You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிஆர் பாலு vs எல்.முருகன் சர்ச்சை - நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
மக்களவையில் திமுக எம்பி டிஆர் பாலு பேசிய போது, அவரது பேச்சை குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என திமுக எம்பி டிஆர் பாலு பேசினார்.
கடந்த டிசம்பரில் மழை வெள்ளத்தால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு போதுமான வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை என கூறினார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேசினார். இதனால் கோபமடைந்த டி.ஆர். பாலு அவரை அமரும்படி கூறினார். இதில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே அமளி ஏற்பட்டது.
நீங்கள் இந்த பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் என டி.ஆர். பாலு ஆவேசமாக பேச, பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து டிஆர் பாலு தகாத வார்த்தையை சொல்லியிருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
எங்கள் அமைச்சரை தகுதியற்றவர் என சொல்லக்கூடாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "அவரை எப்படி தகுதியற்றவர் என சொன்னீர்கள்? திமுக அரசுதான் தகுதியற்ற அரசு. காங்கிரஸ் தகுதியற்ற கட்சி" என்றார். "நீங்கள் ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் எனக் கூறி ஒட்டுமொத்த பட்டியல் சாதியினரையும் அவமதித்து விட்டீர்கள்" என கூறினார்.
அவையில் டிஆர் பாலு பேச்சை எல்.முருகனின் சாதியோடு ஒப்பிட்டு பிரஹலாத் ஜோஷி பேசினார். டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக.வினர் முழக்கம் எழுப்பினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் எல்.முருகன், ஒரு தலித் அமைச்சரை அமைச்சராக பார்ப்பதில் திமுகவுக்கு விருப்பமில்லை. டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் உபயோகிக்ககூடாத வார்த்தையை உபயோகித்துவிட்டதாக தெரிவித்தார் எல்.முருகன்.
ஆனால், "தமிழ்நாட்டு நலனிற்கு எதிராக பேசினார். தமிழ்நாட்டிற்காக நிவாரணம் கேட்டு பேசும்போதெல்லாம் அவர் குறுக்கிட்டார். அதனால்தான் அவர் அமைச்சராக இருக்க தகுதியில்லை என கூறினோம்," என டிஆர் பாலு செய்தியாளர்களிடம் அவர் தரப்பு விளக்கம் அளித்தார்.
டிஆர் பாலு சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி அரசியல் செய்வதாக பாஜக மீது திமுக எம்பி ஆ.ராசா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முழு விவரம் காணொளியில்..
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)