைப்பட்டனர்.

மாணவர்கள் இடையே போதைப் பயன்பாடு இருந்ததாகக் கூறப்படும் தகவலையும் அவர்கள் மறுத்தனர். இதையே பிபிசி தமிழிடம் தெரிவித்த திருவொற்றியூர் உதவி ஆணையர் (பொறுப்பு) பிரம்மானந்தம், "போதை தொடர்பான பிரச்னையே இந்த விவகாரத்தில் வரவில்லை" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்களுக்கு இடையே சீனியர்-ஜூனியர் மோதல், ஈகோ ஆகியவை காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது" என அவர் தெரிவித்தார்.

பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டியே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் காலி மைதானம் ஒன்று உள்ளது. ஆள் நடமாட்டமின்றி அச்சமூட்டும் வகையில் அப்பகுதி அமைந்திருந்தது. சுற்றுச்சுவற்றை ஒட்டி காலி மதுபாட்டில்களும் பயன்படுத்தப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளும் சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது.

பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் பேசியபோது, "சம்பவம் நடந்த நாளில் நாங்கள் இங்கு இல்லை" என்று மட்டும் பதில் அளித்தனர்.

சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் செ.பிரபாகரன்.

'மாணவர்களிடம் மனரீதியான மாற்றங்கள்'

அதேநேரம், இந்தச் சம்பவம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

"அண்மைக்காலமாக மாணவர்களுக்கு மனநலரீதியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக செல்போன் பயன்பாடு கணிசமான மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் செ.பிரபாகரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வகுப்பறைகளில் பாடம் நடத்தும்போது பல்வேறு சிரமங்களை ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் மத்தியில் கவனமின்மை போன்றவை நடக்கின்றன" எனக் கூறுகிறார்.

"மாணவர் தவறு செய்தால் பெற்றோர் பொறுப்பேற்றுக் கொள்ளும் சூழல் குறைவாக உள்ளது. இது ஆசிரியர்களுக்கு கூடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்கள், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார், செ.பிரபாகரன்.

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரை மாணவர் ஒருவர் தாக்கியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "மாணவர் தூங்கியது குறித்துக் கேட்டதால் ஆசிரியருக்கு அடிவிழுந்தது. அவருக்கு வேறு ஓர் இடத்தில் அரசு பணிமாறுதலை வழங்கியது." என்கிறார்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் மாணவர் மரணம் தொடர்பாக விளக்கம் அளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்ற உள்ளோம்" எனக் கூறினார்.

"இனி இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கக் கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு" எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு