கனடாவில் லாரி ஓட்டும் இந்திய பெண்: சவால்களை சமாளிப்பது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கவுர், 2017இல் ஒரு மாணவியாக கனடாவுக்குச் சென்றார். படிப்பை முடித்த பிறகு, கடந்த 5 வருடங்களாக லாரி ஓட்டுநராக கனடாவில் பணிபுரிகிறார். பல சவால்கள் மற்றும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த பணியில் ஒரு பெண்ணாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் தன்வீர் கவுர்.

“நான் கனடாவில் செட்டிலாக விரும்புகிறேன். வருமானம்தான் இங்கே முக்கியம். குடும்பப் பொறுப்புகளும் எனக்கு உள்ளதால், இந்த பணியைத் தேர்ந்தெடுத்தேன். எனது அப்பா லாரி ஓட்டுநராக இருந்தார், இப்போது அரசு வேலையில் உள்ளார். எங்களிடம் சொந்தமாக லாரிகள் இருந்தன. எனவே இந்தப் பணி எனது ரத்தத்தில் கலந்துள்ளது” என்கிறார் தன்வீர் கவுர்.

தனக்கு லாரி ஓட்டுநர் உரிமம் வேண்டுமென தனது அப்பாவிடம் சொன்னபோது, அவர் மறுத்துவிட்டார் எனவும், அந்தப் பணி மிகவும் ஆபத்தானது மற்றும் பெண்களுக்கான பணி அல்ல என்று, தனது சொந்த அனுபவத்தில் இருந்து தந்தைக் கூறியதாக சொல்கிறார் தன்வீர் கவுர்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்தப் பணியில் சேர்ந்தபோது, என்னை இங்கிருப்பவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறை இது. ஆனால் இப்போது பல பெண்கள் பணிக்கு வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு ஓட்டுநராக லாரியை கவனித்துக்கொள்வது எனது பொறுப்பு. காலையில் லாரியின் விளக்குகள், டயர்களின் காற்றளவு போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

கனடா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் வானிலை ஒரு பெரிய சவால். ஒருமுறை நான் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது டெட்ராய்ட் மிச்சிகன் பகுதி அருகே சாலையில் பனி குவிந்து கிடந்தது.

மணிக்கு 15 கி.மீ. என்ற வேகத்தில் மிதிவண்டியைவிடக் குறைவான வேகத்தில்தான் ஓட்டினேன். அப்போது லாரி பனியில் சிக்கி, சுழன்று, கிட்டத்தட்ட வலது பக்கம் சாய்ந்தது. நான் எப்படியோ சமாளித்தேன்” என்கிறார் தன்வீர் கவுர்.

லாரி ஓட்டுநராக, மாதத்திற்கு 5000 டாலர்கள் (நான்கு லட்சம் ரூபாய்) வரை சம்பாதிப்பதாகவும், இது வழக்கமான வருமானம், ஒருவர் சொந்தமாக லாரி வைத்திருந்தால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார் தன்வீர் கவுர்.

“என் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. நான் ஒவ்வோர் ஆண்டும் அவர்களைப் பார்க்கச் செல்கிறேன். இந்த ஆண்டு என் அம்மா என்னைச் சந்திக்க வருகிறார், 6 மாதங்கள் என்னுடன் இருப்பார். முன்பொரு முறை அம்மா வந்தபோது, நான் ஓட்டுநராகப் பணிபுரியவில்லை.

இப்போது என்னைப் பார்த்தால், அம்மாவின் எதிர்வினை வேறுமாதிரியாக இருக்கும். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வது என்பது கனடாவில் மிகவும் சவாலான ஒரு விஷயம்” என்று கூறுகிறார் லாரி ஓட்டுநர் தன்வீர் கவுர்.

செய்தியாளர்- சரப்ஜித் தலிவால்

ஒளிப்பதிவு- குர்சிஷ் சிங், தருண் பால்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)