50 வயது ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேறு நாட்டுக்கு 'கடத்தப்பட்ட' 10 வயது சிறுமி - என்ன நடந்தது?

சில நாட்களுக்கு முன்பு, பெரு நாட்டிலிருந்து எல்லை தாண்டி கடத்தப்பட்டு, திருமணம் செய்து கொடுக்கப்படவிருந்த 10 வயது சிறுமி ஒருவரை மீட்டதாக ஈக்வடார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Ecuadorian Army

படக்குறிப்பு, ஈக்வடார் மற்றும் பெருவின் எல்லையில், 50 வயதுடைய ஒருவரிடம் ஒப்படைப்பதற்காகக் கடத்தப்பட்ட அந்தப் பெண் மீட்கப்பட்டார்; பின்னர் அவர் பிடிபட்டார்.
    • எழுதியவர், அலெஜான்ட்ரோ மில்லன் வலென்சியா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சில நாட்களுக்கு முன்பு, ஈக்வடார் அதிகாரிகள் 10 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பெருவில் இருந்து எல்லை தாண்டி கடத்தி வரப்பட்ட அந்தச் சிறுமி, திருமணம் செய்து கொடுக்கப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈக்வடார் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, அமேசான் பகுதியில் உள்ள பாஸ்தாசாவில், டைக்ரே ஆற்றங்கரையில் அமைந்துள்ள எஸ்பெஹோ நகரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த 50 வயது நபர் ஒருவர் அப்போது கைது செய்யப்பட்டார்.

சிறுமியை கட்டாயத் திருமணத்துக்கு உட்படுத்துவதற்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதியில் அதிகாரிகள் ஏற்கெனவே குழந்தைகள் கடத்தப்பட்ட மேலும் இரண்டு சம்பவங்களைக் கண்டறிந்திருந்தனர். இதன் மூலம், ஈக்வடாரின் இந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் லத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நீடித்து வரும் ஒரு பிரச்னை மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.

யுனிசெஃப் தரவுகளின்படி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் நான்கு குழந்தைகளில் ஒருவர், 18 வயதுக்கு முன்பே குழந்தைத் திருமணத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் அல்லது இளம் வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஆனால், மொத்த எண்ணிக்கையைவிட நிபுணர்களை அதிகம் கவலைப்படுத்துவது வேறு ஒரு புள்ளிவிவரம். உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டாத பிராந்தியமாக லத்தீன் அமெரிக்கா உள்ளது.

உதாரணமாக, அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகும் பிராந்தியமான துணை-சஹாரா ஆப்பிரிக்காவில், இந்த விகிதம் அதிகமாக உள்ளது. அங்கு 10 சிறுமிகளில் நான்கு பேர் இதற்கு உட்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

'வறுமை, கல்வியைப் பெறுவதற்கான குறைந்த வாய்ப்புகள், பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை போன்ற காரணங்களால் இது நடக்கிறது'' என லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான 'சிறுமிகள் மணப்பெண்கள் அல்ல' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அல்மா புர்சியாகா கோன்சாலெஸ் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

"ஆனால், இந்த முடிவுகள் பெரும்பாலும் சமத்துவமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வகையான திருமணங்களைத் தடுப்பதற்கான பயனுள்ள தீர்வுகள் கண்டறியப்படாவிட்டால், அதன் விளைவுகள் சிறுமிகளின் பல தலைமுறைகளையும் தொடர்ந்து பாதிக்கும் என்கிறார் புர்சியாகா.

''இளம் வயது திருமண உறவுகள் பொதுவெளி விவாதங்களிலும் தரவுச் சேகரிப்பிலும் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில், இதுபோன்ற உறவுகளை முறையாகக் கணக்கிடுவது சிரமமாக உள்ளது. இது சிறுமிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கல்வி தடைபடுதல், இளம் வயதிலேயே கர்ப்பம் தரித்தல், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு அதிகம் ஆளாகுதல், தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு பழைமையான பிரச்னை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வரலாற்று ஆவணங்களின்படி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் குழந்தைத் திருமண நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஹிஸ்பானிக் காலத்துக்கு முந்தைய சில சமூகங்களில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்தது. அதேவேளையில், அமெரிக்கக் கண்டப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த கத்தோலிக்க திருச்சபைச் சட்டமும், பெண்களுக்கு 12 வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் திருமணம் செய்ய அனுமதித்தது.

"மெக்சிகோவில், 10 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைப்பது இயல்பானது, அது ஒரு கலாசாரம் என்ற எண்ணம் இன்னும் பல பகுதிகளில் நிலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல," என்று மெக்சிகோவின் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான விரிவான பாதுகாப்புக்கான தேசிய அமைப்பான சிப்பின்னாவின் தலைவர் லொரேனா வில்லாவிசென்சியோ பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

உண்மையில், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் குழந்தைத் திருமணங்களை திறம்படக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகள் அந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட தொடங்கின.

உதாரணமாக, நிகரகுவா 2014-ஆம் ஆண்டில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு திருமணம் செய்வதைத் தடை செய்தது. எனினும், சில விதிவிலக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எல் சால்வடாரும் 2017-ஆம் ஆண்டில் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

2019-ஆம் ஆண்டில், மெக்சிகோ அரசு 18 வயதுக்குக் குறைவானவர்களுடன் திருமணம் செய்வதையும் அல்லது திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதையும் முற்றிலும் தடை செய்யும் சட்டத்தை இயற்றியது.

அதன் பின்னர், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவில் 2023-ஆம் ஆண்டிலும், கொலம்பியா மற்றும் பொலிவியாவில் 2025-ஆம் ஆண்டிலும் இதற்கான தடைகள் அமல்படுத்தப்பட்டன.

ஆரம்பகால திருமணங்கள் அல்லது குழந்தைத் திருமணங்களைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அடிப்படைப் பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. 2025-ஆம் ஆண்டு யுனிசெஃப் அறிக்கையின்படி, குழந்தைத் திருமணம் அல்லது இளம் வயது திருமண உறவுகள் அதிகம் காணப்படும் நாடுகளாக டொமினிகன் குடியரசு, நிகரகுவா மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவை உள்ளன.

டொமினிகன் குடியரசில், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோர், 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டவர்கள்.

இந்தத் துறையில் பணியாற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தப் பிரச்னையின் அடிப்படைக் காரணம் என்னவென்றால், சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்த நடைமுறையைத் தடுப்பதற்கு சட்டரீதியான தடை மட்டும் போதுமானதாக இல்லை.

உதாரணமாக, மெக்சிகோவில் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, இதுபோன்ற திருமணங்களின் எண்ணிக்கை குறைந்ததாக சிறுமிகள் மணப்பெண்கள் அல்ல அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் இளம் வயது திருமண உறவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

"எங்கள் நாட்டில் இளம் வயது திருமண உறவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் அடிப்படைப் பிரச்னைகளை நாம் இன்னும் தீர்க்கவில்லை. அதனால்தான் அவை தொடர்ந்து நடைபெறுகின்றன," என்று வில்லாவிசென்சியோ சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த ஓராண்டில் மட்டும் மெக்சிகோவில் சுமார் 9,000 இளம் வயது திருமண உறவுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வறுமையும் சமத்துவமின்மையும்

சிப்பின்னா, யுனிசெஃப் மற்றும் சிறுமிகள் மணப்பெண்கள் அல்ல ஆகிய அமைப்புகள், இதுபோன்ற சம்பவங்களுக்கான முக்கிய காரணங்கள், பாதிக்கப்படும் சிறுமிகள் வாழும் பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையவை என்பதை ஒப்புக்கொள்கின்றன.

"இதுபோன்ற சூழ்நிலைகளில் திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான சிறுமிகள், வறுமை மற்றும் பொருளாதார சமத்துவமின்மையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்று யுனிசெஃப் தனது 2025-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடுகிறது.

இதற்கு ஓர் உதாரணத்தையும் அந்த அறிக்கை அளிக்கிறது. இப்பிராந்தியத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் காணப்படும் நாடான டொமினிகன் குடியரசில், கிராமப்புறத்தில் வசிக்கும் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை இல்லாத ஒரு சிறுமி, கல்வி மற்றும் பொருளாதார ஆதரவு பெற்ற சிறுமியைவிட இளம் வயது திருமண உறவில் இணைய நான்கு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வுகளில் தெரியவந்த மற்றொரு தகவல், திருமணம் செய்துகொள்ளும் ஐந்து சிறுமிகளில் ஒருவர், தங்களைவிட 10 வயது மூத்த ஆணைத் திருமணம் செய்துகொள்கிறார் என்பதாகும்.

“ஆண்மை எவ்வாறு பார்க்கப்படுகிறது, பெண்களும் சிறுமிகளும் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதில் ஒரு பிரச்னை உள்ளது. இதனால், மிகப்பெரிய வயது வித்தியாசம் கொண்ட இதுபோன்ற உறவு அனுமதிக்கத்தக்கதாகவோ அல்லது சாத்தியமானதாகவோ தோன்றுகிறது” என்கிறார் வில்லாவிசென்சியோ.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தை திருமணங்கள் பெண்களின் முன்னேற்றத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்துவதோடு, பாலின சமத்துவமின்மையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற நடைமுறைகளுக்குப் பின்னால் சமூக மற்றும் கலாசார ரீதியான பிற காரணிகளும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் சில, பழங்குடியின மக்களின் குறிப்பிட்ட பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையவை.

உதாரணமாக, ஈக்வடாரில் மீட்கப்பட்ட சிறுமி, பெருவைச் சேர்ந்த ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்.

மெக்சிகோவில் கடந்த ஆண்டு நடந்த இதேபோன்ற ஒரு சம்பவமும் இந்தப் பிரச்னையின் மற்றொரு அம்சத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 2025 மே மாதத்தில், நாட்டின் தெற்குப் பகுதியில் சான் பெட்ரோ குயிட்லாபான் என்ற பழங்குடியின சமூகத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதுபோன்ற நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளுடன், இளம் வயது திருமண உறவுகளின் எண்ணிக்கையைக் குறைக்க, சில பாரம்பரிய நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"பல பகுதிகள் அல்லது பழங்குடியினப் பகுதிகளில், சமூக விதிமுறைகள் வேறுபட்டிருக்கின்றன. அங்கு, சிறுமிகள் முதல் மாதவிடாய் ஏற்பட்டவுடன், அதாவது சுமார் 11 வயதில் திருமணம் செய்துகொள்வது இயல்பானதாகக் கருதப்படுகிறது," என்று வில்லாவிசென்சியோ சுட்டிக்காட்டுகிறார்.

தீர்வுகள்

யுனிசெஃப் அமைப்பின்படி, குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகளில் பதின்பருவக் கர்ப்பங்கள் அதிகரிப்பது, அடிப்படைக் கல்வியைப் பெறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுவது, குடும்ப வன்முறைக்கு இளம் வயதிலேயே ஆளாகும் அபாயம் அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.

எனவே, இளம் வயது திருமண உறவுகளுக்குக் காரணமான அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தீர்வுகள் இருக்க வேண்டும் என்று புர்சியாகாவும் வில்லாவிசென்சியோவும் கூறுகின்றனர்.

"இது மட்டும் தீர்வாகாது. பிரச்னையின் ஆழமான வேரை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் தேவை. அதன் அடிப்படைக் காரணம், இந்தப் பிராந்தியம் முழுவதும் காணப்படும் பாலின சமத்துவமின்மைதான்," என்று புர்சியாகா சுட்டிக்காட்டுகிறார்.

யுனிசெஃப் அமைப்பைப் பொறுத்தவரை, அதன் உத்தியில் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, திருமணம் அல்லது சட்டப்பூர்வ திருமண உறவைத் தவிர்த்து, சிறுமிகள் பொருளாதார நிலைத்தன்மையை அடைய மேலும் பல வாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.

"உதாரணமாக, டொமினிகன் குடியரசில் சிறுமிகளுக்கான குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இளம் தலைமைத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பது, சிறுமிகளின் அதிகாரமளிப்பை ஊக்குவிப்பது மற்றும் பங்கேற்பாளர்களிடையே தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவது ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன," என்று இந்தப் பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து 2025-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆவணத்தில் யுனிசெஃப் குறிப்பிடுகிறது.

இதில் முக்கியமானது, சிறுமிகள் பள்ளிக் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இதற்கு ஒரே ஒரு தீர்வு கிடையாது. ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், சிறுமிகள் கல்வி அமைப்பில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று வில்லாவிசென்சியோ கூறுகிறார்.

"சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதற்கும், பல்கலைக்கழகம் வரை சென்று கல்வி கற்பதற்கும் கூட நாம் பொருளாதார ரீதியாக ஆதரவளிக்க வேண்டும்," என்றும் அவர் கூறுகிறார்.

ஈக்வடாரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தைப் பொறுத்தவரை, திருமணம் செய்து வைப்பதற்காக சிறுமிகள் உள்ளிட்ட குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் எல்லைக் கண்காணிப்பை வலுப்படுத்த இரு நாடுகளின் அரசுகளும் இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளன.

"ஆனால், ஏற்கெனவே திருமண உறவில் இருக்கும் சிறுமிகளையும் தீர்வுகள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்," என்று புர்சியாகா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு