You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக தொண்டர் தாழையூர் தங்கவேல் தற்கொலை: உடல் அருகே இந்தி எதிர்ப்பு வாசகம் இருந்ததாக தகவல், ஸ்டாலின் இரங்கல்
மேட்டூர் அருகே உள்ள தாழையூரில் 85 வயது திமுக தொண்டர் தங்கவேல் இந்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதை எதிர்த்து வாசகங்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த செய்தி இடியென வந்துள்ளதாக கூறி இரங்கல் தெரிவித்திருப்பதோடு, போராட்ட வடிவமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி பகுதியில் திமுகவின் ஒன்றிய விவசாய அணி பொறுப்பாளராக முன்பு இருந்தவர்.
இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்களும் உண்டு. இவர் திமுக தொடங்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இதற்காக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இன்று நவம்பர் 26ம் தேதி சனிக்கிழமை காலை தாழையூர் திமுக அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார் தங்கவேல் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது அவர் அருகே ஒரு வெள்ளைத் தாளில் இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. “மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம். தாய் மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு. இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கை பாதிக்கும். இந்தி ஒழிக இந்தி ஒழிக” என்று அந்த தாளில் எழுதப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் இரங்கல்
தங்கவேல் மரணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கவேல் மரணச் செய்தி அறிந்து வேதனையில் உழல்வதாக கூறியுள்ள முதல்வர், “இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம். ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம்.
இனி ஓர் உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் “மேலும், பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' என காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை” என கூறிய மு.க. ஸ்டாலின், தாழையூர் தங்கவேல் குடும்பத்துக்கும் திமுகவினருக்கும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு தங்கவேல் எழுதிய கடிதம்
உயிரிழப்பதற்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கவேல் கைப்பட எழுதியதாக கூறி ஒரு கடிதத்தை பத்திரிகையாளர்களிடம் படித்துக் காட்டினார் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி.
அதில் அவர், தாம் தமது இளமைப் பருவத்தில் திமுகவில் இணைந்தது முதல், கட்சியில் தமது பயணம், இந்தி எதிர்ப்பில் தமது செயல்பாடு உள்ளிட்டவை குறித்து விவரித்து எழுதியுள்ளார். அத்துடன் இந்தித் திணிப்பினால் தமிழ்நாட்டு படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற தம் அச்சத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அந்த கடித நகல் கீழே:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்