இலங்கைக்கும் உலகின் பழமையான கிராம்புக்கும் என்ன தொடர்பு? மாந்தை துறைமுகத்தின் வரலாற்று சான்றுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் நறுமணப் பொருளான கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் இந்தோனீசியா மிகப்பெரிய கிராம்பு உற்பத்தியாளராக உள்ளது. அதேவேளையில், இந்தியா உலகின் முக்கிய கிராம்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது
ஆனால், நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா?
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய 'மாந்தை' (பண்டைய காலத்தில் 'மகாதீத்த') துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில், அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Cambridge University Press
கி.பி. 900 முதல் 1100 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த இந்தக் கிராம்பு மற்றும் கி.பி. 600-700 காலப்பகுதியைச் சேர்ந்த கருமிளகு மாதிரிகள், ஆசிய கண்டத்தின் பண்டைய நறுமணப் பொருட்கள் வர்த்தக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
அறிவியல்பூர்வ சான்றுகள் மற்றும் அகழ்வாராய்ச்சி
இலங்கையின் தொல்பொருள் துறை மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு ஆய்விலேயே இந்த அரிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகள், 2018-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆண்டிக்விட்டி'சர்வதேச ஆய்விதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
மன்னார் மாந்தை பகுதியில் 1980-களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1984-இல் இடைநிறுத்தப்பட்டு இருந்ததாகவும், பின்னர் 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியின் போது சேகரிக்கப்பட்ட கரிமப் பொருட்கள், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் தொல்பொருள் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நுண்ணோக்கி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ருஹுண பல்கலைக்கழகத்தின் வரலாற்று மற்றும் தொல்பொருள் துறைப் பேராசிரியரான விஜேரத்ன போகின்கமுவ பிபிசி தமிழுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, மாந்தையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தீய்ந்த நிலையில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு அரிய கிராம்பு மாதிரி மற்றும் எட்டு மிளகு விதைகள் அடையாளம் காணப்பட்டன.

பட மூலாதாரம், Cambridge University Press
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் எலினோர் கிங்வெல் பான்ஹாம் இது குறித்து அவரது ஆய்வு அறிக்கையில் கூறியபோது, "தெற்காசியாவிற்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட ஏனைய கிராம்புச் சான்றுகளை விட இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது," என்று சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உத்தியோகபூர்வ செய்தி அறிக்கையில், "சிரியா போன்ற நாடுகளில் கி.மு. 2000 காலப்பகுதியைச் சேர்ந்த கிராம்புகள் இருந்ததாகக் கூறப்படும் வரலாற்றுத் தகவல்களுக்கு முறையான அறிவியல் சான்றுகளோ அல்லது துல்லியமான காலக்கணிப்பு ஆவணங்களோ இல்லை. மேலும் அந்த மாதிரிகளும் தற்போது கைவசம் இல்லை. எனவே, அறிவியல்பூர்வமாக காலக்கணிப்பு செய்யப்பட்டு, முறையாகப் பட்டியலிடப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு இதுவேயாகும்," எனத் தெரிவித்துள்ளார்.
கிராம்பு என்பது இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மொலுக்காஸ் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும்.
"இந்தோனீசியாவில் விளைவிக்கப்பட்ட இந்தக் கிராம்பு, தென்கிழக்காசியா வழியாகக் கடல் வழியே பயணித்து இலங்கையின் மாந்தை துறைமுகத்தை அடைந்திருக்க வேண்டும். அங்கிருந்து ரோமானியப் பேரரசு, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்," என்றும் எலினோர் சுட்டிக்காட்டுகின்றார்.

பட மூலாதாரம், Cambridge University Press
'மாந்தை ஒரு பன்னாட்டு வணிக மையம்'
இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியரும், ருஹுண பல்கலைக்கழகத்தின் வரலாற்று மற்றும் தொல்பொருள் துறைப் பேராசிரியருமான விஜேரத்ன போகின்கமுவ, மாந்தை துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து "இலங்கையின் பண்டைய மகாதீத்த (மாந்தை): ஒரு வரலாற்றுச் சரிதம்" என்ற நூலை எழுதியுள்ளார்.
இலங்கையிலிருந்து இந்த ஆய்வில் நேரடியாகப் பங்கெடுத்த முக்கிய வல்லுநரான பேராசிரியர் விஜேரத்ன போகின்கமுவ, மாந்தை துறைமுகத்தின் சர்வதேச பங்களிப்பு குறித்து விவரிக்கையில், "பண்டைய காலத்தில் 'மகாதீத்த' என்று அழைக்கப்பட்ட மாந்தை, வெறும் ஒரு உள்நாட்டுத் துறைமுகம் மட்டுமல்ல. அது இந்தியப் பெருங்கடல் கடல்சார் வர்த்தகப் பாதையில் அமைந்திருந்த மிக முக்கியமான சர்வதேச சந்திப்பு மையமாகும்," எனக் குறிப்பிடுகிறார்.
ஆசிய, அரேபிய மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் சந்தித்து பண்டமாற்றம் செய்யும் ஒரு துடிப்பான பன்னாட்டு நகரமாக மாந்தை திகழ்ந்துள்ளது என்பதற்கு இந்த நறுமணப் பொருட்கள் வலுவான சான்றாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆராய்ச்சியாளர்களின் தரவுகளின்படி, மாந்தையில் கிராம்பு மற்றும் மிளகு மட்டுமன்றி கோதுமை தானியங்களின் மாதிரிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
''அக்காலத்தில் உள்ளூர் உணவுகளான அரிசி மற்றும் பருப்பைத் தவிர்த்து, கோதுமையை பிரதான உணவாகக் கொண்ட மத்திய தரைக்கடல் அல்லது அரேபியப் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களும் மாந்தையில் தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.'' என்கிறார் விஜேரத்ன போகின்கமுவ.

பட மூலாதாரம், Abhishek Mehta/Getty images
உலகளவில் கிராம்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது இந்தோனீசியா ஆகும். உலகளவில் உற்பத்தியாகும் கிராம்பில் சுமார் 60% முதல் 70% வரை இந்தோனீசியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்ல மடகாஸ்கர், தான்சானியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சர்வதேச அளவில் கிராம்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இலங்கையின் மத்திய மற்றும் தென் மாகாணங்களில் உயர்தர கிராம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சமையலுக்குப் பயன்படும் இலங்கை கிராம்புகள், அவற்றின் தூய்மைக்கு பெயர் பெற்றவை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































