பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட ரீல்ஸ் பிரபலம்

பட மூலாதாரம், instagram/dancer_ramesh_official
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வழியாக நடனமாடி பிரபலமடைந்த டான்சர் ரமேஷ், அண்மையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படத்தில் நடத்திருந்தார்.
சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் லோட்மேன் ஆக பணிபுரிந்து வந்தார். பின்பு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யுடியூப் போன்ற சமூக ஊடகங்களில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி ஷார்ட் வீடியோ, ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வந்தார்.
குறிப்பாக உடலை வளைத்து நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா போல இவர் ஆடிய ஒரு வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து தொடர்ந்து நடனமாடி ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார். இதனால் 'டான்சர் ரமேஷ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் அழைக்கப்பட்டார்.
ரீல்ஸ் மூலம் பிரபலமானதையடுத்து, தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை வழியாகவும் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி பிரபலமாக திகழ்ந்தார் ரமேஷ்.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் இவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ரமேஷிற்கு சித்ரா, இன்பவல்லி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி, சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இன்று தனது இரண்டாவது மனைவி வீட்டில் இருக்கும் போது, அந்த குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பேசின் பிரிட்ஜ் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரமேஷின் முதல் மனைவி, அவரது கணவர் காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். பின்னர் விசாரணையின் போது ஆஜரான ரமேஷ், இரண்டாவது மனைவியுடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை என காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டு சென்று இருந்தார்.
பிறந்த நாளன்று அவர் இறந்ததால் அவரது வசிப்பிட பகுதியில் இருப்பவர்கள் சோகத்தில் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























