தமிழ்நாடு முதலமைச்சர் - ஆளுநர் ரவி இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததா?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இடையில் மோதல் நீடித்து வந்த நிலையில், ஆளுநர் அளித்த குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றதன் மூலம் அந்த மோதல் உண்மையிலேயே முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒவ்வொரு குடியரசு தினத்தின்போதும் தமிழ்நாடு ஆளுநர், தமது மாளிகையில் விருந்தளிப்பது வழக்கம். இந்த விருந்தில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆனால், தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நிலை நீடித்து வருவதால், இந்த விருந்தில் தமிழ்நாடு அரசை சேர்ந்தவர்களும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி இருந்தது.
ஏற்கெனவே, தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இந்த விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்களா என்பது குறித்து தெரியாத நிலையில், குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "குடியரசு தின விழாவையொட்டி நாளை (26.01.2023) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என் ரவி அவர்கள். மாண்புமிகு ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து மாண்புமிகு முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆளுநரின் விருந்தில் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியானது.
அதன்படி, குடியரசு தினத்தன்று நடந்த விருந்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே. பொன்முடி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு ஆளுநர் அளிக்கும் விருந்து கோவிட் பரவல் காரணமாக, ஆளுநர் அளிக்கும் விருந்து ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.
நீட் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அந்த விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார். ஆனால், அதற்குப் பிறகு, சுதந்திர தினத்தன்று நடந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.
ஆனால், கடந்த சில மாதங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பல்வேறு விழாக்களில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, 'தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்' என்று கூறியது பெரும் புயலைக் கிளப்பியது.

இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை ஆர்.என். ரவி தவிர்த்து விட்டு வாசித்ததும் அதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானமும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்ததும் இந்த மோதலை உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் முதலமைச்சரோ, அமைச்சரோ, தி.மு.கவின் கூட்டணி கட்சியினரோ கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதலமைச்சரும் ஆளும் கட்சியினரும் பங்கேற்றிருக்கின்றனர்.
தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த மாற்றம் எப்படி நடந்தது?
தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக ஆளுநர் தந்த விளக்கம், அவர் இறங்கிவந்திருப்பதைக் காட்டுவதாக ஆளும்கட்சி நினைக்கிறது.
இதுதவிர, தொலைபேசி மூலம் ஆளுநரே முதலமைச்சரை அழைத்ததாலும் இந்த விருந்தில் முதலமைச்சர் தரப்பு கலந்துகொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து நடந்துகொள்வதாக் கூறி, இந்த விருந்தைப் புறக்கணித்த கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளும்கட்சியின் இந்த நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?
குடியரசு தின விருந்தைப் புறக்கணிப்பது என்ற முடிவை ஆளும் கட்சியைக் கலந்தாலோசித்து அவர்கள் எடுத்தார்களா எனக் கேள்வியெழுப்புகிறார் டி. ராமகிருஷ்ணன்.
"ஒரு ஆட்சி என்று இருந்தால் அதன் பல்வேறு மட்டங்களில் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஏன் ஒரே அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால், இது போன்ற நிகழ்வுகளில் மரியாதை அளிப்பது என்பது, அந்த தனி நபருக்கு அளிக்கும் மரியாதை அல்ல. அந்தப் பதவிக்கு அளிக்கும் மரியாதை. அப்படித்தான் முதல்வர் கலந்துகொண்டிருப்பார் எனக் கருதுகிறேன். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல்கள் தொடரும்பட்சத்தில், நிர்வாகம் பாதிக்கப்படும். அம்மாதிரி சூழலில், இரு தரப்பும் இதுபோல இணைவது நல்லதுதான். மற்றொரு பக்கம்பார்த்தால், இந்த விருந்தில் கலந்துகொண்ட பிறகும்கூட, கருத்து வேறுபாட்டை இருவரும் தொடர முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது போன்ற மோதல்களை மிக மோசமான நிலைக்கு எடுத்துச்செல்ல மாட்டார்கள். தெலங்கானாவில் ஆளுநர் - முதல்வர் மோதல் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறது. இங்கே அது போல இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
இந்த விருந்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியினர் கலந்துகொண்டது தர்மசங்கடமாக இருக்காதா என்று கேட்டால், அவர்கள் தங்கள் புறக்கணிப்பு முடிவை, ஆளும்கட்சியை கலந்தாலோசித்து எடுத்தார்களா என்று கேட்க வேண்டும். தவிர, அதனை எதற்காக ஒரு அறிக்கையாக வெளியிட்டார்கள் என்பதும் தெரியவில்லை. புறக்கணிப்பது என்றால் போகாமல் இருந்துவிடலாமே? எதற்காக அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

ஆனால், ஆளுநரும் அரசும் இணக்கமாவது மாநிலத்திற்கு நல்லது. அந்த வகையில் இதனை வரவேற்க வேண்டும் என்கிறார்" மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.
வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமென நான் சொல்ல முடியாது. ஆனால், முதலமைச்சர் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டதோடு, விட்டுவிட்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை." என்று சொன்னார்.
இந்த விழாவில் தி.மு.க. கலந்துகொண்டதாகக் கருதவில்லை; அரசு சார்பில் முதல்வரும் அமைச்சரும் கலந்துகொண்டதாகவே கருதுகிறேன் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
"ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு இணக்கமான சூழலுக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆகவே முதல்வரும் அமைச்சரும் இதில் கலந்துகொண்டிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால், ஆளுநர் அப்படி இறங்கிவந்திருப்பதைப் போலத் தோற்றம் தருவதை நாங்கள் உண்மையென நம்பவில்லை. அதை ஒரு தந்திரமாகத்தான் நினைக்கிறோம். அவர் உண்மையிலேயே இறங்கிவருவதாக இருந்திருந்தால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் பல மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் மாநிலமே நெருக்கடியில் இருக்கிறது. தேநீர் விருந்து அளிப்பது ஆளுநரின் முதன்மையான கடமையல்ல. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் அவரது முதன்மைக் கடமை. அதை அவர் சரியாகச் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். குடியரசு தின விழாவில் தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் வாகனங்கள் இடம்பெற்றிருந்தன. ஆகவே, தனது அரசு ரீதியான கடமையை அவர் செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆளுநர் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு" என்கிறார் ரவிக்குமார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆளுநர் சென்னாரெட்டியுடன் மோதல் ஏற்பட்டபோது, இது போன்ற தேநீர் விருந்துகள் நடந்தால், அமைச்சர்கள் பெரும்பாலும் தத்தம் மாவட்டங்களில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதன் மூலம் அமைச்சர்களும் விருந்தில் கலந்துகொள்ள மாட்டார்கள், புறக்கணிப்பு என்ற பேச்சும் எழாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் டி. ராமகிருஷ்ணன்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான மோதல் ஓரளவுக்குத் தணிந்திருப்பதைப் போன்ற தோற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதைவைத்துத்தான் இந்த நல்லுறவு எவ்வளவு நாட்களுக்கு நீளும் என்பது தெளிவாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























