ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்

பட மூலாதாரம், BCCI/IPL
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல். ராகுல் 74 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கும் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்தாக நிலையில், சாம் கரண் அணியை வழி நடத்தினார்.
பஞ்சாப் கிங்ஸை பொறுத்தவரை அதன் பேட்டிங் பெரியளவில் ஷிகர் தவானை நம்பியே உள்ளது. அவர் இல்லாத நிலையில், பேட்டிங்கில் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது.
கடைசி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதை சாம் கரணும் ஒப்புக்கொண்டார்.
"ஷிகர் தவான் பங்கேற்காதது எங்களுக்குப் பெரிய இழப்பு. அதே நேரத்தில் அணியில் உள்ள இளைஞர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவதாக" டாஸின்போது அவர் தெரிவித்தார். டாஸ் வென்ற சாம் கரண் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
வலுவான தொடக்கம்
லக்னோ அணியின் கே.எல். ராகுல் - மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் வீசிய முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கை கைல் மேயர்ஸ் தொடங்கினார்.
இருவரும் தங்களுக்குக் கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விரட்ட பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை லக்னோ எடுத்திருந்தது.
இந்தக் கூட்டணியைப் பிரிக்க பஞ்சாப் அணி மேற்கொண்ட முயற்சிக்கு 8வது ஓவரில் பலன் கிடைத்தது. ஹர்பீத் சிங் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தை மேயர்ஸ் தூக்கியடிக்க ஹர்பீத் பிராட்டின் கைகளில் அது தஞ்சமடைந்தது.
23 பந்துகளில் 1 பவுண்டரி , 3 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்து மேயர்ஸ் வெளியேறினார். சிக்கந்தர் ரஸா வீசிய அடுத்த ஓவரில் தீபக் ஹூடா 2 ரன்களில் வெளியேறியபோது, பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை எடுத்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
கிறில் கெயிலின் சாதனையை முறியடித்த கே.எல். ராகுல்
இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் குருனால் பாண்டியா கூட்டணி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 30 ரன்களை எட்டியபோது ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.
105 இன்னிங்ஸில் அவர் இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன்பு அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 112 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
114 இன்னிங்ஸுடன் டேவிட் வார்னர், 128 இன்னிங்ஸுடன் விராட் கோலி, 131 இன்னிங்ஸுடன் டி வில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும், சாஹர் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தையும் கே.எல்.ராகுல் கடந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஷாருக் கான் பிடித்த அற்புத கேட்ச்
சாம் கரண் வீசிய ஓவரில் 2 பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய குருனால், ரபாடா வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் அடிப்பதற்காக தூக்கியடித்தார்.
இந்தப் பந்தை தாவி கேட்ச் பிடித்த ஷாருக் கான் தான் பவுண்டரி எல்லையைத் தாண்டி இருப்பதை உணர்ந்து பந்தை மேலே வீசி, மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து பிடித்தார்.
ஆர்சிபிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய பூரண், இந்த முறையும் அதிரடியைக் காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ரபாடாவின் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி 3 ஓவர்கள்: 1 பவுண்டரி, 4 விக்கெட்
பின்னர் கே.எல்.ராகுலுடன் இணைந்த ஸ்டாய்னிஸ், சாஹர் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்களை அட்டகாசமாக அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சிறப்பாக ஆடி வந்த கே.எல். ராகுல் அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். 57 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 74 ரன்களை அவர் எடுத்திருந்தர்.
டெத் ஓவர்களில் பஞ்சாபின் பந்துவீச்சு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ், கிருஷ்ணப்ப கௌதம், யுத்வீர் சிங் ஆகிய 4 பேரின் விக்கெட்களை வீழ்த்தியிருந்தது. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















