'தவெக உடன் விசிக' - 3 மாதங்களுக்கு பிறகு திருமாவளவனின் திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், X/Thol Thirumavalavan
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக, தவெக உடன் இணைந்து பயணிப்பதாக அறிவித்திருக்கிறது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னர் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தும் பேசினார்.
திருமாவளவின் இந்த அறிவிப்பு விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைத் திருப்திபடுத்துவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காகவும் இருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஆனால் இந்த அறிவிப்பும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறும் விசிக துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், இந்தக் கூட்டணி ஐந்து ஆண்டுகளும் தொடரும் என்று தெரிவித்தார்.
திருமாவளவன் பேசியது என்ன?
ஆகஸ்ட் 17-ஆம் தேதி இரவு உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாடு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி பேசிய பிறகு கூட்டணி குறித்தும் திருமாவளவன் பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் தற்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணி வைத்தோம். இன்றைக்கு ஆட்சி செய்யும் ஜோசப் விஜய் உடன் நாம் கூட்டணி வைத்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகளும் தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என்று குறிப்பிட்ட திருமாவளவன், விடுதலை சிறுத்தைகளும் ஆளும்கட்சியாக பரிணமிக்கும் என்று கூறினார்.

பட மூலாதாரம், Thol Thirumavalavan
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை திருமாவளவன் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் நாங்களாகத் தான் இருக்கிறோம். எங்களின் வீரியம் எங்கும் நீர்த்துப் போகவில்லை. மக்களின் பார்வையிலிருந்து தான் எங்களின் நிலைப்பாட்டை எடுக்கிறோம். உரிய நேரத்தில் உரிய பிரச்னைகளில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்." என்றார்.
தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பேசிய திருமாவளவன், ''சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். தவெக உடன் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறோம்.'' என்றார்.
திருமாவளவனின் இந்த அறிவிப்பு உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விசிக ஆட்சியில் பங்கெடுத்த பிறகும் திருமாவளவன் கூட்டணி தொடர்பாக மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விசிகவின் வாக்கு வாங்கி பெருமளவு தவெக பக்கம் சென்றுவிட்டது என்கிற கருத்தும் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற கூட்டம் விசிகவுக்கு ஒரு நம்பிக்கை அளித்திருக்கலாம். ஏனென்றால் நெரிசல் ஏற்படுகின்ற அளவுக்கு கூட்டம் கூடியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை தெளிவுபட கூறியுள்ளதாகவே பார்க்கிறேன்." என்றார்

இந்த அறிவிப்பின் பின்னணியில் தேர்தல் கணக்குகளும் இருக்கலாம் என்கிறார் ப்ரியன்.
அதனை மேலும் விவரித்துப் பேசிய அவர், "அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் விசிக கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை, ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதனால் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுத் தர வேண்டும் என்கிற நிர்பந்தமும் அவருக்கு இருக்கிறது.
திருமாவளவன் முன்னரே கூட்டணி குறித்து எதுவும் கூறாமல் இருந்திருக்கலாம் அல்லது கூட்டணி பற்றி உறுதியாக கருத்தை தெரிவித்து இருக்கலாம். மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்ததுதான் விவாதப் பொருளானது. அது அவருடைய அணுகுமுறையும் அல்ல. தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் விசிகவிற்குள் வெளிப்படையாகவே சில விமர்சனங்கள் எழுந்தன. எனவே கட்சி ஒற்றுமையையும் கருதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்." என்றார்.
இந்தியா கூட்டணி
தொடர்ந்து பேசிய ப்ரியன், ''இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தவெக இன்னும் இணையவில்லை. அதில் இன்னும் தெளிவு இல்லாமல் உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள குழப்பத்திற்கும் திருமாவளவனின் அறிவிப்புக்கும் தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தக் குழப்பத்தில் சிக்காமல் தவிர்க்க தவெக உடன் நேரடியாக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை அறிவித்திருக்கலாம்.
ஆனாலும் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தேவை எழுந்தால் விசிக அதை தவிர்க்காது என்றே நினைக்கிறேன். அதோடு அடுத்து வரும் தேர்தலில் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்பதற்காகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்." என்றார்.
இந்த அறிவிப்பு தொண்டர்கள் மத்தியில் தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.
" திருமாவளவன் கருத்துக்கள் மாறுபட்டு கொண்டே இருந்தன. அதேபோல மத்திய பாஜக அரசை எதிர்ப்பது என்பதிலும் தவெகவுக்கும் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் விசிகவுக்கு வேறு வாய்ப்புகளும் இல்லை. தொண்டர்களுக்கு ஒரு தெளிவு கொடுக்க வேண்டும் என்பதும் உள்ளாட்சித் தேர்தலில் விசிகவுக்கு கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுவதுமே கூட்டணியை உறுதிபடுத்துவதன் பின் உள்ள அவசியமாக நான் பார்க்கிறேன்." என்றார்.
'தேர்தல் கணக்குகள் இல்லை - விசிக'

பட மூலாதாரம், Ezhil Caroline
ஆனால் இதில் தேர்தல் கணக்குகள் எதுவும் இல்லை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எழில் கரோலின். இந்தியா கூட்டணி தமிழ்நாட்டிலும் நிலையாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தவெக அரசுடன்தான் நாங்கள் பயணித்து வருகிறோம். ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் முரண்பாடு இருக்கிறது எனப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் கூட்டணியை உறுதிபட தெரிவிக்க வேண்டும் என தலைவர் முடிவெடுத்தார். இதில் எந்த தேர்தல் கணக்குகளும் இல்லை. பொய் பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிவிப்பு. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தவெகவுக்கான ஆதரவு தொடரும். நாங்கள் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம். காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் தலைமை தாங்குகிறது. தவெக உடன் விசிகவும் காங்கிரசும் கூட்டணியில் இருக்கின்றன." என்றார்.
இந்தக் கட்டுரைக்காக கருத்து பெற தவெக செய்தித் தொடர்பாளர்களிடம் பேசினோம். கூட்டணி தொடர்பாக செய்தி என்பதால் கட்சி தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்து தெரிவிக்க முடியாது என்று மட்டும் கூறினர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்தவை என்ன?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. அப்போதும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. அக்கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து மே மாதம் விஜய் முதல்வராக பதவியேற்றார்.
ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. மற்ற கட்சிகள் ஆட்சியில் பங்கேற்றன.
ஒரு கட்டத்தில் ஆட்சி அமைக்க தான் ஆதரவு அளித்திருப்பதாகவும் ஆனால் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார்.
ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், "காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருக்கிறது." எனப் பேசியிருந்தார்.
அதன் பின்னர் திமுக கூட்டணி முறிந்துவிட்டதாகவும் திருமாவளவன் பேசியிருந்தார். திமுக கூட்டணியின் தோல்விக்கு கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதமே காரணம் என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































