காணொளி: அமெரிக்கா - இரான் இடையே இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்

காணொளி: அமெரிக்கா - இரான் இடையே இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

மத்திய கிழக்கு பகுதியில் இரண்டாவது நாளாக அமெரிக்கா மற்றும் இரான் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் , கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் சோதனைக்குள்ளாகியுள்ளது.

இரானை மேலும் பலம் கொண்டு தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மறுபுறம், எவ்வித அழுத்தத்திற்கோ அச்சுறுத்தலுக்கோ எதிராக இரான் திடமாக இருக்கும் என இரானிய அதிபர் மசூத் பெஷஸ்கியான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க கடற்படை ஓமான் கடற்கரை அருகில் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

ஹோர்மூஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றை திங்களன்று இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம் தெரிவித்தது.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அமெரிக்க தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

இருநாடுகளின் பரஸ்பர தாக்குதல் இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

இரண்டாம் நாள் தாக்குதலுக்கு முன்பாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரானை நேற்று வலுவாக தாக்கினோம். இன்று மேலும் வலுவாக தாக்குவோம் என அவர் கூறினார்.

தெற்கு இரானில் உள்ள ராணுவ கண்காணிப்பு மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து, "தற்காப்புத் தாக்குதல்கள்" அடங்கிய ஒரு கட்ட நடவடிக்கையை நிறைவு செய்துள்ளதாக சென்ட்காம் தெரிவித்தது.

இதற்குப் பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக இரான் கூறியுள்ளது.

மேலும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஜோர்டானில் உள்ள அமெரிக்க கட்டளை மையத்தை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதாக இரானின் அரச ஊடகங்கள் தெரிவித்தன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் இரானின் தாக்குதலை தங்களின் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளது.

இதேபோல், குவைத் ராணுவம் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் "எதிர்மறையான வான்வழி இலக்குகளை" தடுத்ததாக கூறியுள்ளது. இரானின் இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து தனது வான்வழியை தற்காலிகமாக மூடியதாகவும் குவைத் அறிவித்துள்ளது.

இந்த புதிய மோதலில் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கூறியுள்ளதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இந்த தக்குதலை உடனடியான பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

முன்னதாக, ஹோர்மூஸ் நீரிணை "அனைத்து வகையான கப்பல் போக்குவரத்திற்கும் முற்றிலும் மூடப்பட்டுவிட்டது" என்று இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.ஆனால் "வணிகக் கப்பல்கள் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டு இருப்பதாக" சென்ட்காம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இரான் தலைவர்கள் "ஒரு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிக்க

அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள்" என்று டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியிருந்தார்.

அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால் இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இரான் "எந்தவொரு அழுத்தத்திற்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கும்" என இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். முன்னதாக, இரான் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா "முரணான செய்திகளை அனுப்பி, அதன் மூலம் ராஜீய ரீதியிலான செயல்முறைகளைச் சீர்குலைக்கிறது" என்று குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் ஓமன் கடற்கரைக்கு அருகே , 'செடெபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதாக

கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது "மிகவும் துயரமான சம்பவம்" என்றும் , ஈடு செய்ய முடியாத இழப்பு" என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம்,

கப்பல் பணியாளர்கள் அமெரிக்கப் படையினரின் உத்தரவுகளை "மீண்டும் மீண்டும் பின்பற்றத் தவறியதால்", கப்பலின் இயந்திர அறையை குறிவைத்து ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜேசன் மீக்ஸ்-ஐ அழைத்து, "கடுமையான எதிர்ப்பை" பதிவு செய்ததாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு