You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெயில் 36°C ஆக இருந்தாலும் நம் உடல் அதைவிட அதிக வெப்பம் இருப்பதாக உணர்வது ஏன்?
நீங்கள் வெளியே செல்லும்போது வெப்பநிலை 40 டிகிரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், வானிலை செயலி 36 டிகிரி எனக் காட்டுகிறது. அதற்குக் கீழே ‘feels like 44’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? உண்மையான வெப்பநிலை எவ்வளவு?
36 டிகிரி என்பது காற்றின் வெப்பநிலை; இதைத்தான் வெப்பமானி அளவிடுகிறது.
ஆனால், “உண்மையில் உணரப்படும் வெப்பநிலை” என்பது உங்கள் உடல் எவ்வளவு சூடாக உணர்கிறது என்பதைப் பொறுத்தது.
தெற்காசியாவில், இந்த இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கலாம்.
தற்போது, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தின் பல பகுதிகளில் நிலவும் வெப்ப அலைகளின்போது, வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியஸையும், சில நேரங்களில் அதைத் தாண்டியும் செல்கிறது. ஆனால், இதில் வெப்பம் மட்டுமல்ல, காற்றின் ஈரப்பதமும் பங்கு வகிக்கிறது.
‘உண்மையில் உணரப்படும் வெப்பநிலை’ என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வெப்பமானி காட்டும் அளவை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், உங்கள் உடல் வானிலையை உண்மையில் எவ்வாறு உணர்கிறது என்பதைக் காட்டும் வகையில் இது கணக்கிடப்படுகிறது.
அதீத வெப்பத்தில் வியர்வை வெளியேறி, உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வை ஆவியாகும்போது வெப்பத்தை வெளியேற்றி, உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது.
ஆனால், காற்றில் ஏற்கெனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை எளிதில் ஆவியாகாது. இதனால் உடல் சரியாகக் குளிர்ச்சியடைய முடியாது.
அத்தகைய சூழலில்தான், 36 டிகிரி வெப்பநிலை, 44 டிகிரி போலவோ அல்லது அதற்கும் மேலானதாகவோ உணரப்படும்.
வெப்பமும் ஈரப்பதமும் கலந்த இந்த நிலையை விஞ்ஞானிகள் ‘வெட்-பல்ப் வெப்பநிலை’ என்று விவரிக்கின்றனர். அதிக அளவிலான வெப்பத்தில், உடல் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்ள சிரமப்படக்கூடும்.
அதனால்தான், குறிப்பாகக் கடற்கரை நகரங்களிலோ அல்லது பருவமழைக்கு முன்னதாகவோ நிலவும் ஈரப்பதமான வெப்பம், பிற இடங்களில் நிலவும் வறண்ட வெப்பத்தை விடவும் தீவிரமானதாக உணரப்படுகிறது.
இதோடு நெருக்கடியான நகரங்களும், வெப்பத்தை உள்வாங்கும் கான்கிரீட் கட்டடங்களும், வெப்பம் தணியாத இரவுகளும் சேரும்போது, நிலைமை தீவிரமடைகிறது.
முக்கியமாக, ‘உணரப்படும் வெப்பநிலை’ என்பதற்கான அளவீடு, நிழலில் லேசான காற்று வீசும் சூழலிலுள்ள சராசரி நபரை அடிப்படையாகக் கொண்டது. எனவே, நேரடி சூரிய ஒளி அல்லது உடல் உழைப்பு போன்ற நிஜ சூழல்களில், குறிப்பாக தெற்காசியாவில், இருப்பவர்கள் இதைவிட மிக அதிக வெப்பத்தை உணரலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு