ஏகே-47 இந்தியாவுக்கு வந்தது எப்படி? வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை முதல் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?

ஏகே-47 இந்தியாவுக்கு வந்தது எப்படி? வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை முதல் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழைய ரஷ்ய கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் நிற்கும் இராக் காவல்துறை அதிகாரி
    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கியான ஏகே-47, உலகின் மிகவும் பிரபலமான ஆயுதங்களில் ஒன்று.

இது ஒப்பீட்டளவில் குறைந்த விலையும், எளிதில் தயாரிக்கக் கூடியதும், பராமரிக்கக் கூடியதும் ஆகும்.

இதன் காரணமாகவே, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஆயுத குழுக்களாலும், பல நாடுகளின் ராணுவங்களாலும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பிகாரின் சிவான் மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்குப் பிறகு, இந்தத் துப்பாக்கி தற்போது செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

ஜூலை 25-ஆம் தேதி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கூட்டத்தை கலைக்க முயன்றபோது, பிகார் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

 ஏகே-47

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதுகாப்புப் படைகள் முதல் தீவிரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் வரை, ஏகே-47 உலகளவில் மிகவும் பிரபலமான துப்பாக்கியாகும் (கோப்புப் படம்).

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய காவலர் அபிஷேக் படேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏகே-47 போன்ற ஆயுதங்கள் மிகவும் விசேஷமான சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியவை எனக் கருதப்படுகின்றன. அவை சாதாரண காவல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான ஆயுதங்களல்ல.

இந்த விவகாரம் குறித்து சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் விவேக் ரஞ்சன் மைத்ரேயா கூறுகையில், "அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. வானத்தை நோக்கிக் கூட சுடக்கூடாது. பொதுமக்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஆயுதத்தை எடுத்துச் சென்றிருக்கவே கூடாது." என்றார்.

இந்தத் துப்பாக்கி ஏன் இவ்வளவு பிரபலமாக உள்ளது மற்றும் இந்தியாவில் இதைப் பயன்படுத்த எப்போது தொடங்கினார்கள் என்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்திய அனுபவமுள்ள சில அதிகாரிகளிடம் பேசினோம்.

கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கியான ஏகே-47, உலகின் மிகவும் பிரபலமான ஆயுதங்களில் ஒன்று. இது ஒப்பீட்டளவில் குறைந்த விலையும், எளிதில் தயாரிக்க மற்றும் பராமரிக்கக் கூடியதும் ஆகும்.

பட மூலாதாரம், @yadavtejashwi

படக்குறிப்பு, சிவான் மாவட்டத்தில் மாணவர் போராட்டத்தின் போது ஏகே-47 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது (

பாதுகாப்புப் படைகளுக்கான அறிவுறுத்தல்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உத்தரப் பிரதேச காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார், பிரபல குற்றவாளி ஸ்ரீபிரகாஷ் ஷுக்லாவைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு படைக்கு தலைமை வகித்தவர்.

ஏகே-47 போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கூறுகையில், "கூட்டம் அல்லது போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு குறைந்தபட்ச பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுப்பதற்கு முன் எச்சரிக்கை வழங்குவதற்கான நடைமுறைகளும் உள்ளன. துப்பாக்கி பயன்படுத்துவது என்பது கடைசி கட்ட நடவடிக்கையாகும்," என்றார்.

"முதலில், கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படும். அதன்பிறகு தண்ணீர் பீய்ச்சும் வாகனங்கள் பயன்படுத்தப்படும். அதிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படும். அதன் பிறகே தடியடி நடத்தப்படும்," என்று அவர் விளக்கினார்.

மேலும், "ஒரு கூட்டம் வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினால், அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தோன்றினால், காவல்துறையினரின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம். ஆனால் அது கடைசி வழிமுறையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்," என்றார்.

மற்றொரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் பாண்டே, சிவானில் நடந்த சம்பவத்தை விமர்சித்தார்.

"சிவானில் நடந்தது சரியானதல்ல. அது தார்மிக ரீதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். அந்தப் போராட்டக் கூட்டத்தினரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துவது பொருத்தமானதல்ல," என்று அவர் கூறினார்.

ஏகே 47-ன் சிறப்பு

ஏகே-47 துப்பாக்கி 1947-ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் கலாஷ்னிகோவால் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் பாதுகாப்புப் படைகள், ஆயுதக் குழுக்கள் மற்றும் பிரபல குற்றக் கும்பல்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறுகையில், "2008-09-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணிக்காக நான் கொசோவோ சென்றிருந்தேன். அப்போது பல நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் ஏகே-47-க்கு ஈடான ஆயுதம் இல்லை. அதன் தாக்குத் திறன் மிகவும் அதிகம். பயன்படுத்துவதும் எளிது. குறிவைத்து சுடும் துல்லியமும் அதிகமாக உள்ளது," என்றார்.

"200 அல்லது 300 மீட்டர் தூரத்தில் இருந்தே சரியான இடத்தில் தாக்கினால் ஒருவரைக் கொல்லும் திறன் அதற்கு உள்ளது. ஆனால் பழைய சிறிய ஆயுதங்களின் செயல்பாட்டு தூரம் 30 முதல் 40 மீட்டர் வரை மட்டுமே இருக்கும்," என்றும் அவர் கூறினார்.

ஏகே-47 துப்பாக்கியின் செயல்பாடு குறித்து விளக்கிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார், "இந்தத் துப்பாக்கியில் இரண்டு வகையான சூடு முறைகள் உள்ளன. எஸ் முறையில் அமைத்தால் ஒவ்வொரு முறை விசையை அழுத்தும்போதும் ஒரு தோட்டா மட்டுமே பாயும்," என்றார்.

ஆர் அல்லது தானியங்கி முறையில் இயக்கினால், மிக வேகமாக தொடர்ச்சியாக தோட்டாக்கள் பாயும். ஒரு மேகசினில் உள்ள 30 தோட்டாக்களையும் குறுகிய நேரத்தில் காலி செய்ய முடியும். சில விசேஷ நடவடிக்கைகளில் இரண்டு மேகசின்கள் பயன்படுத்தப்படும் சூழல்களும் உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

ஏகே-47 துப்பாக்கியின் ஒலி குறித்தும் ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார்.

"ஏகே-47 துப்பாக்கியின் சத்தம் மிகவும் தனித்துவமானது. இந்த ஆயுதத்தைப் பற்றி அறிந்தவர்கள், சத்தத்தைக் கேட்டாலே அது ஏகே-47 மூலம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பதை அடையாளம் கண்டுவிட முடியும்," என்றார்.

ஏகே-47

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏகே-47, உலகில் மிகவும் பிரபலமான துப்பாக்கிகளில் ஒன்றாகும். இந்தப் புகைப்படம் 1979-ஆம் ஆண்டு வடக்கு இராக்கில் எடுக்கப்பட்டது.

ஆர் முறை எந்த சூழலில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அருண் குமார் விளக்குகையில், "போர், தீவிரவாதத் தாக்குதல் அல்லது கடத்தல் போன்ற விசேஷ நடவடிக்கைகளில், எதிர் தரப்பினரிடம் உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் இருக்கும்போது அதிக அளவில் தோட்டாக்களை விரைவாகச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழல்களுக்காகவே இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

அதேநேரத்தில், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நடவடிக்கைகளில் இந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"சட்டம்-ஒழுங்கு பணிகளில் ஏகே-47-இன் தானியங்கி முறை பயன்படுத்தப்படுவதில்லை. எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, ஒரு தோட்டாவால் ஒரு இலக்கைத் தாக்க வேண்டும் என்பதுதான். தேவையின்றி தோட்டாக்களை வீணாக்க மாட்டோம். பொதுமக்கள் எதிரிகள் அல்ல. எனவே அவர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படக் கூடாது," என்று அவர் கூறினார்.

ஏகே-47 எப்போது இந்தியாவை வந்தடைந்தது?

 ஏகே-47

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1970களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் தலையீட்டின் மூலம் அண்டை நாட்டிற்கு வந்த ஏகே-47, பின்னர் இந்தியாவை அடைந்தது (கோப்புப் படம்).

இந்தியாவில் ஏகே-47 துப்பாக்கி பிரபலமடைந்ததற்கான பின்னணி குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே விளக்குகிறார்.

"சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் ராணுவ தலையீடு செய்த காலகட்டத்தில்தான் ஏகே-47 இந்தியாவின் கவனத்திற்கும் வந்தது. 1970களின் இறுதியில், சோவியத் ரஷ்யப் படைகள் ஏகே-47 துப்பாக்கிகளுடன் ஆப்கானிஸ்தானுக்கு வந்தன. அதன்பின்னர் இந்தியாவிலும் இந்த ஆயுதம் பரவலாக அறியப்படத் தொடங்கியது," என்றார்.

ஆரம்பத்தில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கே இந்த ஆயுதம் வழங்கப்பட்டது. பின்னர் எல்லைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சிக் குழுக்களை எதிர்கொள்ளும் காவல்துறையினருக்கும் ஏகே-47 வழங்கப்பட்டது. நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுக்களை எதிர்கொள்வதற்காகவும் இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ராஜேஷ் பாண்டே கூறுகையில், "1980களின் இறுதியில் பஞ்சாப் காவல்துறைக்கும், வடகிழக்கு மாநிலங்களின் காவல்துறைக்கும் ஏகே-47 வழங்கப்பட்டது. அதேபோல் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் பணியாற்றிய காவல்துறையினருக்கும் இந்த ஆயுதம் வழங்கப்பட்டது. பின்னர் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் ஏகே-47 பயன்படுத்தத் தொடங்கியது," என்றார்.

பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களும் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளதால் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டன. குறிப்பாக 1980களில் பஞ்சாப் தீவிரவாதச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் காஷ்மீரிலும் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன.

தென்னிந்தியாவிலும் குறிப்பிட்ட சூழல்களில் ஏகே-47 பயன்படுத்தப்பட்டதாக ராஜேஷ் பாண்டே நினைவுகூர்கிறார்.

"சந்தனக் கடத்தல்காரர் வீரப்பனைப் பிடிப்பதற்காக தென்னிந்தியாவில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. அந்தப் படையினருக்கும் ஏகே-47 வழங்கப்பட்டது." என்றார்.

விசாரணையின் போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விசாரணையின் அடிப்படையில், 1993ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி அன்று  சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்தை மும்பை காவல்துறை கைது செய்தது.

பட மூலாதாரம், SABY DSOUZA/AFP via Getty Images

படக்குறிப்பு, 1993 மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நடந்த ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆயுதச் சட்ட வழக்கில் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டார் (கோப்புப் படம்).

இந்தியாவில் ஏகே-47 தொடர்பாக மிகவும் பிரபலமான சம்பவம்

இந்தியாவில் தனிப்பட்ட முறையில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கியை வைத்திருந்த மிகவும் பிரபலமான நபராக நடிகர் சஞ்சய் தத் கருதப்படுகிறார்.

1993 மார்ச் 12-ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 1993 ஏப்ரல் 19-ஆம் தேதி மும்பை காவல்துறை சஞ்சய் தத்தை சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கைது செய்தது.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகே-56 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 2006 நவம்பர் 28-ஆம் தேதி ஆயுதச் சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். இருப்பினும், தடா சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு ஆயுதக் குழுவின் வசம் இருந்த கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள்

இந்தியாவில் ஏகே-47 துப்பாக்கி தொடர்பாக பெரும் கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்று 1995 டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற புருலியா ஆயுத வீச்சு சம்பவமாகும்.

அன்று இரவு, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆன்டோனோவ் ஏஎன்-26 விமானம் ஒன்று கராச்சியில் இருந்து டாக்கா நோக்கிப் புறப்பட்டது. எட்டு பேர் பயணம் செய்த அந்த விமானம், வழியிலேயே வாரணாசியின் பாபத்பூர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டது.

பின்னர் மீண்டும் புறப்பட்ட விமானம், மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் வானிலிருந்து பாராசூட்டுகளுடன் இணைக்கப்பட்ட மூன்று பெரிய மரப் பெட்டிகளை வீசியது. அந்தப் பெட்டிகளில் நூற்றுக்கணக்கான ஏகே-47 ரக துப்பாக்கிகள் இருந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்த ஆயுதங்களில் சில பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகளிடமும் சென்றடைந்ததாகத் தெரியவந்தது.

அவர்களில் உத்தரப் பிரதேசத்தின் பிரபல குற்றவாளியான ஸ்ரீபிரகாஷ் ஷுக்லாவின் பெயரும் குறிப்பிடத்தக்கது. அவரைப் பிடிப்பதற்காக 1998-ஆம் ஆண்டு சிறப்பு படை அமைக்கப்பட்டது. அந்தப் படையினருக்கும் ஏகே-47 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.

ஏகே-47 துப்பாக்கி முதலில் ராணுவம் மற்றும் விசேஷ நடவடிக்கைகளில் ஈடுபடும் துணை ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட பாதுகாப்புத் தேவைகளுக்காக சிவில் காவல்துறையினருக்கும் இந்த ஆயுதம் வழங்கப்படத் தொடங்கியது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு