ஆஸ்திரேலியா: நச்சு கீரை சாப்பிட்டவர்களுக்கு சித்த பிரமையா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
- பதவி, பிபிசி நியூஸ், சிட்னி
- பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் நச்சுத் தன்மை வாய்ந்த கீரையை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் சுகவீனம் மற்றும் சித்த பிரமைக்கு ஆளான சம்பவம் அங்கு அவசர சுகாதார எச்சரிக்கையை விடுக்கத் தூண்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் காஸ்ட்கோவில் இருந்து 'ரிவியரா ஃபார்ம்ஸ்' பேபி கீரை சாப்பிட்ட ஒன்பது பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
சித்த பிரமை பிடித்தல், இதய துடிப்பு திடீரென அதிகரித்தல் மற்றும் பார்வை மங்குதல் உள்ளிட்ட அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயக்கம் ஏற்படுத்தக்கூடிய களையால் அந்த கீரை வகை மாசுபட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகவும் பிற பொருட்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் இந்த சம்பவம் தொடர்பாக 'ரிவியரா ஃபார்ம்ஸ்' தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ செளத் வேல்ஸ் சுகாதாரத்துறை, டிசம்பர் 16ஆம் தேதியுடன் காலாவதியாகும் இந்த வகை கீரையை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்றும் அவை தூக்கியெறியப்பட வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறது.
மேலும், கீரையை உண்டதும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை யாராவது எதிர்கொண்டிருந்தால் அவர்கள் மருத்துவ உதவியை நாடவேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உயிரிழப்பு ஏதுமில்லை: சுகாதாரத்துறை
"இதுவரை யாரும் இறக்கவில்லை. அதை நினைத்து நாங்கள் நிம்மதி அடைகிறோம். இந்த நிலையே தொடரும் என்று நம்புகிறோம். ஆனால் இந்த மக்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். குறிப்பிடத்தகுந்த மாயத்தோற்றங்கள், அங்கு இல்லாத விஷயங்களை அவர்கள் பார்க்கிறார்கள்" என்று மாநிலத்தின் நச்சு தகவல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டேரன் ராபர்ட்ஸ் 'சிட்னி மார்னிங் ஹெரால்ட்' நாளிதழிடம் கூறியுள்ளார்.
ரிவியரா ஃபார்ம்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் கடைகள் கீரையை விற்பனை அடுக்கில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த களையினால் வேறு எந்தப் பொருட்களும் பாதிக்கப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, எங்கள் அறிவுக்கு தெரிந்து சாத்தியமும் இல்லை’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிட்னி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ள நியூ செளத்வேல்ஸ் சுகாதாரத் துறை, பிற மாநிலங்களில் யாரேனும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனரா என விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























