இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?

அமெரிக்கா - இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடப்பக்கத்தில் ஆயத்துல்லா ருஹொல்லா காமனெயியின் உருவப்படம் மற்றும் பாரசீக எழுத்துகளைக் கொண்ட இரானிய ரூபாய் நோட்டின் படம் இடம்பெற்றுள்ளது. வலப்பக்கத்தில் பலவண்ண சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒரு கொள்கலன் கப்பலின் வான்வழித் தோற்றம் காணப்படுகின்றது.
    • எழுதியவர், அலி ரமசானியன்
    • எழுதியவர், சாரா ஃபய்யத்
    • பதவி, பிபிசி நியூஸ் அரபிக்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துகள் உள்ளன.

வெளிநாடுகளில் உள்ள தங்களின் பணத்தைப் பெறுவதற்கு இரான் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் தடைகள் மற்றும் வங்கி கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தப் பணத்தின் பெரும் பகுதி இன்னும் அதற்கு எட்டாத தூரத்திலேயே உள்ளது.

பெரும்பாலான சொத்துகள் அமெரிக்காவில் இல்லை என்றாலும், அவற்றை இரான் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிப்பதில் அமெரிக்கா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல ஆண்டுகால தடைகள், பொருளாதாரத் தனிமைப்படுத்தல், கடுமையான பணவீக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு , அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலால் ஏற்பட்ட சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இரானியப் பொருளாதாரத்திற்கு, இந்த சொத்துகளின் ஒரு பகுதியை விடுவிப்பது கூட மிக முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும் இதில் உள்ள சட்ட, பொருளாதார மற்றும் அரசியல் தடைகளைக் கருத்தில் கொள்ளும்போது, எந்தவொரு ஒப்பந்தத்தையும் உண்மையான பணப் பரிமாற்றமாக மாற்றுவது மிகவும் மெதுவாகவும் சிக்கலாகவும் இருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

முடக்கப்பட்டுள்ள சொத்துகள் என்ன, இரான் இவற்றை எவ்வளவு எளிதாகப் பெற முடியும்?

முடக்கப்பட்டுள்ள சொத்துகளில் எவையெல்லாம் அடக்கம்?

ஜனவரி 2019 இல், இரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள பெர்சியன் கல்ஃப் ஸ்டார் கோ எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தின் புதிய 'பேஸ் 3' தளத்திற்கு மேல் பறக்கும்  இரானிய தேசியக் கொடி.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, இரானின் முடக்கப்பட்டுள்ள நிதிகளில் எண்ணெய் வருவாய், ஏற்றுமதி மூலம் கிடைத்த லாபம், வெளிநாட்டு கையிருப்பு மற்றும் சர்ச்சைக்குரிய சொத்துக்கள் ஆகியவை அடங்கும்.

முடக்கப்பட்டுள்ள இரானின் மொத்த சொத்துகளின் மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் அதன் மதிப்பு சுமார் 27 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த நிதி ஒரே கணக்கில், எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் வைக்கப்படவில்லை. மாறாக, இதில் எண்ணெய் வருவாய், எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார ஏற்றுமதி மூலம் கிடைத்த லாபம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் சில தசாப்தங்களுக்கு முந்தைய சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்கியுள்ள சொத்துகள் ஆகியவை அடங்கும்.

இரான் வெளிநாடுகளுக்கு எண்ணெயை விற்கும்போது, அதற்கான பணம் வழக்கமாக வாங்கும் நாட்டில் உள்ள கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இருப்பினும், பொருளாதாரத் தடைகள் காரணமாக இரானால் இந்த நிதியைத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர முடிவதில்லை.

சொத்துகள் முடக்கப்படுவதன் முதல் பெரிய அலை, 1979 ஆம் ஆண்டு டெஹ்ரானில் நடந்த அமெரிக்கத் தூதரக பிணைக்கைதிகள் நெருக்கடிக்குப் பிறகு தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சில சொத்துகள் விடுவிக்கப்பட்டாலும், 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பான சில கோரிக்கைகளும், சொத்துகளும் இன்னும் தீர்க்கப்படாத சிக்கல்களாக உள்ளன.

இரண்டாவது மற்றும் பரந்த அளவிலான கட்டுப்பாடுகள் 2011-12 இல் தொடங்கின.

அப்போது அணுசக்தித் தடைகள் கடுமையானதாக்கப்பட்டு, உலகளாவிய வங்கி அமைப்பின் சில பகுதிகளில் இருந்து இரான் நீக்கப்பட்டது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் (ஜேசிபிஓஏ) இருந்து 2018 இல் அமெரிக்கா விலகியதை அடுத்து இக்கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.

கட்டுப்பாடுகள் விரிவடைந்ததால், அதிகப்படியான வருவாய் வெளிநாடுகளில் முடங்கியது. அவை அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டன அல்லது அவற்றைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான வரம்புகளுக்கு உட்படுத்தப்பட்டன.

உலக விவகாரங்களுக்கான மத்திய கிழக்கு கவுன்சிலின் (Middle East Council on Global Affairs)பொருளாதார நிபுணரான பிரடெரிக் ஷ்னைடரின் கூற்றுப்படி, "பல்வேறு வகையான முடக்கங்கள்" உள்ளன.

இதில் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட நிதிகள், சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர முடியாத வருவாய்கள் மற்றும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ள பணம் ஆகியவை அடங்கும்.

பணம் எங்கே வைக்கப்பட்டுள்ளன?

அமெரிக்கா - இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா - இரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றன. அதில் பாகிஸ்தான், கத்தார் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். (கோப்புப் படம்)

இரானின் முடக்கப்பட்டுள்ள நிதிகளில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடம் இரான் விடுவிக்கக் கோரும் அதன் முடக்கப்பட்டுள்ள சொத்துகள் பின்வரும் நாடுகளில் உள்ளன.

  • அமெரிக்கா - 2 பில்லியன் டாலர்
  • லக்சம்பர்க் - 2 பில்லியன் டாலர்
  • இராக் 15 பில்லியன் டாலர்
  • கத்தார் - 6 பில்லியன் டாலர்
  • ஓமன் - 1 பில்லியன் டாலர்
  • இந்தியா -7 பில்லியன் டாலர்
  • சீனா 20–50 பில்லியன் டாலர்
  • ஜப்பான் 3 பில்லியன் டாலர்

அதன்படி, இரானின் முடக்கப்பட்டுள்ள நிதியின் ஒரு கணிசமான பகுதி, இரானின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளரான சீனாவில் உள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு பெரிய தொகை இராக்கில் உள்ளது. இது எரிவாயு மற்றும் மின்சார ஏற்றுமதிக்கான கட்டணங்களுடன் தொடர்புடையது, இதன் மதிப்பு 10 பில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) புள்ளிவிவரங்களின்படி, இரானிய எண்ணெய் வருவாய் சுமார் 6 பில்லியன் டாலர் பணம் தென் கொரியாவில் உள்ளது. இந்தத் தொகை 2023 இல் கத்தாரில் உள்ள கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், இரான் இந்த நிதியை குறுகிய காலத்தில் பயன்படுத்த முடியாது என்று அமெரிக்கா பின்னர் குறிப்பிட்டது. இதனால் அந்தப் பணம் தற்போதைக்கு தோஹாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற நிதிகள் இந்தியா, ஜப்பான் மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்க அதிகார வரம்பிற்குள் இருக்கும் தொகையானது ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகவே உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் படி இது சுமார் 2 பில்லியன் டாலர் ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இதனை விடுவிப்பது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.

அமெரிக்காவின் பங்கு என்ன?

அமெரிக்கா - இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பெரும்பாலான பணம் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தபோதிலும், இரண்டாம் நிலைத் தடைகளின் காரணமாக அந்த நிதிகள் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவின் ஒப்புதல் இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தபோதிலும், அவற்றின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கு முக்கியமாக 'இரண்டாம் நிலைத் தடைகள்' என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து தான் உருவாகிறது.

இந்த நடவடிக்கைகள் இரானை மட்டுமல்லாமல், அதனுடன் வணிகம் செய்யும் வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களையும் குறிவைக்கின்றன.

இரானிய நிதியை மாற்ற உதவும் எந்தவொரு நிறுவனமும் அமெரிக்க நிதி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை இழக்கும் அபாயத்தையோ அல்லது அபராதங்களையோ எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணமாக, இரானியப் பணத்தை வைத்திருக்கும் நாடுகள், அமெரிக்காவின் தெளிவான ஒப்புதல் இல்லாமல் அந்த நிதியை விடுவிக்கவோ அல்லது மாற்றவோ பெரும்பாலும் தயங்குகின்றன.

இரான் இந்த ஒப்பந்தத்தால் என்ன ஆதாயம் அடையக்கூடும்?

அமெரிக்கா - இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 300 பில்லியன் டாலர் வரை இருக்கும் என இரானிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர், மேலும் இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 10% வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சாத்தியமான பொருளாதார நிவாரணத்திற்கான இரண்டு முக்கிய வடிவங்களை கோடிட்டுக் காட்டுகிறது.

  • இரான் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் விலக்குகள், கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் வங்கி போன்ற தொடர்புடைய சேவைகளுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.
  • முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிதிகளுக்கான அணுகல், இரான் மத்திய வங்கிக்கு அந்த பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது.

இது குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள விரிவான மறுசீரமைப்பு முயற்சியையும் சுட்டிக்காட்டுகிறது. பிராந்திய கூட்டணியில் உள்ள நாடுகளுடன் இணைந்து இரான் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் செயல்படுத்தும் நடைமுறை இறுதி ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்குள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

இரானுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப் போவதில்லை என்பதை அமெரிக்கா கூறியுள்ளது (இரானுக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையே 2015 இல் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இது முற்றிலும் நேர்மாறானது என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது).

அதற்குப் பதிலாக உள்கட்டமைப்பு, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தும் எனக் கூறுகிறது.

நிதி இரானைச் சென்றடையுமா?

நடைமுறையில், இந்த நிதிகளைப் பயன்படுத்துவது தொடர்ந்து கட்டுப்படுத்தப்படலாம் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட போர்ஸ் & பஜார் பவுண்டேஷன் என்ற சிந்தனைக் குழுவின் நிறுவனர் எஸ்பாண்டியர் பாட்மன்கெலிட்ஜ் கூறுகிறார்.

இத்தகைய ஏற்பாடுகள் "மிகவும் சிக்கலான தடைகளை" எதிர்கொள்கின்றன. அதாவது இரான் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள்ளேயே அந்த நிதியைச் செலவிட முடியுமே தவிர, அதை சர்வதேச அளவில் மாற்றுவதற்குப் போராட வேண்டியிருக்கும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஒப்பந்தமும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை என்ற ஆழமான ஒரு பிரச்னையை ஷ்னைடர் சுட்டிக்காட்டுகிறார்.

சில அமெரிக்கத் தடைகள் நாடாளுமன்றத்தால் (காங்கிரசால்) சட்டமாக இயற்றப்பட்டுள்ளன என்று கூறும் அவர், ஒரு அதிபரால் தன்னிச்சையாக அவற்றை முழுமையாக நீக்க முடியாது, தற்காலிக விலக்குகளை மட்டுமே வழங்க முடியும் என்கிறார்.

இது இந்த நிவாரணங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த சந்தேகங்களை உருவாக்குகிறது என்றும் ஷ்னைடர் குறிப்பிடுகிறார்.

இதேபோன்ற ஒரு சூழல் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் ஏற்பட்டது, அப்போது இரான் சில நிதியாதாரங்களை மீண்டும் பெறும் உரிமையைப் பெற்றது.

இருப்பினும், பல வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கையுடனேயே செயல்பட்டன. 2018 இல் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தது.

முடக்கப்பட்ட சொத்துகளில் 12 பில்லியன் டாலர்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக இரானிய அரசு ஊடகம் கடந்த வாரம் தெரிவித்தது, ஆனால் அமெரிக்கா இதனை உறுதிப்படுத்தவில்லை.

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்காக வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு வழங்க இரானின் சொத்துகளின் ஒரு பகுதியை அமெரிக்கா பயன்படுத்துமா என்பது குறித்தும் நிச்சயமற்ற நிலை உள்ளது.

ஜூன் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இத்தகைய இழப்புகள் "இரானிய கணக்குகளில் இருந்து எடுக்கப்படும் நிதியைக் கொண்டு ஈடுசெய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த யோசனையை இரான் நிராகரித்துள்ளது.

அதன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி , தங்களது சொத்துகள் "அமெரிக்காவுக்கான போர்க் கொள்ளைப் பொருட்களோ அல்லது அதன் கூட்டாளிகளுக்குப் பணம் செலுத்துவதற்கான நிதியோ அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

இரானின் பொருளாதாரத்தில் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

உலக வங்கியின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் இரானின் பொருளாதாரம் சுமார் 475 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது.

இரானிய அதிகாரிகள் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 300 பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 10% வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிதியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டால் கூட, அது குறுகிய கால நிவாரணத்தை வழங்கக்கூடும்.

இரானிய வர்த்தக சபையின் உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், நாட்டின் அந்நியச் செலாவணி பற்றாக்குறை, பல ஆர்டர்கள் நிறுத்தப்படும் அளவுக்கு அல்லது நீண்ட தாமதங்களைச் சந்திக்கும் அளவுக்கு ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளது. தற்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே நடைமுறையில் அனுமதி உள்ளது " என்றார்.

டெஹ்ரானில் உள்ள இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் காம்ரான் நெத்ரி இதுகுறித்துப் பேசுகையில், "எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டத்திற்கும் முன்பாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நெருக்கடியைக் கையாளுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்கிறார்.

சீர்திருத்தங்கள் இல்லாமல் நிதி ஆதாரங்களை மட்டும் உள்ளே செலுத்துவது அவற்றின் பலன்களைக் குறைத்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், பாரிஸ் 13 பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மெஹ்ர்தாத் வஹாபி கூறுகையில், "இரானின் சவால் இன்னும் விரிவானது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட "முதலீட்டின் கடுமையான சரிவு மற்றும் தொழிற்துறையின் காலாவதியான நிலையை" மீண்டும் சரிசெய்வது தான் மிகப் பெரிய சவாலாக உள்ளது" என்கிறார்.

"பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாமல், முதலீடு சாத்தியமற்றது. உண்மையான முதலீட்டாளர்கள் இல்லாமல், இரானின் பொருளாதாரம் செழிக்காது. பொருளாதார வளர்ச்சியும் முடங்கிவிடும்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியின் லீப்ஸிக் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் ஆய்வாளர் ரெசா தலேபியும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்.

முதலீட்டாளர்களின் பணம் அரசியல் மற்றும் பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்க, இரான் பதற்றங்களைத் தணிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"போருக்கும் அமைதிக்கும் இடைப்பட்ட ஒரு நிச்சயமற்ற நிலையே, பொருளாதாரத்திற்குள் மூலதனம் நுழைவதற்கு இருக்கும் மிகப்பெரிய தடையாகும்" என்றும் ரெசா தலேபி தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு