இந்த மேற்கத்திய நாட்டில் சில குழந்தைகள் பிறந்த உடனேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது ஏன்?

- எழுதியவர், சோபியா பெட்டிசா
- பதவி, பிபிசி குளோபல் ஹெல்த்
- எழுதியவர், வூடி மோரிஸ்
- பதவி, பிபிசி உலக சேவை, டென்மார்க்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
2024 நவம்பர் மாதம் கெய்ராவின் மகள் பிறந்தபோது, குழந்தையை பராமரிப்பு மையத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு முன், அவருக்கு தனது குழந்தையுடன் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது.
"அவள் பிறந்த உடனேயே, எங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று நிமிடங்களைக் கணக்கிடத் தொடங்கிவிட்டேன்," என்று 39 வயதான கெய்ரா நினைவுகூர்கிறார்.
"எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்."
தனது பச்சிளம் குழந்தை ஜம்மியை கொடுக்க வேண்டிய தருணம் வந்தபோது, என்னை மன்னித்துக் கொள் என்று கெய்ரா தன் குழந்தையிடம் சொல்லிவிட்டு, அடக்க முடியாமல் அழுததாகக் கூறுகிறார்.
"என் ஆன்மாவின் ஒரு பகுதி இறந்துவிட்டது போல் உணர்ந்தேன்."
அரசின் சமூக நலத்துறையால் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வரும் டென்மார்க்கில் வசிக்கும் பல கிரீன்லாந்து குடும்பங்களில் கெய்ராவும் ஒருவர்.
பெற்றோராக இருப்பதற்கான தகுதியை மதிப்பிடுவதற்காக டென்மார்க்கில் எஃப்கேயூ என அழைக்கப்படும் "பெற்றோர் திறன் மதிப்பீட்டு" பரிசோதனைகள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் பல குழந்தைகளும் பச்சிளம் குழந்தைகளும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்றன .
பல தசாப்தங்களாக எழுந்து வந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, 2025 மே மாதத்தில் கிரீன்லாந்து குடும்பங்களிடம் இந்தத் தேர்வுகளைப் பயன்படுத்துவதை டென்மார்க் அரசு தடை செய்தது. இருப்பினும், டென்மார்க்கின் பிற குடும்பங்களிடம் இத்தேர்வுகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக பல மாதங்கள் எடுக்கும் இந்த மதிப்பீடுகள், குழந்தைகள் புறக்கணிப்பு அல்லது பாதிப்பு அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் கருதும் சிக்கலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மதிப்பீடுகளில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடனான நேர்காணல்கள், எண்களின் வரிசையை தலைகீழாக நினைவுகூருதல் போன்ற அறிவாற்றல் சோதனைகள், பொதுஅறிவு வினாக்கள், ஆளுமை மற்றும் உணர்ச்சி நிலை தொடர்பான பரிசோதனைகள் ஆகியவை இடம்பெறுகின்றன
சமூகப் பணியாளர்கள் மற்றும் பிற நிபுணர்களின் அனுபவ அடிப்படையிலான தனிப்பட்ட கருத்துகளால் வழங்கப்படும் மதிப்பீடுகளைவிட, இந்தத் தேர்வுகள் பெற்றோரின் திறனை மிகவும் நடுநிலையாகவும் நியாயமாகவும் மதிப்பிட உதவுகின்றன என்று இந்தத் தேர்வுகளை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், விமர்சகர்கள், ஒருவர் நல்ல பெற்றோராக இருப்பாரா என்பதை இந்தத் தேர்வுகள் அர்த்தமுள்ள வகையில் கணிக்க முடியாது என்று கூறுகின்றனர்.

நிலை என்ன?
மேலும், இந்தத் தேர்வுகள் டேனிஷ் கலாசார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை என்றும், பெரும்பாலான கிரீன்லாந்து மக்களின் தாய்மொழியான கலால்லிசுட் மொழிக்கு பதிலாக டேனிஷ் மொழியிலேயே நடத்தப்படுகின்றன என்றும் எதிர்ப்பாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.
மேலும் இது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கிரீன்லாந்து மக்கள் டேனிஷ் குடிமக்கள் என்பதால், அவர்கள் டென்மார்கில் வாழவும் வேலை செய்யவும் முடிகிறது.
வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல காரணங்களால் ஆயிரக்கணக்கான கிரீன்லாந்து மக்கள் டென்மார்க்கில் வசித்து வருகின்றனர்.
அரசு நிதியுதவி பெறும் ஆய்வு நிறுவனமான டேனிஷ் சமூக ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, டென்மார்க்கில் வாழும் கிரீன்லாந்து பெற்றோரின் குழந்தைகள், டேனிஷ் பெற்றோரின் குழந்தைகளைவிட 5.6 மடங்கு அதிகமாக பராமரிப்பு அமைப்புகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
2025 மே மாதத்தில், எஃப்கேயூ தேர்வுகள் பயன்படுத்தப்பட்ட வழக்குகள் உட்பட, தங்கள் குடும்பங்களிடமிருந்து கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட கிரீன்லாந்து குழந்தைகள் தொடர்பான சுமார் 300 வழக்குகளை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்தது.
ஆனால், 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, பெற்றோர் திறன் மதிப்பீட்டு தேர்வுகள் பயன்படுத்தப்பட்ட வெறும் 10 வழக்குகள் மட்டுமே அரசால் மறுபரிசீலனை செய்யப்பட்டதாக பிபிசி கண்டறிந்தது. அந்த மறுபரிசீலனைகளின் விளைவாக எந்த கிரீன்லாந்து குழந்தையும் குடும்பத்திடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை.
2024ஆம் ஆண்டு, கெய்ரா கர்ப்பமாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், "பிறக்கவிருக்கும் குழந்தையை சுயமாகப் பராமரிக்கத் தேவையான பெற்றோர் திறன்கள் அவரிடம் போதுமான அளவில் இல்லை" என்று முடிவு செய்யப்பட்டது
அந்த மதிப்பீட்டின் போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், "அன்னை தெரசா யார்?" மற்றும் "சூரியனின் கதிர்கள் பூமியை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?" போன்றவையும் இருந்ததாக கெய்ரா கூறுகிறார்.

பெற்றோர் திறன் சோதனைகளை ஆதரிக்கும் உளவியலாளர்கள், இது போன்ற கேள்விகள் பெற்றோரின் பொது அறிவையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய விஷயங்களைப் பற்றிய அவர்களின் புரிதலையும் மதிப்பிடுவதற்காகவே கேட்கப்படுகின்றன என்று வாதிடுகின்றனர்.
"என்னை ஒரு பொம்மையுடன் விளையாடச் சொன்னார்கள். அதன்பிறகு, அந்தப் பொம்மையுடன் போதுமான அளவு கண் தொடர்பு ஏற்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினர்," என்று கெய்ரா கூறுகிறார்
இப்படிப்பட்ட சோதனைகள் செய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியபோது, "உனக்கு போதுமான அளவு நாகரிகம் இருக்கிறதா, ஒரு மனிதனைப் போல நடந்து கொள்ள முடியுமா என்பதைப் பார்க்க" என்று உளவியலாளர் தன்னிடம் சொன்னதாக கெய்ரா குற்றம் சாட்டுகிறார்.
கெய்ராவின் வழக்கை கையாண்ட உள்ளூர் நிர்வாகம், தனிப்பட்ட குடும்பங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியது. அதே நேரத்தில், ஒரு குழந்தையின் "உடல்நலம், வளர்ச்சி மற்றும் நலன்" குறித்து தீவிரமான கவலைகள் எழும்போதுதான், அந்தக் குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்து பராமரிப்பு அமைப்பின் பொறுப்பில் ஒப்படைக்கும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் விளக்கியது.
2014ஆம் ஆண்டு, கெய்ராவின் மற்ற இரண்டு குழந்தைகள், அப்போது ஒன்பது வயது மற்றும் எட்டு மாத வயதுடையவர்கள் பராமரிப்பு அமைப்பின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கெய்ராவின் பெற்றோர் திறன்கள் வேகமாக வளர்ச்சி அடையவில்லை என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது 21 வயதாகும் அவரது மூத்த மகள் சோய், 18 வயதில் மீண்டும் தாயுடன் வாழத் திரும்பினார். இப்போது அவர் தனியாக ஒரு குடியிருப்பில் வசித்து வருவதுடன், தனது தாயை அடிக்கடி சந்தித்து வருகிறார்
தனது குழந்தை ஜம்மியுடன், விரைவில் மீண்டும் இணைந்துவிடலாம் என்ற நம்பிக்கை கெய்ராவுக்கு இருக்கிறது. தற்போது காப்பகத்தில் இருக்கும் தனது மகள் ஜம்மியை கெய்ரா வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மகளைப் பார்க்க காப்பகத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும், பூக்களையும், சில சமயங்களில் சிக்கன் சூப் போன்ற கிரீன்லாந்து உணவுகளையும் எடுத்துச் செல்வார்.
"அவளுடைய கலாசாரத்தின் ஒரு சிறிய பகுதி அவளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவற்றை எடுத்துச் செல்கிறேன்," என கெய்ரோ கூறுகிறார்.

'மிகவும் கொடூரமான மனவேதனையை உணர்ந்தேன்'
கிரீன்லாந்து மக்களிடம் பெற்றோர் திறன் சோதனை தேர்வுகள் நடத்தப்பட்ட விதத்தில் தவறுகள் ஏதேனும் நிகழ்ந்தனவா என்பதை அரசின் மறுபரிசீலனை ஆய்வு ஆராயும் என்று டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது.
ஜோஹன் மற்றும் உல்ரிக்கின் மகன் 2020-இல் தத்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்று டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது.
43 வயதான ஜோஹன் கர்ப்பமாக இருந்தபோது, 2019-ஆம் ஆண்டு பெற்றோர் திறன் சோதனையை எதிர்கொண்டார். ஜம்மியைப் போலவே, அவருடைய மகனும் பிறந்த உடனேயே அழைத்துச் செல்லப்பட்டார்.
இருப்பினும், ஜோஹனின் குழந்தை மருத்துவர்கள் கணித்த பிரசவ நாளுக்கு முன்னதாகவே பிறந்ததாலும், பாக்ஸிங் டே மற்றும் சமூக சேவையாளர்கள் விடுமுறையில் இருந்த நாளன்று பிறந்ததால், அவரும் அவரது கணவர் உல்ரிக்கும் குழந்தையுடன் 17 நாட்கள் இருக்க முடிந்தது.
"என்னுடைய மகனுடன் இருப்பது, அணைத்துக்கொள்வது, டயப்பர்களை மாற்றுவது, இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு குழந்தைக்காக என் மனைவி ஜோஹன் தாய்ப்பாலை பம்ப் செய்து பத்திரப்படுத்துவதை உறுதி செய்வது" என "ஒரு தந்தையாக என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான நேரம் அது" என்று 57 வயதான உல்ரிக் கூறுகிறார்.
குழந்தையை அழைத்துச் செல்வதற்காக இரண்டு சமூக சேவையாளர்களும் காவல்துறை அதிகாரிகள் இருவரும் ஜோஹன் மற்றும் உல்ரிக்கின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சியதாக ஜோஹன் மற்றும் உல்ரிக் தம்பதிகள் கூறுகிறார்கள்.
இறுதியில், குழந்தைக்கு கடைசியாக ஒரேயொரு முறை தாய்ப்பால் கொடுக்கலாமா என்று ஜோஹன் கேட்டார்.
''ஒப்படைக்கும் முன்பு என் மகனுக்கு ஆடைகளை அணிவித்துக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கொடூரமான மனவேதனையை உணர்ந்தேன்," என்கிறார் உல்ரிக்.
ஜோஹனுக்கு வேறொரு உறவு மூலம் இரு குழந்தைகள் இருந்தனர். 2010-ம் ஆண்டில் அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு, ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகளும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2019ஆம் ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையில், ஜோஹன் ''சுய பெருமை கொண்டவர்'' என்றும், "மனவளர்ச்சி குறைபாடு" கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னைப் பற்றிய இந்த இரண்டு விளக்கங்களையும் ஜோஹன் நிராகரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கோட்பாட்டளவில் பார்க்கும்போது, இந்த சோதனையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்ற தனிப்பட்ட மதிப்பெண் முறை கிடையாது. ஒரு குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்து பராமரிப்பு அமைப்பின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உள்ளூர் நிர்வாகங்கள் பரிசீலிக்கும் பல காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
ஆனால், சோதனைகளை நிர்வகித்து வந்த உளவியலாளர் இசக் நெல்லெமன், நடைமுறையில் அவை "மிக முக்கியமானவை. சோதனைகளின் முடிவு மோசமாக இருக்கும்போது, சுமார் 90% வழக்குகளில் அவர்கள் தங்கள் குழந்தைகளை இழப்பார்கள்" என்று கூறுகிறார்.
மேலும், இந்தத் தேர்வுகளில் சிலவற்றுக்கு போதுமான அறிவியல் அடிப்படை இல்லை என்றும், அவை பெற்றோரின் திறனை மதிப்பிடுவதற்காக அல்லாமல், ஒருவரின் ஆளுமைப் பண்புகளை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் நெல்லெமன் வாதிடுகிறார்.
இருப்பினும், தற்போது சோதனைகளை நிர்வகிக்கும் குழுவின் மூத்த உளவியலாளரான துரி ஃபிரடெரிக்சன், இந்த சோதனைகள் சரியானவை அல்ல என்றாலும், "அவை மதிப்புமிக்க, விரிவான உளவியல் நுட்பங்கள்" என்று கூறுகிறார்.
கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளப்படுவதாக சொல்வதை தான் நம்பவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
2019ஆம் ஆண்டு நடந்த உளவியல் பரிசோதனையில், ஜோஹனிடம் மைத் தழும்புகள் போன்ற படங்களைக் காட்டி, அதில் என்ன தெரிகிறது என்று கேட்டனர். அதற்கு, "ஒரு பெண் சீல் விலங்கை வெட்டுவது போலத் தெரிகிறது" என்று அவர் பதிலளித்தார். கிரீன்லாந்தின் வேட்டையாடும் கலாசாரத்தில் இது சாதாரணமாகக் காணப்படும் ஒரு காட்சியாகும்.
தனது பதிலைக் கேட்ட உளவியலாளர் தன்னை "காட்டுமிராண்டி" என்று அழைத்ததாக ஜோஹன் குற்றம் சாட்டுகிறார்.
2019ஆம் ஆண்டில் அந்தத் தம்பதியரின் மதிப்பீட்டில் தொடர்புடைய உள்ளூர் நிர்வாகம், ஜோஹானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
அதற்கு பதிலாக, அந்த மதிப்பீட்டு அறிக்கை "பெற்றோரின் ஒட்டுமொத்த குழந்தை பராமரிப்பு திறன் குறித்து குறிப்பிடத்தக்க அளவிலான கவலைகளை வெளிப்படுத்தியது" என்றும், "அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அன்றாட செயல்திறன் குறித்தும் கவலைகள் இருந்தன" என்றும் தெரிவித்தது

'குழந்தை நடக்க ஆரம்பித்ததை பார்க்க முடியவில்லை'
பெற்றோரிடம் இருந்து காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜோஹன் மற்றும் உல்ரிக்கின் மகன், 2020-இல் தத்தெடுக்கப்படும் வரை வாரவாரம் பெற்றோருக்கான பார்வை நேரத்தின்போது குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தை தத்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்கள் மகனை பார்க்கவேயில்லை.
"அவன் முதன்முதலாக நடந்ததை, முதன்முதலாக பேசியதை, முதல் பல் முளைத்ததை, பள்ளிக்குச் சென்ற முதல் நாளை — இவற்றில் எதையும் நான் பார்க்க முடியவில்லை," என்று ஜோஹன் கூறுகிறார்.
இருப்பினும், தங்கள் குழந்தை பிறந்த சில நாட்களில், மகனுக்கு பெயர் சூட்டி, தங்களின் பெயர்கள் மற்றும் முகவரியை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பதிவை உருவாக்கிவிட்டனர்.
"குழந்தை எங்களிடம் திரும்பி வருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க நாங்கள் ஆவணம் மூலமாக காகிதப் பாதை ஒன்றை உருவாக்க வேண்டியிருந்தது," என்று ஜோஹன் கூறுகிறார்.
ஜோஹன் மற்றும் உல்ரிக்-இன் வழக்கை அவர்களது வழக்கறிஞர் ஜீனெட் ஜோரெட் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறார்.
ஆனால், டென்மார்க்கின் சமூக நலத்துறை அமைச்சர் சோஃபி ஹெஸ்டார்ப் ஆண்டர்சன், ஏற்கனவே தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை அரசு மீண்டும் திறக்கப் போவதில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஏனெனில், அந்தக் குழந்தைகள் தற்போது "அன்பும் அக்கறையும் கொண்ட குடும்பங்களில்" நிலையாக வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.
மறுபரிசீலனை நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, "இது மெதுவாக நடப்பது போலத் தோன்றலாம். ஆனால் நாங்கள் இப்போது தான் பணியைத் தொடங்கியுள்ளோம்," என்று அவர் பதிலளித்தார்.
மேலும், குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிப்பது அல்லது தத்தெடுப்பதற்கான முடிவுகள் மிகவும் விரிவான ஆய்வு நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றும், "ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு குழந்தையைப் பராமரிக்கும் திறன் அந்தக் குடும்பத்துக்கு உள்ளதா என்பதை நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்றும் அவர் கூறினார்.
வடக்கு டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் கொம்முனேவைச் சேர்ந்த சமூகப் பணியாளர் குழுத் தலைவரான டோர்டிஸ் ஜேக்கப்சனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். ஒரு குழந்தையை பெற்றோரிடம் இருந்து பிரித்து காப்பக பராமரிப்பில் சேர்க்கும் முடிவு டென்மார்க்கில் ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
பாதுகாப்பு தொடர்பான கவலைகளை முதலில் அறிவிப்பது பெரும்பாலும் பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் தான் என்றும், ஒரு குழந்தை நிரந்தரமாக தத்தெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அதை அங்கீகரிப்பதற்கான முடிவு நீதிபதி ஒருவரால் எடுக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கிரீன்லாந்தைச் சேர்ந்த தாய் ஒருவர், தனது குழந்தையுடன் மீண்டும் இணைந்த அரிய நிகழ்வும் அண்மையில் நிகழ்ந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காப்பக பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த பிலிங்குவாக்கின் ஆறு வயது மகள் சில மாதங்களுக்கு முன்பு தாயிடம் திருப்பி அனுப்பப்பட்டார்.
சமூக சேவைகளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு எதிர்பாராத ஒன்று என 39 வயதான பிலிங்குவாக் கூறுகிறார்.
"போனில் அவர்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அழுகையும் சிரிப்பும் ஒன்றாக வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. 'என் மகள் எங்களுடைய வீட்டிற்கு வந்துவிடுவாள்' என்ற நினைப்பு மட்டுமே எனக்கு இருந்தது."
2021-ஆம் ஆண்டில் பிலிங்குவாக்கின் மூன்று குழந்தைகளும் பராமரிப்பில் வைக்கப்பட்டனர். அவருடைய மற்ற இரு குழந்தைகளுக்கும் அப்போது ஆறு மற்றும் ஒன்பது வயது.
தனது குழந்தைகளுக்கு ஏற்ற புதிய வீட்டைக் கண்டுபிடிக்கும் வரை, அவர்களை தற்காலிக பராமரிப்பில் வைக்க உள்ளூர் அதிகாரியிடம் ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார்.
விரைவில் தனது குழந்தைகள் தன்னிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவார்கள் என்று பிலிங்குவாக் நம்பியிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் பெற்றோர் திறன் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த சோதனைகளில் பிலிங்குவாக் "உறவுகளை சீர்குலைக்கும்" பழக்கம் கொண்டவர் என்றும், பெற்றோராக இருக்க தகுதியற்றவர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிலிங்குவாக்-இன் ஆறு வயது மகள் வீட்டிற்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவரது மற்ற இரண்டு மூத்த குழந்தைகளும் திரும்பி வந்துவிடுவார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை பிலிங்குவாக்கின் பராமரிப்பிற்கு திருப்பி அனுப்புவது என்பது அரசாங்க மதிப்பாய்வால் பரிந்துரைக்கப்படுவதற்குப் பதிலாக உள்ளூர் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. பிலிங்குவாக்-இன் வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க உள்ளூர் அதிகாரி மறுத்துவிட்டார்.
நான்கு வருடங்களுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்த தாயும் குழந்தையும் தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்புவது கடினமாகவே இருந்தது.
"குளியலறைக்குச் சென்று நான் கதவை மூடினால், அவள் பீதியடைந்து 'அம்மா, உன்னை பார்க்க முடியவில்லை' என்று கூறுவாள்," என்று பிலிங்குவாக் கூறுகிறார்.
தனது மகளை மீண்டும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் இருப்பதாகவும் கூறும் அவர், "என்னுடைய மகளை அவர்கள் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அழைத்துச் சென்றுவிடலாம், அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என்று அஞ்சுகிறார்.

தனது மகள் ஜம்மியுடன் இல்லாதபோதும், அவருடைய முதல் பிறந்தநாளுக்காக கெய்ரா தயாராகி வருகிறார்.
மகளுக்காக, பாரம்பரிய முறையிலான கிரீன்லாந்து பனிச்சறுக்கு வண்டியை மரத்தில் உருவாக்குகிறார். வண்டியின் முன்புறத்தில் துருவ கரடி ஒன்று வரையப்பட்டுள்ளது.
அவருடைய மகள் வீட்டிற்கு வரமாட்டாள் என்று இந்த மாத தொடக்கத்தில் அவரிடம் கூறப்பட்டது, குறைந்தபட்சம் இப்போதைக்கு. ஆனால் கெய்ரா தனது நம்பிக்கையை இழக்கவில்லை.
கெய்ரா தனது அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பறையில் ஒரு கட்டில், தனது படுக்கைக்கு அருகில் ஒரு கட்டிலையும் போட்டு தயாராக வைத்திருக்கிறார். அத்துடன் குழந்தைக்கான உடைகள் மற்றும் டயப்பர்களையும் வாங்கி வைத்திருக்கிறார்
"என் குழந்தைகளுக்காகப் போராடுவதை நான் நிறுத்த மாட்டேன்.
"இந்த சண்டையை நான் முடிக்கவில்லை என்றால், அது எதிர்காலத்தில் என் குழந்தைகளின் சண்டையாக இருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































