You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூர் நெரிசல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விஜய் பற்றி பேசப்பட்டது என்ன?
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இன்று காலை நடந்த விசாரணையின்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தொடர்ந்த முன்ஜாமின் மனு தொடர்பான விசாரணையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.
அப்போது " தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. ஒரு விபத்தை கொலை குற்றமாக மாற்ற முடியாது." என என்.ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார் என பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இதுபோன்ற கூட்டங்களுக்கு உடனடியாக வழிகாட்டுதல்களை வகுக்கக்கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
"கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சியினர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது" என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார் என்கிறது லைவ் லா.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டார்.
கரூரில் கடந்த 27 ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் நடுவே கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்.ஆனந்த் தரப்பு வாதம் என்ன?
இந்தநிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனுவின் விசாரணையின்போது என்.ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் சில வாதங்களை முன்வைத்துள்ளார்.
பார் அண்ட் பெஞ்ச் செய்தியின்படி என்.ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:
- "என் கட்சி தலைவர் (விஜய்) 4 மணி நேரம் தாமதமாக வந்தார். பகல் 3 மணிக்கு வரவேண்டிய அவர் ஏன் 7 மணிக்கு வந்தார் என்பது தான் அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது. இது என்ன கிரிமினல் குற்றமா?"
- "தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. தொண்டர்கள் காத்திருந்தனர். என் மீது BNS பிரிவு 105 மற்றும் 110-ன் கீழ் (குற்றமற்ற கொலை முயற்சி) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு விபத்தை கொலை குற்றமாக மாற்ற முடியாது."
- "எங்கள் 2 பேரால் அவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விஜய் மாலை 6 மணிக்கு அங்கு வந்தார். கூட்டத்தை யாராலும் குறை சொல்ல முடியாது. எங்கள் தலைவருக்கு மட்டுமல்ல மக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அங்கு போலீசார் இல்லை. நான் அவர்களை குறை சொல்லவில்லை. குற்றம்சாட்டுகிறேன்"
- "நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை. போலீசார் நுழைந்து லத்தியால் அடித்தபிறகே அனைத்து விபரீதமும் நடந்தது"
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, "இவர் பொறுப்பற்ற வாதங்களை முன்வைக்கிறார்" என குற்றம் சாட்டினார்.
அதன்பின் என்.ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடர்ந்தார்.
- ''என் மீது பதியப்பட்டுள்ள வழக்கின்படி பார்த்தால் எனக்கு உள்நோக்கம் இருந்திருக்கவேண்டும். ஆனால் எனது சொந்த கட்சிக்காரர்களையே நான் காயப்படுத்துவேனா?''
- "நான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார். ஒருவேளை திமுக கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கைது செய்யப்படுவாரா?" என என்.ஆனந்த் தரப்பு வாதிட்டது.
அரசு தரப்பு வாதம் என்ன?
இதன்பின் அரசுதரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:
- ''இவர்கள் இந்த விபத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு உள்நோக்கம் இல்லை என்பதை நாங்களும் அறிவோம். ஒருவேளை உள்நோக்கம் இருந்திருந்தால் கொலை வழக்குதான் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.''
- "கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என கட்சி சார்பில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?" என அரசுதரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அப்போது "இந்த கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் இருந்தனரா?" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்:
- ''ஆம், ஆனால் அவர்களுக்காக எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஒரு தண்ணீர் பாட்டில் கூட வைக்கவில்லை.''
- "இது துரதிர்ஷ்டவசமான சம்பவம்தான். ஆனால் தங்களின் சொந்த கட்சியினரை கவனிக்கவில்லை. உடனடியாக தலைமறைவாகிவிட்டனர்.''
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, என்.ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.கே.ரமேஷ், தங்கம், கதிரேசன் உள்ளிட்டோர் ஏழு பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
இதில் இரண்டு மனுக்கள் சி.பி.ஐ விசாரணை கோரியும் இதர மனுக்கள் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கக் கோரியும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரை மேற்கொள்வதற்கு விதிகளை வகுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடும்போது, கரூரில் அதிகப்படியான கூட்டம் வந்ததற்கு விஜயே காரணம். பரப்புரை மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு அவர் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது என வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'கூட்டத்தைக் காவல்துறை சரியாக கையாளவில்லை. பரப்புரை நடந்த இடத்தில் அதிகப்படியான காவலர்கள் பணியமர்த்தப்படவில்லை. காவல்துறையின் தவறான நடவடிக்கையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'வழக்கின் விசாரணையில் திருப்தி இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரலாம் எனக் கூறினர். மேலும், வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' எனவும் கூறினர்.
தொடர்ந்து வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'இது துயர சம்பவம். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்' எனவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, சி.பி.ஐ விசாரணை கோரிய அனைத்து வழக்குகளை முடித்து வைத்தனர்.
'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது' என்ற மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஏற்கெனவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை மாநில அரசு பின்பற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'5 லட்சம் சேதம்... புகைப்பட ஆதாரம்' - த.வெ.க மாவட்ட செயலாளர் முன்ஜாமீன் வழக்கில் நீதிபதி சொன்னது என்ன?
தவெக தலைவர் விஜயின் பரப்புக் கூட்டத்தில் (செப்டெம்பர் 27) காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளை மீறியதாக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது நாமக்கல் காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரப்புரையின்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'அரசியல் காரணங்களுக்காக வழக்கில் என் பெயரை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்கான என் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது' எனக் கூறியிருந்தார்.
இன்று (அக்டோபர் 3) நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தவெகவினரின் செயல்பாடுகளால் 5 லட்ச ரூபாய் அளவுக்கு பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மேலும் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' எனக் கூறினார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் நீதிபதி முன்பு அவர் சமர்ப்பித்தார். இதனை ஆய்வு செய்த பிறகு பேசிய நீதிபதி என்.செந்தில்குமார், 'தனக்கு எதுவும் தெரியாது என மனுதாரர் எவ்வாறு கூறலாம்?' எனக் கேள்வி எழுப்பினார். பின் 'தனது கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்த தெரியாதா.. பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து சதீஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு