பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடரும் உயிரிழப்புகள்: பாதிப்பில் இருந்து வெளிவராத குடும்பங்கள் - கள நிலவரம்

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்
    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர், பிகாரில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

பன்னிரண்டு பதிமூன்று வயதுச் சிறுமி ஒருவர், கையில் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மஷ்ரக் அரசு பள்ளிக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

தனது தந்தை ஹரேந்திர ராம் கள்ள சாராயம் குடித்து இறந்துவிட்டார் என்றும் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்காக இறந்தவரின் அடையாள அட்டையுடன் சமூக சுகாதார நல மையத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி கூறினாள். அருகில் அந்த சிறுமியின் சகோதரி, தன் ஆறு வயது சகோதரனை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். இந்த சிறு குழந்தைதான் தன் தந்தையின் இறுதி சடங்குகளை செய்துள்ளது.

இந்தக்குழந்தை இறுதிச்சடங்கை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டதை தடுத்திருக்க வழியில்லையா? இந்த கேள்வி என் மனதில் எழுந்தது. ​​இறந்த ஹரேந்திர ராமின் சகோதரரின் உடல்நிலை சில நாட்களாக சரியில்லாமல் இருந்ததால் அவரால் இறுதி சடங்குகளை செய்ய முடியவில்லை என்று அப்போதுதான் தெரியவந்தது.

"அவர்தான் வீட்டில் ஊதியம் ஈட்டும் ஒரே நபர். நாங்கள் நான்கு பேர் அவரை நம்பித்தான் இருந்தோம். கூலி வேலை செய்து வாழ்க்கை ஓடியது. இப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. சாராயம் குடித்து இறந்துவிட்டார். சாராயம் எங்கிருந்து வந்தது. அதை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை," என்று ஹரேந்திர ராமின் மனைவி, பிபிசியிடம் கூறினார்.

இந்த வீட்டை சுற்றி நான்கு பேர் இறந்துள்ளனர்.

பரத் ராமின் சடலம் இன்னும் வீட்டில் இருக்கிறது. அவரது தாயார் கதறி அழுது கொண்டிருக்கிறார். குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களுக்கு மரணத்தின் அர்த்தம் கூடத்தெரியாது. நேற்று வரை தினமும் மாலை உணவு கொண்டு வந்த அப்பா இப்போது போய்விட்டார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மலிவான சாராயம் அவர்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டது.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்
படக்குறிப்பு, ஹரேந்திர ராமின் குடும்பம்

பிகாரில் சாராயத்தால் தொடரும் உயிரிழப்புகள்

பிகார் மாநிலம் ஸாரண் மாவட்டத்தில் உள்ள சப்ராவில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் சப்ராவில் 27 பேரும், பாட்னாவில் 2 பேரும் உயிரிழந்தனர்.

சப்ராவில் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மிகவும் ஏழ்மையானவர்கள்.

இந்த மாநிலத்தில்தான் கடந்த 6 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் கள்ள சாராயம் குடித்து ஏற்படும் இறப்புகள் இங்கு புதிதல்ல. ஸாரணின் மஷ்ரக் பகுதியில் கள்ளச்சாராயம் காரணமான இத்தனை மரணங்கள் முதன்முறையாக நிகழ்ந்துள்ளன.

இங்கு சள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் மஷ்ரக் நகர் பஞ்சாயத்தில் வசிப்பவர்கள்.

மஷ்ரக் தக்த் பகுதி மஷ்ரக்கின் நடுவில் உள்ளது. மஷ்ரக் முழுவதுமே இதைச்சுற்றியே அமைந்துள்ளது என்று மக்கள் கூறுகிறார்கள்.

மஷ்ரக் தக்த் பகுதியில் மரண காட்சிகளை தெளிவாக பார்க்கமுடிகிறது. முதலில் நான் இங்குள்ள காவல் நிலையத்தை அடைந்தேன். அங்கு சில போலீஸார் இருந்தனர். ஆனால் தகவல் கொடுக்க யாரும் இல்லை. எதிரில் உள்ள தெருவில் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மக்கள் சிலர் தெரிவித்தனர்.

தெருவுக்குள் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு சில குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர்.அதே நேரத்தில் சில குழந்தைகள் வெளியே இருந்த கூட்டத்திலும் காணப்பட்டனர்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்

கள்ளச்சாராயத்தால் முதல் மரணம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு இளைஞர் என்னை லால்ஜரி தேவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

குறுகலான மற்றும் சீரமைக்கப்படாத தெருக்கள் வழியாக நாங்கள் அவரது வீட்டை அடைந்தோம். ​​​​செவ்வாய்க்கிழமை மதியம் கள்ளச்சாராயம் அருந்தியதில், மஷ்ரக் தக்தில் அவரது கணவர் சந்திரமா ராம் முதலில் இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது.

சந்திரமா ராம் எப்போதாவது சாராயம் குடிப்பது வழக்கம். தடுத்தால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர் குழந்தைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்தார். ஆனால் தன்னை அவரால் குணப்படுத்திகொள்ள முடியவில்லை.

அருகில் இனிப்பு கடை வைத்திருக்கும் மோகன் என்பவரது வீடு உள்ளது. காலையில் அவசரமாக அவர் சப்ராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவரது பேரனுக்கு திருமணம் நடந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். புதன்கிழமை முதல் அவருக்கு கண்பார்வையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்ற உறுதியான தகவல்கள் யாரிடமும் இல்லை.

விஷச்சாராயம் காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தச்செய்தியை எழுதும் வரையில் 26 பேர் உயிரிழந்ததை மட்டுமே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

மக்கள் கும்பலாக சாராயம் அருந்தியதான எந்த தகவலும் இல்லை என்று ஸாரண் எஸ்பி பிபிசியிடம் கூறினார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்

நிர்வாகத்தின் மீது மக்கள் கோபம் – சாராயம் எங்கிருந்து வந்தது?

மதுவிலக்கு கடுமையாக அமலில் இருக்கும்போதிலும், இங்கு மதுபானம் எப்படி விற்கப்படுகிறது என்று சிலர் நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்தனர். அதே கேள்வியை, அதாவது மது எங்கிருந்து வருகிறது என்று கிராம மக்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்... "எங்களுக்குத் தெரியாது."

“கோவிட் சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ​​நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதால் ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் இப்போது மது எப்படி விற்கப்படுகிறது. நிர்வாகம் நினைத்த்திருந்தால் யாராலும் சாராயத்தை விற்கவே முடியாது,”என்று உள்ளூர்வாசி முன்னா குமார் திவாரி கூறினார்.

இந்தப் பகுதி ஸாரண் மாவட்டத் தலைமையகமான சப்ராவிலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருபதாயிரம் மக்கள்தொகை கொண்ட மஷ்ரக்கில் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனையும் உள்ளது. இங்குள்ள சமூக சுகாதாரநல மையத்தில், பெரும் கூட்டத்தையும், அவர்கள் மிகுந்த துயரத்தில் இருப்பதையும் பார்த்தோம்.

அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் என்ன நடந்தது என்று அறிய முற்பட்டபோது, ​​அவருடன் இருந்த ஒருவர் விவரங்களை மறைக்கும் விதமாக,“ஒன்றும் ஆகவில்லை. இவரது கணவர் மரணச் செய்தியை தொடர்ச்சியாகக் கேட்டு கொஞ்சம் பதற்றமாக இருக்கிறார். சதர் மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்,” என்று சொன்னார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்

போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை

மஷ்ரக் காவல் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். ஆனால் சாராய விற்பனை பற்றி காவல்துறைக்கு தெரியாமல் இருந்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை அதனால்தான் மஷ்ரக்கின் காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் காவலாளியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனரோ என்று தோன்றுகிறது.

இந்த கள்ளச்சாராயம் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் பற்றி மேலும் அறிய சப்ராவின் சதர் மருத்துவமனையை அடைந்தோம். நகரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிர்வாகத்தின் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களின் இயக்கம் இங்கு தொடர்ந்து காணப்பட்டது.

சதர் மருத்துவமனையிலும், கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரின் கூட்டம் அலைமோதியது. ஆனால் மதுவிலக்கு அமலில் உள்ளதால் அனைவரும் இதுபற்றிப் பேசுவதை தவிர்க்க முயல்வது போல இருந்தது.

"இறந்த நிலையில் 15 பேர் கொண்டு வரப்பட்டனர். தற்போது, ​​9 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், 11 பேர் PMCH க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்."என்று மருத்துவமனையின் மருத்துவர் பங்கஜ் தெரிவித்தார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்

மரணமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை என்ன?

"செவ்வாய் இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. நேற்று முதல் இது தொடர்கிறது. சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. அவர்களின் நிலையும் அவ்வளவு நன்றாக இல்லை." என்று டாக்டர் பங்கஜ் பிபிசியிடம் கூறினார்.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களைக் காட்டிலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சப்ராவில் உள்ள பலர் கூறுகின்றனர். இறந்த தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவலைக்கூட பலர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பிகாரில் மது அருந்துவது சட்டவிரோதமானது .கூடவே இதுபோன்ற மதுபானங்களை அருந்துவது சமூக ரீதியாக ஏற்புடையதாகவும் கருதப்படுவதில்லை.

"இதுபோன்ற சம்பவங்கள் தங்கள் வீடுகளில் நடந்திருந்தால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் அதை எங்களிடம் தெரிவிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது தவிர குழுக்களை அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகிறோம். மேலும், 2 பேரை கைது செய்து, சந்தேகத்துக்கு இடமான பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்,” என்று இது குறித்து ஸாரண் எஸ்பி சந்தோஷ் குமார் தெரிவித்தார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்
படக்குறிப்பு, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

மதுவிலக்கு விவகாரத்தில் அரசியல்

ஸாரணின் மஷ்ரக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ள மாநிலத் தலைநகர் பாட்னா முதல் நாட்டின் தலைநகர் டெல்லி வரையில் இந்த சம்பவம் தொடர்பான அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

நிதிஷ் குமார் ஆட்சியின் முதல் 10 ஆண்டுகளில் (மது விலக்கிற்கு முன்) மது விற்பனை இருநூறு கோடியிலிருந்து நான்காயிரம் கோடியாக உயர்ந்தது என்று பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

அதே நேரத்தில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், "மதுவிலக்கு வெற்றியடைந்துள்ளது. இது மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மதுவிலக்குக்குப் பிறகு பலர் சிறந்த உணவை சாப்பிடுகின்றனர், மற்ற விஷயங்களுக்கு செலவழிக்கின்றனர்" என்று மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

பிகாரின் ஸாரண் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து குறைந்தது 26 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த பிகார் முதல்வர் நிதிஷ் குமார், "மது அருந்துபவர் நிச்சயம் இறப்பார், இதற்கான உதாரணம் நம் கண்முன்னே உள்ளது,” என்றார்.

மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிதிஷ் குமார், "கள்ளச்சாராயத்தால் மக்கள் இறக்கத்தான் செய்கிறார்கள். நாடு முழுவதும் இறக்கின்றனர். மதுவிலக்கு இல்லாதபோதும் இங்கு மக்கள் இறந்துகொண்டுதான் இருந்தனர்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”தடை செய்யப்பட்ட ஒன்று விற்கப்பட்டால் அதில் ஏதாவது கலப்படம் இருக்கத்தானே செய்யும் என்று மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மது அருந்துபவர் நிச்சயம் இறப்பார், இதற்கான உதாரணம் நம் கண்முன்னே உள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு துக்கம் தெரிவிக்கவேண்டும். மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

"சமூகத்தில் எவ்வளவு வேலை செய்தாலும் சிலர் குழப்பம் விளைவிக்கிறார்கள். குற்றச்செயல்களைத் தடுக்க ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. இருந்தாலும் கொலை செய்கிறார்கள் அல்லவா? என்ன செய்ய முடியும்… சிலர் குழப்பம் செய்கிறார்கள்,” என்று நிதீஷ் குமார் குறிப்பிட்டார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு;  பிகாரில் பரிதாபம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுஷீல்குமார் மோதி

"குடிப்பவர் இறப்பார்" என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் சுஷீல் குமார் மோதி, ’நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் மது அருந்துகிறார்கள், அவர்கள் அனைவரும் இறக்கவேண்டுமா’ என்றார்.

பிகாரில் சட்டவிரோத மது வணிகம் இணை பொருளாதாரமாக மாறியுள்ளது என்று சுஷீல் மோதி கூறினார். பிகாரில் மதுவிலக்கை அமல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜக மதுவிலக்கை ஆதரிக்கிறது. ஆனால் இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதன் தலைவர்கள் கோருகின்றனர் என்று பிகாரின் முன்னாள் துணை முதல்வர் கூறினார்.

பாஜக எம்பியும் பிகார் பாஜக தலைவருமான சஞ்சய் ஜெய்ஸ்வால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

"எனக்குக் கிடைத்த தகவலின்படி 50 பேர் இறந்துள்ளனர். மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் நிர்வாகம் மக்களை மிரட்டி புள்ளிவிவரங்களை மறைத்துள்ளது. நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த விஷயம் வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மக்களிடம் கூறப்பட்டுள்ளது,” என்று பிபிசிடம் பேசுகையில் மகாராஜ்கஞ்ச் எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் குற்றம்சாட்டினார்.

ஜனார்தன் சிங் சிக்ரிவாலின் தொகுதியில்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் கள்ள சாராயம் குடித்ததால் இறந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "கள்ளச்சாராயத்திற்கு எதிராக தேடுதல் வேட்டைகள் நடக்கின்றன. அரசுக்கு பொறுப்பு இருப்பதால்தான் செய்தியாாளர் சந்திப்பு நடத்தி புள்ளி விவரங்கள் அளிக்கப்படுகின்றன "என்றார்.

முன்னதாக புதன்கிழமையும் பிகார் சட்டப்பேரவையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பெரும் அமளி ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: