வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய கிரிக்கெட் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் விவாதம் நடந்து வருகிறது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் விவாதம் நடந்து வருகிறது (கோப்புப் படம்)
    • எழுதியவர், ரஷீத் ஷகூர்
    • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், கராச்சியிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முழு உலகமும் கால்பந்து ஆர்வத்தில் மூழ்கி, அனைவரின் கவனமும் ஃபிஃபா உலகக் கோப்பை மீது இருக்கும் இந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திடம் தொடர்ந்து தோல்வியடைவதும் எந்தவொரு பெரிய தலைப்புச் செய்தியையும் விடக் குறைவானது அல்ல.

இந்த ஏமாற்றமளிக்கும் செயல்பாடு குறித்து இந்தியா முழுவதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேநேரத்தில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணி நிர்வாகம் நியாயம் செய்யவில்லை என்றும், அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக சாம்பியனாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்திற்கு எதிரான இரண்டு டி-20 சர்வதேச போட்டிகளிலும் தோல்வியடைந்த பிறகு, இங்கிலாந்துடனான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதனுடன், பிப்ரவரி 2022 முதல் டி-20 தரவரிசையில் தான் தக்கவைத்திருந்த முதலிடத்தையும் இந்தியா இழந்தது.

டி20 இல் இந்தியா முதலிடத்தை இழந்தது நிச்சயமாக ஒரு பெரிய விஷயம் தான், ஆனால் இங்கிலாந்திற்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாட வைக்கப்பட்ட பிறகு ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றப்பட்ட 15 வயது வைபவ் சூர்யவன்ஷி குறித்தே தற்போது அதிக விவாதம் நடந்து வருகிறது.

ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸில் சங்கர் நாராயணன் தனது கட்டுரை ஒன்றில், இதற்கடுத்து ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் ஒரு வீரரை ஒரே ஒரு போட்டிக்காக இந்தியா வெளியே உட்கார வைத்துள்ளது, அதே நேரத்தில் அவருக்குப் பதிலாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம்பெறாத ஒரு வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் போட்டியில் சூர்யவன்ஷியை வெளியேற்றிவிட்டு சஞ்சு சாம்சன் விளையாட வைக்கப்பட்டார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த சுனில் கவாஸ்கரும் கடைசி டி-20 போட்டியில் சூர்யவன்ஷி சேர்க்கப்படாதது குறித்து மகிழ்ச்சியடைந்ததாக  தெரியவில்லை (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த சுனில் கவாஸ்கர் கடைசி டி20 போட்டியில் சூர்யவன்ஷி சேர்க்கப்படாதது குறித்து மகிழ்ச்சியடைந்ததாக தெரியவில்லை (கோப்புப் படம்)

வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமாகி 14 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் அவர் 13 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் நான்காவது போட்டியில் அவரது பேட்டிலிருந்து 15 ரன்கள் வந்தன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவர் 237 ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் எடுத்திருந்தார், அதில் 72 சிக்ஸர்கள் அடங்கும்.

அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து, சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டனர், அதே நேரத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த முடிவிற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஐந்தாவது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சூர்யவன்ஷி வீரர்கள் அமரும் இடத்தில் தனியாகவும் மிகவும் ஏமாற்றத்துடனும் அமர்ந்திருப்பது போல காணப்பட்டது என்று சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இது கேப்டன் ஷ்ரேயாஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மிகவும் கடுமையான முடிவு என்று கூறப்பட்டது.

இந்தியா கண்ட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுனில் கவாஸ்கரும் கடைசி டி20 போட்டியில் சூர்யவன்ஷி வெளியேற்றப்பட்டதில் மகிழ்ச்சியாகத் தெரியவில்லை.

"இந்தப் போட்டி தொடரின் முடிவை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்திருந்தால், சூர்யவன்ஷியை விளையாட வைக்காததன் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி இல்லை. ஒரு 15 வயது வீரரை வெறும் மூன்று போட்டிகளுக்குப் பிறகு வெளியேற்றுவது சரியல்ல. யாராவது அவரது தோளில் கைபோட்டு, இது முடிவல்ல என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.

சூர்யவன்ஷிக்கு அயர்லாந்திற்கு எதிராகவே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார்.

இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வானும் சூர்யவன்ஷியை அணியில் இருந்து நீக்கிய முடிவு குறித்து வியப்பு தெரிவித்தார். அவர் தனது தலைமுறையின் அசாதாரண திறமைசாலி என்றும், வெறும் மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவர் வெளியேற்றப்பட்டது நியாயமானதல்ல என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா தோற்றது குறித்தும், வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் விவாதம் நடந்து வருகிறது.

பிபிசி நியூஸ் ஹிந்திக்கு பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் அளித்த பேட்டியில், "இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கைக்கு இரையாகிவிட்டது. அது இங்கிலாந்தை சாதாரணமாக நினைத்தது, ஆனால் தங்களின் சொந்த சூழ்நிலைகளில் இங்கிலாந்து ஒரு சிறந்த டி20 அணியாகும்," என்றார்.

"மறுபுறம், இந்திய வீரர்கள் நீண்ட காலமாக ஐபிஎல் மற்றும் இதர சர்வதேச போட்டிகளில் பேட்டிங்கிற்கு சாதகமான உள்நாட்டு பிட்சுகளில் விளையாடி வந்தனர். எனவே நடந்த விஷயங்கள் முற்றிலும் எதிர்பாராதவை அல்ல."

"சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை, அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அவருக்கு முழுமையான வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரு வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

"இது தவிர, அவர்கள் தங்களது அணியின் வெற்றிகரமான கேப்டன் சூர்யகுமாரையும் வெளியேற்றிவிட்டனர். கேப்டனுக்கும் தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் அணிக்குத் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தந்து கொண்டிருந்தார். அவரது செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதற்காக அவரை அணியில் இருந்து வெளியேற்றியிருக்கக் கூடாது," என்றார்.

"கடைசி டி20 போட்டியில் இருந்து சூர்யவன்ஷி வெளியேற்றப்பட்டது ஆச்சரியமளிக்கிறது, அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருவதில் எந்த நஷ்டமும் இல்லை. இந்த முடிவு நிச்சயமாக அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும்," என்று மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் வஹீத் கான் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

"இந்த இளம் பேட்ஸ்மேனிடம் திறமை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களிடம் காணப்பட்ட அதே பிரச்னைதான் இவரிடமும் இருந்தது. அவர்கள் ஐபிஎல்லின் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சுகள் மற்றும் சிறிய பவுண்டரிகளில் விளையாடி வந்தனர். அவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் பெரிய ஷாட்டுகளை விளையாட முயன்று அவர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்," என்று வஹீத் கான் கூறினார்.

இந்திய அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாடு குறித்து பேசிய வஹீத் கான், "இந்த முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை. இந்திய அணி இப்படி தோற்கும் என்று, குறிப்பாக அயர்லாந்திற்கு எதிராக இப்படி தோற்கும் என யாரும் நினைக்கவில்லை,. இதற்கு ஒரு காரணம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் இருந்த சிரமம். ஏனெனில் இந்திய அணி ஐபிஎல் பிட்சுகளில் விளையாடிய உடனேயே நேரடியாக இங்கிலாந்து சென்றடைந்தது," என்றார்.

"மற்றொரு பெரிய காரணம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். அவர் தொடர்ந்து தேவையற்ற மாற்றங்களைச் செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தேவைப்படும் பயிற்சி முறைக்கு ஏற்ப அவர் இன்னும் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது," என்றார்.

கௌதம் கம்பீரின் பங்கு

பலர் கௌதம் கம்பீரின் பங்கு குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றனர் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பலர் கௌதம் கம்பீரின் பங்கு குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றனர் (கோப்புப் படம்)

"சூர்யவன்ஷி மிகப் பெரிய திறமையான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரது வாழ்க்கையை மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய அவசியம் உள்ளது," என பாகிஸ்தானின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாஜித் கான் கூறினார்.

"டி20 கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் மிக விரைவாக வரும் மற்றும் வீரர்கள் வேகமாகத் தோல்வியடையவும் கூடும். சர்வதேச கிரிக்கெட் எளிதானது அல்ல. சூர்யவன்ஷி இன்னும் முழுமையாக வளர நேரம் எடுக்கும்."

"இருப்பினும் அவருக்கு அயர்லாந்திற்கு எதிராக அறிமுக வாய்ப்பு வழங்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக அவருக்கு வாய்ப்பளித்தபோது, முழுமையாக அதனை அளித்திருக்க வேண்டும்," என பாஜித் கான் கூறினார்.

"இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு என்று பார்க்கும்போது, அனைத்து வீரர்களும் ஐபிஎல்லின் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சுகள் மற்றும் சிறிய பவுண்டரிகளில் விளையாடி வந்தனர். அதே நேரத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. இது தவிர, அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன," என்றார்.

பகுப்பாய்வாளர் நௌமான் நியாஸ், இந்திய அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டிற்கு கௌதம் கம்பீரே மிக முக்கியக் காரணம் என்று கருதுகிறார். அவரைப் பொறுத்தவரை, கம்பீர் இந்தப் பொறுப்பிற்குப் போதுமான அளவு தயாராக இல்லை.

"கௌதம் கம்பீர் வந்த பிறகு அணியின் நிலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பது அனைவருக்கும் முன்பாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருந்தோ அல்லது முற்றிலும் அணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டதை அனைவரும் பார்த்துள்ளனர். அணியின் சமநிலையிலும் கௌதம் கம்பீர் செய்த தவறுகள் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன," என அவர் கூறினார்.

"சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை, அவர் அசாதாரண திறமை கொண்ட வீரர். அவருக்கு அயர்லாந்திற்கு எதிராக விளையாட வாய்ப்பளித்திருக்க வேண்டும், இதனால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு அவரது தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும். அதுமட்டுமல்லாமல், சஞ்சு சாம்சன் போன்ற போட்டியில் வெற்றி தேடித் தரும் வீரரின் தன்னம்பிக்கையிலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு