பெங்களூரு ரசிகர்களுக்கு விருந்தளித்த 'கிங்' கோலி - ஆர்சிபி வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன்

பட மூலாதாரம், BCCI/IPL
பெங்களூருவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்தார்.
டெல்லி அணியின் மணீஷ் பாண்டே அரை சதம் அடித்தப்போதும், 2 ரன்களுக்குள் 3 விக்கெட்களை அந்த அணி இழந்ததால் அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
இந்தப் போட்டியில் 50 ரன்களை எடுத்ததோடு டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அமன் ஹகிம் கான் ஆகியோரின் கேட்ச்களை பிடித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தோல்வி குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ` நாங்கள் தொடக்கத்திலேயே நிறைய விக்கெட்களை இழந்துவிட்டோம். ஸ்கோரை விரட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற பார்னர்ஷிப்பை நாங்கள் உருவாக்கவில்லை. அடுத்த 5 நாட்களுக்குள் பலம் வாய்ந்த அணியாக திரும்ப வேண்டும். தற்போது எதுவும் சரியாக அமையவில்லை. அதே நேரத்தில் ஒருசில அணிகள் 0-5க்கு என்ற நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளன. அதேபோல், நாங்களும் மீண்டு வருவோம்` என்று குறிப்பிட்டார்.
பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய விராட் கோலி
முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூருவின் விராட் கோலி, டு பிளெசி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விராட் கோலி விரட்ட முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய மூன்றாவது ஓவரில் டூ பிளெசி தன் பங்கிற்கு 2 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் 4 ஓவர் முடிவில் 33 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
விராட் கோலி அரை சதம்
முஸ்தாஃபிசூர் ரஹ்மான் வீசிய பத்தாவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டியில் தனது 47வது அரை சதத்தை அவர் எட்டினார்.
அடுத்த பந்தில் லாம்ரோர் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயல அது யஷ் துல்லிடம் கேட்ச்சாக அமைந்தது. டெல்லி அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை 1 ரன்னில் விராட் கோலி தவற விட்டார். அப்போது, பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை எடுத்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது அரை சதம்
இந்தப் போட்டியில் 50 ரன்களை எடுத்ததோடு டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அமன் ஹகிம் கான் ஆகியோரின் கேட்ச்களை பிடித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்ட நாயகன் விருது பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய அவர், "பந்து உயரே எழும்பும்போது அதைப் பிடிப்பது சற்றுக் கடினமானது. முதலில் என் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.
அதன் மூலம் பந்தை கணிப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. முதல் கேட்ச் கடினமாகவே இருந்தது. மற்ற இரண்டும் எளிதாக இருந்தது. ஃபுல் டாஸில் ஆட்டமிழந்தது ஏமாற்றம்தான்.
50 ரன்களை கடந்த பின் அடுத்த 10 பந்துகளில் 30 முதல் 35 ரன்கள் வரை எடுக்க நினைத்தேன். நான் பொதுவாக அப்படித்தான் விளையாடுவேன். முந்தைய ஆட்டத்தில் நாங்கள் 200 ரன்களை கடக்கவும் இதுதான் எனக்கு உதவியது," என்று குறிப்பிட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்றில் விராத் கோலி அரை சதம் கடந்துள்ளார்.
அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 82 ரன்களை அவர் எடுத்துள்ளார். தற்போதுவரை 214 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி அதிக ரன்கள் எடுத்துள்ளவர்களுக்கான ஆரஞ்ச் தொப்பிக்கான பட்டியலில் ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மைதானத்தில் கங்குலியை கோலி தவிர்த்தாரா?
இதற்கிடையே, இன்றைய போட்டியில் விராட் கோலிக்கும் கங்குலிக்கும் இடையே உள்ள கசப்புணர்வு வெளிப்பட்டதாகவும் கோலி ரசிகர்கள் சமூக ஊடகத்தில் விவாதித்து வருகின்றனர்.
தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக கங்குலி இருக்கிறார். இந்நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த இன்றைய போட்டியில் விராட் கோலி ஒரு கேட்சை பிடித்துவிட்டு கங்குலியை பார்த்தபடியே நடந்து சென்றார் என்று கோலி ரசிகர்கள் ட்விட்டரில் வைரலாக பேசி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அதுமட்டுமின்றி, போட்டி முடிந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி அணியினர் டெல்லி அணியினருடன் கை குலுக்கினார்கள். அப்போது விராட் கோலி கங்குலியுடன் கை குலுக்குவதைத் தவிர்த்தார் என்று ஒரு காணொளியைப் பகிர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அமன் ஹாகிம் பிடித்த அற்புத கேட்ச்
மிட்செல் மார்ஷ் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க, 3வது பந்தில் டு பிளெசி ஒரு பவுண்டரி அடித்தார்.
மார்ஷ் வீசிய அடுத்த பந்தை டு பிளெசி மிட் விக்கெட்டில் தூக்கியடிக்க அமன் ஹாகிம் அதை அற்புதமாகப் பாய்ந்து பிடித்தார். இதையடுத்து 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களில் டு பிளெசி வெளியேறினார்.
இதையடுத்து மஹிபால் லாம்ரோர் களமிறங்கினார். டு பிளெசி அவுட் ஆன பிறகு, பெங்களுரு அணியின் ரன் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டது. டு பிளெசி ஆட்டமிழந்த அடுத்த 12 பந்துகளுக்கு எந்த பவுண்டரியையும் பெங்களூரு தரப்பு அடிக்கவில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
பயம் காட்டிய மேக்ஸ்வெல்
அடுத்து வந்த மேக்ஸ்வெல் தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். லலித் யாதவி வீசிய அதே ஓவரில் 2 சிக்ஸர்களை அவர் அடித்தார்.
மார்ஷ் வீசிய 13வது ஓவரின் 2வது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய லாம்ரோர் அடுத்த பந்தேலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அக்ஷர் பட்டேல் வீசிய 13வது ஓவரில் மேக்ஸ்வெல், ஹர்ஷால் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். இதனால் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் பெங்களூரு அணி 200 ரன்களை கடக்க சாத்தியம் இருப்பதாகத் தோன்றியது.

பட மூலாதாரம், BCCI/IPL
3 பந்துகளில் மூன்று விக்கெட்கள்
இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தாலும் தனது ஓவரின் கடைசிப் பந்தில் ஹர்ஷாலை அக்ஷர் பட்டேல் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்திருந்தது.
15வது ஓவரை வீசிய குல்தீப் சிங் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லையும் அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக்கையும் ஆட்டமிழக்கச் செய்து பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஐபிஎலில் குல்தீப் யாதவுக்கு எதிராக தடுமாறிவரும் மேக்ஸ்வெல் 4வது முறையாக தனது விக்கெட்டை அவரிடம் பறிகொடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் ஷாபாஸ் அகமத் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்தது.
குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல், லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

பட மூலாதாரம், BCCI/IPL
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. வார்னர் - பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
சிராஜ் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பிரித்வி ஷா சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கியிருந்த அனுஜ் ராவத் பந்தை டைவ் அடித்து பிடித்து ஷாவை ரன் அவுட் செய்தார்.
அடுத்த ஓவரில் மிட்ஷெல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேற 1-2 என்ற மோசமான நிலையில் டெல்லி இருந்தது.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு ஏற்ப இந்த வீழ்ச்சியில் இருந்து டெல்லி அணி எழுச்சி பெறவே இல்லை. 3வது ஓவரை வீசிய சிராஜ் யாஷ் துல்லை எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்க செய்ய, மைதானத்தில் கூடியிருந்த பெங்களூரு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 2 ரன்களை எடுப்பதற்குள் மூன்று விக்கெட்களை அந்த அணி இழந்திருந்தது.
ஹாட்ரிக் ஃபோர் அடித்த வார்னர்
மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த வார்னர், சிராஜ் வீசிய 5வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி ஹாட்ரிக் ஃபோர் அடித்தார். தங்களது முதல் பவுண்டரியை அடிக்க டெல்லி அணி 23 பந்துகளை எடுத்துகொண்டது குறிப்பிடத்தக்கது. விஜயக்குமார் வீசிய அடுத்த ஓவரிலேயே வார்னரும் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க 32 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் டெல்லி இருந்தது. அடுத்து வந்த மணீஷ் பாண்டே ஓரளவு பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குபிடித்தாடினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அரை சதம் அடித்த மணீஷ் பாண்டே
விக்கெட்கள் ஒரு பக்கம் சரிந்துகொண்டிருந்தாலும் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே ஹஸரங்கா வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை அடித்ததோடு ஐபிஎல் போட்டியில் தனது 22வது அரை சதத்தையும் கடந்தார். 38 பந்துகளில் 1 சிக்ஸர் , 5 பவுண்டரி உட்பட 50 ரன்களை எடுத்திருந்த நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் மணீஷ் பாண்டே எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்திருந்தது.
டெல்லியின் வெற்றிக்கு 36 பந்துகளுக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன. நோர்ட்ஜே இறுதிக்கட்டத்தில் சில பவுண்டரிகளை அடித்தபோதும் வெற்றிக்கு போதுமானவையாக அவை அமையவில்லை. இறுதியில் 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2ல் தோல்வியையும் 2ல் வெற்றியையும் பெங்களூரு அணி பெற்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி தான் விளையாடிய5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















